'ஃபாத்திமா பாபு - தன் செய்தி வாசிப்பாலும், நடிப்பாலும் தமிழக மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர். திரையில் நம் கண் முன் பளிச்சிடும் சிரிப்புடன் தெரிபவர், திரைக்குப் பின்னால், தன் சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தார், பிறகு ஈஷா யோகா வகுப்பு செய்து எப்படி இருக்கிறார் என்பதை இக்கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஃபாத்திமா பாபு:

என் ஆதர்ஷ குரு ஷோபனா ரவிதான் பல வருடங்கள் முன்பே என்னிடம் யோகா பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். அப்போதெல்லாம் யோகா என்றால் வெறும் உடற்பயிற்சி மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இருந்தாலும் எந்த ஒரு வகுப்பிலும் என்னால் சேரமுடியவில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து கடந்த ஜுலையில்தான் ஈஷா யோகா வகுப்பில் சேர்ந்தேன். ஏற்கனவே சத்குருவின் எழுத்துக்களைப் படித்து அவரின் தீவிர ரசிகையாக இருந்தேன். ஈஷா யோகா வகுப்பில் சேர்ந்த பிறகே சத்குருதான் ஈஷா யோகா வகுப்புகளை உருவாக்கியவர் என்பது தெரிந்து மேலும் மகிழ்ச்சி அடைந்தேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா வகுப்பு முடிந்து 2, 3 வாரம் கழித்து, நான் எதுவும் சொல்லாமலே, என்னை ஏற்கெனவே தெரிந்த ஓரிருவர், ‘என்ன, யோகா செய்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதைக் கேட்டபோது எனக்கே மிகவும் நன்றாக இருந்தது. தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போதுகூட மிகவும் மென்மையாகப் படிக்க ஆரம்பித்தேன். ஏன் இப்படி என்று தொலைக்காட்சியில் உள்ளவர்கள்கூட கேட்டார்கள். ஆமாம், இனிமேல் இப்படித்தான் படிக்கப் போகிறேன் என்று சொல்லி சில மாதங்கள் அப்படித்தான் படித்தேன்.

யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். ஷூட்டிங் நடக்கும் போதுகூட நேரம் கேட்டு பயிற்சிகள் செய்கிறேன். முன்பெல்லாம் சிறிய விஷயத்திற்குக்கூட அதிகமாகக் கோபப்படுவேன். ஆனால் இப்போது கோபத்திலிருந்து முழுமையாக வெளிவர முடிகிறது. யாராவது தேவையில்லாமல் பேசும்போது அதற்குப் பதில் கொடுக்கத் தேவையில்லை, அதை வெறும் சப்தமாக நினைத்து ஒதுக்கி விடுங்கள் என்று சத்குரு சொன்னதும் நினைவுக்கு வரும்.

மக்களிடம் எப்படி நேசமாக இருக்க முடியும் என்பதை மண்டையில் அடித்து உணர வைத்த மாதிரி, நமக்கு முக்கியமான ஏதோ ஒன்று தொலைந்து திரும்பக் கிடைத்ததுபோல ஒரு பிரவாகமான உணர்வு.

உயர்நிலை வகுப்பிற்காக யோக மையம் சென்றபோது, அன்று சத்குருவின் பிறந்தநாள் என்று அறிந்தேன். அது ஒரு நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது. யோக மையத்தில் ஒவ்வொன்றிலும் கலைநயம் பார்த்தேன். கோவிலில் ஒரு விளக்கு கொடுத்தால் கூட அதில் சில மலர்கள், வில்வ இலை என்று போட்டுக் கொடுக்கிறார்கள். அப்புறம் தூண், சட்டம் என்று எதுவுமே இல்லாமல் தியானலிங்கம், தீர்த்தகுண்டம் மற்றும் அதிலுள்ள ஓவியங்கள்... அப்புறம்தான் தெரிந்தது, காட்டேஜில் உள்ள கதவுக் கைப்பிடி உள்ளிட்ட ஒவ்வொன்றும் சத்குரு யோசிப்பதுதான் என்று. வாழ்க்கையில் எவ்வளவு ரசனை இருந்தால் இப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்வார் என வியந்தேன்.

யோக மையத்தில் அந்த உயர்நிலை வகுப்பில் கலந்து கொண்டபோது...... ஓ மை காட்! என்ன அனுபவம் அது! மக்களிடம் எப்படி நேசமாக இருக்க முடியும் என்பதை மண்டையில் அடித்து உணர வைத்த மாதிரி, நமக்கு முக்கியமான ஏதோ ஒன்று தொலைந்து திரும்பக் கிடைத்ததுபோல ஒரு பிரவாகமான உணர்வு. அதன்பிறகு எந்த வேலையையும் ஈடுபாட்டோடு செய்ய ஆரம்பித்தேன். முக்கியமாக குடும்பத்தில் இருப்பவர்களுடன் மிகவும் நெருக்கமாக, பாசமாக இருக்க முடிகிறது. அந்த வகுப்பிற்குப் பிறகு என் வாழ்க்கையே மாறிப்போனது போல மிகுந்த வித்தியாசம் உணர்கிறேன். ஆனால் இப்படி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வகுப்பில் அவர்கள் சொல்வதேயில்லை. நாமாகவே உணர்ந்து கொள்கிறோம்.

மிகவும் மத நம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்தேன். மதத்தின் உதவியில்லாமலே நல்லவராக இருக்க முடியும் என்றால் மதம், ஆன்மீகம் போன்றவை தேவையில்லை என்ற கருத்தில் ஆழமாக இருந்தேன். அதுவும் கடந்த 10 வருடங்கள் முன் முழு நாத்திகவாதியாக மாறியிருந்தேன்.

என் கணவர் தீவிர வள்ளலார் பக்தர். தினமும் பூஜை, வழிபாடு எல்லாம் செய்வார். ஆனால் அவருக்கு யோகாவில் ஈடுபாடு கிடையாது. நான் யோகா வகுப்பு முடித்தவுடன் அதைப் பற்றி அவரிடம் பேசும்போதெல்லாம், இதெல்லாம் வள்ளலாரே சொல்லியிருக்கிறார் என்று சொல்லிவிடுவார். ஆனால் யோகாவிற்குப் பின் நான் பால், காபி, டீ போன்றவை விட்டபோது, “நாங்களும் எங்கள் சங்கக் கூட்டங்களில் இது போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று பேசுவோம். ஆனால் முடிவதில்லை. நீ உடனடியாக விட்டுவிட்டாய், எங்களைவிட வேகமாகப் போகிறாய்” என்று பாராட்டினார்.

என் வீட்டிற்கு காட்டுப்பூ வந்து விட்டால் அதைப் படித்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பேன். அதில் பிரபலங்கள் சத்குருவிடம் பழகியதை விவரிக்கும்போது, சத்குரு எவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்று அறிந்தபோது, அவர் மேல் மதிப்பு இன்னமும் அதிகரித்தது.

ஜனவரி 2009ம் வருடம், யோக மையத்தில் நடந்த லிங்கபைரவி பிரதிஷ்டையில் கலந்து கொள்ள முதலில் ஒருவர் என்னிடம் கேட்டபோது, எனக்கு சடங்குகளில் நம்பிக்கை இல்லை என மறுத்தேன். அப்புறம்தான், சத்குருவிற்கு பிரியமான ஒன்றில் எப்படி கலந்து கொள்ளாமல் இருப்பது என்று தோன்றியது. மேலும் எப்போதாவது சத்குருவைப் பார்க்க நேர்ந்தால் லிங்கபைரவி பிரதிஷ்டையில் கலந்து கொண்டாயா என்று கேட்டால் என்ன பதில் சொல்வேன்! இப்படி நினைத்து அதிலும் கலந்து கொண்டேன்.

லிங்கபைரவி பிரதிஷ்டை நடந்த அந்த 3 நாட்களில் நடந்த அனைத்துமே பரவச அனுபவங்கள்தான். அங்கு ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து சாம்பவி மகா முத்ரா பயிற்சி செய்தது பிரமிப்பான அனுபவமாக இருந்தது. பிரதிஷ்டையின் போது சத்குருவை அருகில் பார்த்தபோது என் கண்களிலும் கண்ணீர் பெருகியது. லிங்கபைரவி பிரதிஷ்டை முடிந்து திரையை விலக்கியதும், கதறி விட்டேன். பைரவியின் கண்களில்தான் என்ன ஒரு தீட்சண்யம்! நான் தாலி கூட அணிவதில்லை. நான் பாத்திமா பாபு என்று உலகத்திற்கே தெரியும்... அப்புறம் எதற்கு அடையாளம் என்று நினைப்பேன். குளிக்கும்போதும் தூங்கும்போதும் கம்மல் கூடப் போட்டுக்கொள்ள மாட்டேன். ஆனால் இப்போது ருத்ராக்ஷம் எப்போதும் அணிகிறேன். அது எனக்கு ஒரு தூய்மையைத் தருவதாக உணர்கிறேன். கடைசி வரையும் அணியத்தான் போகிறேன். ம்... எப்படியிருந்த நான் இப்போது இப்படியாகி விட்டேன்.

சத்குரு கைலாஷ் பற்றி, “என் குருவுக்குச் சமமாக நான் எதையும் வணங்க மாட்டேன். ஆனால் கைலாயத்தை மட்டும் எனது குருவை எப்படி வணங்குவேனோ, அதேபோல் வணங்குகிறேன்” என்று கூறியதைக் கேட்டவுடன் மெய் சிலிர்த்தது. கைலாஷ் எப்படியும் போக வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறேன்.

சின்னத்திரையில் இருப்பவர்கள் எல்லாம் சத்குருவிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிப் பார்க்க வேண்டும் என்று மிகவும் முயற்சி செய்கின்றனர். ஆனால் நான் அப்படியேதும் முயற்சி செய்யவில்லை. நிச்சயம் அவரே ஒருநாள் என்னை அடையாளம் கண்டு கூப்பிட்டுப் பேசுவார் என்று நம்பிக்கை இருக்கிறது, பார்க்கலாம்.

warmupindia.com