பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 5

ஈஷா விவசாயக்குழு தாராபுரம் வட்டத்தில் கணபதிபாளையத்தில் உள்ள இயற்கை விவசாயி திருமதி. தேவி அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கும் இவர் விவசாயத்தை முழுநேரத் தொழிலாக செய்து வருகிறார்.

இயற்கை விவசாயத்தை கையிலெடுக்கும் பெண்மணி... தாராபுரம் பண்ணை விசிட்!, Iyarkai vivasayathai kaiyiledukkum penmani dharapuram pannai visit

பாலேக்கர் வழங்கிய நம்பிக்கை ஒளி

வேதி விவசாயம் செய்யும்போது 70 நாள் பயிரான வெங்காயத்திற்கு 13 முறை மருந்தடித்தேன். இவ்வளவு மருந்தடித்த வெங்காயத்தை விற்கிறோமே, இதை உண்பவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுமோ? என்ற வருத்தம் மனதை உறுத்தியது, இதற்கும் பாலேக்கர் வகுப்பில் தீர்வு கிடைத்தது.

“வேதி விவசாயம் செய்யும்போது பெரும்பாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருந்தது, விவசாயத்தில் எந்த லாபமும் இல்லை! மேலும், மற்றவகையில் வரும் வருமானத்தையும் விவசாயத்தில் போடவேண்டியிருந்தது. இத்தகைய நிலையில் விவசாயத்தை செய்யவேண்டுமா? விவசாயத்தை விட்டுவிடலாமா? என்ற பல கேள்விகள் எங்களுக்கு ஏற்பட்டது.

அப்போதுதான் ஈஷா நடத்திய ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய வகுப்பில் கலந்து கொண்டோம். விவசாயத்தில் நல்வழி கிடைக்காதா? என மருண்டு இருளில் தவித்த எங்களுக்கு பாலேக்கர்ஜி அவர்கள் ஒளிவிளக்காக நல்வழி காட்டினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அம்மணி சொல்றது ரொம்ப கரெக்ட்டுங்கண்ணா... இந்த கள்ளிப்பட்டி கலைவாணி பாலேக்கர் ஐயா வகுப்புல கலந்துகிட்ட பொறவுதான் ஒரு தெளிவு கெடச்சதாக்கும்! திருப்பூர் பக்கத்தாப்புல வகுப்பு நடந்துச்சுங்க! ஐயோ சாமி... நூத்துக்கணக்கான பேரு, ரொம்ப ஆர்வமா கலந்துகிட்டாங்கோ! ஆனா... இன்னும் நெறைய பேருக்கு இதப் பத்தி நாம எடுத்துச் சொல்லோணுமுங்க. சரி நம்ம அம்மணி தொடர்ந்தாப்ல என்ன சொல்றாப்டின்னு கேப்போம் வாங்க!

பூச்சி மருந்துக்கு விடைகொடுத்தேன்

“வேதி விவசாயம் செய்யும்போது 70 நாள் பயிரான வெங்காயத்திற்கு 13 முறை மருந்தடித்தேன். இவ்வளவு மருந்தடித்த வெங்காயத்தை விற்கிறோமே, இதை உண்பவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுமோ? என்ற வருத்தம் மனதை உறுத்தியது, இதற்கும் பாலேக்கர் வகுப்பில் தீர்வு கிடைத்தது.” எனக்கூறும் திருமதி தேவி,
வகுப்பில் கலந்துகொண்டபிறகு முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டதாவும், பேருந்து நடத்துனர் பணியில் இருக்கும் தனது கணவரும் இயற்கை விவசாயப் பணிகளில் உதவி வருவதாகவும் கூறுகிறார்.

நிலக்கடலை 2 ஏக்கரில் பயிரிட்டு அறுவடை செய்திருக்கிறார்; அறுவடை செய்தபின் எந்த உழவும் செய்யாமல், கடலை பிடுங்கிய குழியில் அப்படியே உளுந்து மற்றும் கேழ்வரகு போன்றவற்றைத் தூவிவிட்டு நீர் பாய்ச்சியதில், தப்புச்செடியாக கடலையும் நிறைய முளைத்தது அதையும் அப்படியே வளர விட்டதாகவும், தற்போது உளுந்து அறுவடை நிலையில் உள்ளதையும், நிலக்கடலையும் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளதையும் காண்பித்தார்.

அட நம்ம ஊர்க்காரங்க அல்லாருமே உழவடிச்சு முடிச்சுப்போட்ட பொறவுதான் அடுத்தாப்ல விவசாயத்த ஆரம்பிப்பாங்கோ... ஆனா இதென்ன புது சங்கதியா இருக்குதேனு ஆச்சரியப்பட்டு நீங்க பாக்கலாமுங்க! ஆனா... இயற்கை விவசாயத்துல இதுமாதிரி புதுப்புது உத்திய கையாள்றதுலதாங்க வெற்றியே இருக்குது! போகப்போக நீங்களும் புரிஞ்சுப்பீங்க பாருங்கோ!

இயற்கை பூச்சி கட்டுப்பாட்டு

ஆங்காங்கே வளர்ந்துள்ள கேழ்வரகு மற்றும் கம்பை உண்ண நிறைய பறவைகள் வருவதால் பூச்சி, புழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று திருமதி. தேவி கூறுகிறார்.

நாட்டுரக வெங்காயத்தை அரை ஏக்கரில் பயிரிட்டு அறுவடை செய்திருக்கும் அவர், வெங்காயத்தில் பச்சை புழுதாக்குதல் இருந்ததாகவும், பத்திலை கஷாயத்தால் கட்டுப்பட்டது என்றும், 3 டன் மகசூல் கிடைத்ததாகவும் கூறுகிறார்.

நாட்டுரக சின்னவெங்காயம் வேதி விவசாயத்தில் பயிர் செய்யும்போது 15 நாட்களில் அழுகிவிடும், இயற்கை முறையில் விளைவித்ததால் 4 மாதங்கள் வரையில் அழுகாமல் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

முருங்கையில் கரும்பு ரகத்தை 1 ஏக்கரில் பயிர் செய்திருக்கிறார், இது நாட்டு ரகத்தை போன்ற, நல்ல சுவையுடைய இரண்டரை அடி நீளமான காய்களை உடையது என்றும், 15 வருடங்களுக்கு தொடர்ந்து காய்க்கக்கூடியது என்றும் தெரிவித்தார்.

காட்டு வெள்ளாமையையும் வயித்துப் புள்ளையையும் எப்படிங்கோ மறைக்க முடியும்? அதுவும் பறவைக பூச்சிக கிட்டருந்து வெள்ளாமைய மறைக்க முடியாதுங்க! ஆனா... பூச்சி மருந்து அடிக்காம பறவைகள வர வச்சோமுன்னா புழு-பூச்சியெல்லாம் தான குறையுமுங்க! அதைய நம்ம தேவி அக்கா சரியா புரிஞ்சு வச்சுருக்காப்டி!

நீர் தேவை குறைவு

இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கியபின் தண்ணீர் செலவு குறைந்துள்ளது என்றும், பயிர்களுக்கு தண்ணீர் விட இரண்டு நாட்கள் தாமதமானாலும் செடிகள் வாடுவதில்லை என்றும் தெரிவிக்கும் திருமதி.தேவி, 2 ஏக்கர் நிலத்தில் ஐந்து அடுக்கு முறையில் தென்னை அல்லது மா மாதிரியை செய்யவிருப்பதாகவும் கூறுகிறார்.

“எங்கள் பண்ணையில் இயற்கை விவசாயம் செய்வதை பலரும் வந்து பார்த்து, ஆர்வமாக கேட்டுத்தெரிந்து கொள்கிறார்கள். இயற்கை விவசாயம் எங்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்த திருமதி. தேவி அவர்கள், ஈஷா விவசாயக் குழுவினருக்கு நன்றி கூறி விடைகொடுத்தார். (தொடர்புக்கு: 8925330299)