ஒரே ஒரு இயற்கைச் சீற்றம் - வாழ்வாதாரங்களை இழந்து பரிதவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள். இந்த இயற்கை சீற்றத்தை நம்மால் தடுக்க முடியுமா? முடியாவிட்டால் இதற்கான தீர்வு என்ன? ஆயிரமாயிரம் மக்கள் இறந்து போவதில் நியாயம் தான் என்ன? இதோ இந்தக் கட்டுரையில் விளக்குகிறார் சத்குரு.

சத்குரு:

அமெரிக்க நாட்டில் வகுப்பு எடுக்கப் போயிருந்தபோது, அங்கு ஒரு பெரும் புயல் கடந்து போனதாகச் செய்திகளில் சொன்னார்கள். எத்தனை பேர் மரணம் என்று கேட்டேன். "பல மரங்கள் வீழ்ந்தன. கட்டடங்கள் சிதைந்தன. ஆனால், உயிருக்குச் சேதம் இல்லை" என்று பதில் வந்தது.

பொறுப்பில்லாமல் ஜனத்தொகை பெருகி, பூமியை ஆக்கிரமித்துக் கொண்டதால், ஒவ்வொரு சீற்றத்துக்கும் இறந்தவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது.

இந்தியாவில், குஜராத் பூகம்பத்திலும் தமிழ்நாட்டு சுனாமியிலும் இறந்தவர்களின் மாபெரும் எண்ணிக்கை என் நினைவுக்கு வந்தது. எத்தனையோ ஆபத்துகளை விஞ்ஞானத்தால் முன்கூட்டித் தெரிந்து கொள்ள வாய்ப்பு வந்த பிறகும், அது எல்லா சந்தர்ப்பங்களிலும் சரியானபடி பயன்படுத்தப்படுவதில்லை என்பதை இது நினைவூட்டியது.

என் சிறு வயதிலிருந்தே பூகம்பம், சுனாமி, எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்களைப் பேரழிவுகள் என்று முத்திரையிடுவதைக் கண்டு வந்திருக்கிறேன்.

பூமித்தாய் சோம்பல் முறித்தால் பூகம்பம், பெருமூச்சுவிட்டால் எரிமலை. இப்படி இயற்கையின் சில மாற்றங்கள் சீற்றங்களாக வெளிப்படுகின்றன. ஆயிரம் பேர் இறந்தால், அதை செய்தித்தாள்கள் பேரழிவு என்று குறிப்பிடுகின்றன. உண்மையில், அவை பேரழிவுகள் அல்ல.

சொல்லப்போனால், ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பூமி சந்தித்த சீற்றங்களைவிட இந்தச் சீற்றங்கள் குறைவுதான். இயற்கையைப் பொறுத்தவரை அதன் போக்கில் சில சுழற்சிகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பொறுப்பில்லாமல் ஜனத்தொகை பெருகி, பூமியை ஆக்கிரமித்துக் கொண்டதால், ஒவ்வொரு சீற்றத்துக்கும் இறந்தவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. யாரோ பிறக்கிறார்கள். யாரோ இறக்கிறார்கள். அதெல்லாம் பேரழிவா? அதைப்போல்தான் இயற்கையின் இந்த நிகழ்வுகளும்.

இப்படி ஒரு நிகழ்வு நடந்துவிட்டால், என்ன செய்ய வேண்டும்? எந்த இழப்பையும் நம் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

இயந்திர வாழ்க்கையில் சிக்கிப் போனதால் உங்களுள் மரத்துப்போய்விட்ட மனிதத் தன்மை மீண்டும் துளிர்த்து எழக் கிடைத்த சந்தர்ப்பம் என்று அதை நினையுங்கள்.

பண்டைய ரோமில், சிபில்ஸ் என்ற ஆரூடக் குழுவினர் இருந்தனர். ரோம சாம்ராஜ்யத்தின் எதிர்காலம் பற்றி கணித்து 9 புத்தகங்கள் எழுதி அரண்மனைக்கு எடுத்து வந்தனர். அதற்குக் கட்டணமாக 100 பொற்காசுகள் கேட்டனர்.

மன்னன் திபேரியஸ் ஏளனமாகச் சிரித்து 30 பொற்காசுகளுக்கு மேல் தர முடியாது என்றான். சிபில்ஸ் 3 புத்தகங்களை நெருப்பில் இட்டுப் பொசுக்கினர். "இந்த 6 புத்தகங்களின் விலையும் 100 பொற்காசுகளே" என்றனர். திபேரியஸ் அதற்கும் மறுத்தான். மேலும் 3 புத்தகங்களை எரித்துவிட்டு "விலை மாறாது" என்றனர்.

இப்போது திபேரியஸுக்கு அப்படி என்னதான் எழுதப்பட்டிருக்கிறது என்று பார்க்க ஆர்வம் வந்தது. கேட்ட தொகையைக் கொடுத்து வாங்கினான். ஆனால், அவனால் ரோம சாம்ராஜ்யத்தின் எதிர்காலம் பற்றி ஒரு பகுதியைத்தான் தெரிந்து கொள்ள முடிந்தது. வாய்ப்பு கிடைக்கையில் அதனுடன் பேரம் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது.

இயற்கையின் சீற்றம் கூட உங்கள் மனிதம் உயிரோடு இருக்கிறதா என்று பரிசோதிக்க வைக்கப்பட்ட பரீட்சை என்றே நினையுங்கள். தங்கள் உடைமைகளை, உறவுகளை இழந்தவர்கள் துன்பத்தில் தள்ளப்பட்டிருப்பார்கள். அவர்கள் மத்தியில் போய் அமர்ந்து நாமும் துன்பத்தில் சிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

ஆனால், நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனித்து சிகிச்சை தர வேண்டுமானால், அது ஆரோக்கியமானவர்களால் தானே முடியும்? இழந்து தவிப்பவர்களை அந்தத் துக்கத்திலிருந்து மீட்க வேண்டுமானால் ஆனந்தமாக இருப்பவர்களால் தானே முடியும்?

அவர்களுக்கு ஆனந்தம் தருவது என்றால், உங்கள் ஆனந்தத்தை விட்டுத்தருவது என்றா அர்த்தம்?. / ஆனால், பிறருக்கு ஆனந்தத்தைத் தருவதற்காக, நம்முடைய ஆனந்தத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்று அர்த்தமில்லை.

அன்பாக இருப்பது ஆனந்தம். கருணையுடன் இருப்பது ஆனந்தம். அழுபவனுக்கு ஆறுதல் சொல்வது ஆனந்தம். பரிதவிப்பவர்களைப் பரிவுடன் அணைத்துக் கொள்வது ஆனந்தம். இழப்பைச் சந்தித்தவர்களுக்கு ஆதரவாக இருப்பது ஆனந்தம். இயலாதிருப்பவனுக்கு இதயபூர்வமாகச் சேவை செய்வது ஆனந்தம்.

சூழ்நிலைக்குத் தகுந்தவாறு, எந்தப் பாதிப்பும் இல்லாமல் தன்னைப் பதப்படுத்திக் கொள்வதுதான் உண்மையான ஆனந்தம். தினம்தோறும் இப்படி ஆனந்தமாக இருக்கத் தெரியாத லட்சக்கணக்கான முகங்களைக் காண்கிறேனே, அதைத்தான் பேரழிவாகக் கருதுகிறேன். இறப்பு, பேரழிவு அல்ல. வாழும் மனிதனின் வலியும், வேதனையும்தான் பேரழிவு.

என்னிடம் வரும் மனிதர்கள் தங்கள் வேதனைகளைப் பற்றி சொல்கையில், எவ்வளவு விதமான வேதனைகளை மனிதன் தானாகத் தயாரித்துக் கொண்டுவிட்டான் என்பதை என்னால் நம்பவே முடிவதில்லை.

இந்தப் பூமியில் பிறக்கும் தருணத்திலேயே நம் மீது மரணத் தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டது அல்லவா? இருக்கும் சொற்ப வருடங்களை ஆனந்தமாக்கிக் கொள்ளத் தெரியாமல், அந்த குறைவான நேரத்தைக்கூட வேதனையாக்கிக் கொள்வதைவிட பேரழிவு வேறு என்ன இருக்க முடியும்?

வாழ்வின் அடிப்படை என்ன, அதன் உண்மையான உச்சம் என்ன என்பதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாத மனிதனின் அறியாமைதான் பேரழிவு. அதற்கு ஒரே ஒரு தீர்வுதான்... தன்னிலை உணர்தல்.

நீங்கள் உங்களை உணரும் இடத்தை எங்கோ இமயத்துக் குகைகளில் போய்த் தேடினால் கிடைத்துவிடாது. அந்த இடம் உங்களுக்குள் இருக்கிறது.

வாழ்வைச் சரியாகக் கையாளத் தெரிய வேண்டுமானால், உங்களுக்குள் இருக்கும் உயிரைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். முழுமையான விழிப்புணர்வுதான் அதற்கு உங்களைத் தயார்ப்படுத்த முடியும். ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இயங்கினால், அதற்குப் பிறகு பூமியில் எதுவுமே பேரழிவாக இராது!