சத்குரு:

சக்ரவர்த்தி அக்பர் ஒருநாள் காட்டுக்கு தனியாக வேட்டையாடச் சென்றார். அவர் ஐந்து வேளையும் தொழுகை செய்வார். சூரியன் மறைந்து கொண்டிருந்த நேரத்தில், தொழுகைக்கு நேரமாகிவிட்டதால், காட்டிலேயே தொழுகை செய்ய உட்கார்ந்தார். அப்போது ஒரு மரம் வெட்டியின் மனைவி, காலையில் காட்டுக்குள் போன கணவன், இருள் சூழ ஆரம்பித்தும், இன்னும் திரும்பி வராததைக் கண்டு கணவனைத் தேடி காட்டுக்குள் பதட்டத்துடன் நடந்தாள்.

இந்த பதட்டத்தில், தொழுகையில் அக்பர் இருப்பதைக் கூட கவனிக்காமல் அவர் மேல் தடுக்கி விழுந்தாள். அப்படியும் அவள் தன் போக்கில் மேலே செல்லத் துவங்கினாள். அக்பருக்கு கடும் கோபம் வந்துவிட்டது. தொழுகையில் இருந்ததால் அமைதியாக இருந்துவிட்டார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பெண்ணும், அவளது கணவனும் கைகளைக் கோர்த்துக் கொண்டு சந்தோஷமாக நடுக்காட்டிலிருந்து திரும்பி வந்தனர். அப்போது திடீரென தங்களுக்கு முன்னால் சக்ரவர்த்தி நிற்பதைக் கண்டு திகைத்துவிட்டனர். அப்போது அக்பர் அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘என்ன தைரியம், நான் தொழுகையில் இருந்தபோது, என் மீது தடுக்கி விழுந்தாய். அப்படியும் என்னை ஏதோ கல் என்று நினைத்துக் கொண்டு உன் போக்கில் சென்று கொண்டிருந்தாயே? உனக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும்‘ என்று கர்ஜித்தார். அதற்கு அந்தப் பெண் கேட்டாள், ‘என் உயிருக்கு உயிரான கணவரைத் தேடுவதிலேயே என் மனம் மூழ்கியிருந்தது. உண்மையிலேயே நான் உங்களைப் பார்க்கவில்லை, கவனிக்கவில்லை. ஆனால் நீங்கள் என் கணவரை விட மிக உன்னதமான அந்தக் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்போது, என்னை எப்படி கவனித்தீர்கள்? அப்படியானால் நீங்கள் எந்தமாதிரியான பிரார்த்தனை செய்து கொண்டிருந்தீர்கள்?’

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.