அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் - சில எளிய குறிப்புகள் - பகுதி 3

சூப், ஜூஸ் போன்ற திரவ உணவுளை எடுத்துக் கொண்டாலும், அரிசி போன்ற திட உணவுகளை உண்டால்தான் பலருக்கும் சாப்பிட்ட உணர்வு வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள், ஜங்க் ஃபுட் எனச் சொல்லப்படும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். ஆரோக்கியமான திட உணவுகள் என்னென்ன என்பதை நினைவூட்டுகிறது இந்த வார பதிவு!

தானியங்கள்

உலகமெங்கும் பெரும்பாலும், தானியங்கள்தான் முக்கிய உணவு வகைகளாக உள்ளன. மற்ற உணவு வகைகளெல்லாம் அவற்றுக்குத் துணை உணவுகளாகவே உள்ளன. தானியங்களில் புரதம், கொழுப்பு, மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுச் சத்து போன்ற உடலுக்குத் தேவையான அத்தனை சரிவிகித ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
  • ஆரோக்கியமாக இருக்கவும், நோய்கள், பிறவிக் குறைபாடுகளைத் தடுக்கவும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்த கேழ்வரகு, கம்பு, சிவப்பரிசி, கோதுமை போன்ற முழு தானியங்களை உண்ணுங்கள்.
  • பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்கு பதிலாக கைகுத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம். கைக்குத்தல் அரிசியில் மாவுச் சத்தும், வைட்டமின் ‘பி’ சத்தும் அடங்கியுள்ளன.
  • முழு தானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட அல்லது முழு தானியங்கள் கலந்து தயாரிக்கப்பட்ட கஞ்சியை ஒரு நாளைக்கு ஒரு முறை அருந்துவது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும்.
  • ரசாயனங்கள் சேர்ந்துள்ள வெள்ளை சர்க்கரையை கஞ்சியில் சேர்ப்பதற்கு பதிலாக, கருப்பட்டியோ அல்லது தேனோ சேர்த்துக் கொள்ளலாம்.

இயற்கையான துணை உணவுகள்:

தானியங்களுக்கு அடுத்தபடியாக, மிகவும் ஆரோக்கியமான சரிவிகித உணவாக பயறு வகைகள் திகழ்கின்றன. ஏனென்றால் இவற்றில் புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் பொதுவாக அதிகளவில் இருக்கின்றன. மேலும் கால்சியம் மற்றும் மற்ற தாதுச் சத்துக்களும் அதிகளவில் உள்ளன.

  • கடலை, பயறு வகைகள் போன்றவற்றை முளைவிடச் செய்து சாப்பிடலாம். முளைவிட்ட தானியங்களை முடிந்தவரை பச்சையாக உண்பதே சிறந்தது அல்லது சமைத்தும் சாப்பிடலாம்.
  • முளை விடும்போது அது 1 செ.மீ.அளவிற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும், கைப்பிடி அளவு ஊறவைத்த (6-8 மணி நேரம் ஊறியிருக்க வேண்டும்) நிலக்கடலைகளை சாப்பிடுவது நல்லது. அதில் 'பைட்டோ நியூட்ரியன்ஸ்' எனப்படும் 30 வகையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

காய்கறிகள்:

தினசரி தேவையான அளவுக்குக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமானது. எப்போதும் புத்துயிருடன் உள்ள காய்கறிகளையே உணவில் சேருங்கள். உங்கள் உணவு முறையில் பச்சைக் காய்கறி சாலட்டையும் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ளுங்கள். கேரட், பீட்ரூட் போன்ற பச்சைக் காய்கறிகளை உண்பது புத்துணர்ச்சி அளிக்கும். அவை மண்ணிலிருந்து பெற்ற ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வழங்கும்.

  • பச்சைக் காய்கறிகளும், கீரைகளும் நார்ச்சத்து மிக்கவை. அவற்றில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
  • இவற்றை சேர்த்துக் கொள்வதால் இரத்தம் சுத்தமாவதுடன், அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.
  • ஒவ்வொரு நாளும் கீரையை சாலட் உடன் சேர்த்தோ, பொரியலாகவோ அல்லது சட்னியாகவோ செய்து உண்ணலாம்.
  • எளிதில் கிடைக்கக் கூடிய, விலை மலிவான, ஆரோக்கியமான காய்கறிகளான பூசணிக்காய், முருங்கைக்காய், கேரட், வெள்ளரிக்காய், புடலங்காய், வாழைத் தண்டு, வெண்டைக்காய், பச்சைப் பட்டாணி, பாகற்காய் இவற்றை போதுமான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பழங்கள்:

பழங்கள் மிக எளிதாக ஜீரணமாகக் கூடியவை. அந்தந்த பருவத்துக்கேற்ப கிடைக்கும் பழங்களை தவறாமல் உண்ணுங்கள். உங்கள் உள்ளூர் பகுதிகளில், அவ்வப்போது கிடைக்கும் பழங்களை உண்ணுவதே சிறந்தது. சமைத்த பழங்களை உண்ணாதீர்கள்.

சுலபமாகக் கிடைக்கக் கூடிய உள்ளூர் பழ வகைகளான பப்பாளி, வாழைப்பழம், தர்பூசணி, மாம்பழம், மாதுளம் பழம், சப்போட்டா மற்றும் கொய்யாப் பழம் போன்றவை ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை. உலர் பழங்களும் மிக அதிக ஊட்டச்சத்து உடையவை.

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் தொடரின் பிற பதிவுகள்


அடுத்த வாரம்...

எப்படி சாப்பிட வேண்டும்? சாப்பிடும் முன்னும் சாப்பிட்ட பின்னும் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? - அடுத்த வாரம் குறிப்புகள் காத்திருக்கின்றன!