நடிகர் படவா கோபி நம்முடன் சில ஆண்டுகளாக தொடர்பில் இருப்பவர், தன் ஈஷா அனுபவங்களை இங்கு நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார்...

படவா கோபி:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான் ஈஷாவிற்கு 2002ல் அறிமுகமானேன். எனது நண்பர்கள் சௌந்தர் அண்ணா மற்றும் சந்தானம் அவர்களால் நான் ஈஷா வகுப்பு செய்தேன். அலுவலகம், குடும்பம் இரண்டு பக்கங்களில் இருந்தும் எனக்கு நிறைய மன அழுத்தங்களும் அதனால் கேள்விகளும் இருந்தன. இந்த நிலையில்தான் நான் ஈஷா வகுப்பு செய்தேன். என் மனதில் என்னென்ன குழப்பங்கள், கேள்விகள் இருந்தனவோ அதற்கெல்லாம், நான் கேள்விகள் கேட்காமலே, அங்கு பதில்கள் கிடைத்தன.

மனதளவிலும் என் மீது எனக்கிருந்த நம்பிக்கை அதிகமானது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்னும் மனத் தெளிவும் ஏற்பட்டது. அதுவரை நான் மிமிக்ரி, காமெடி இவற்றை எல்லாம் பொழுதுபோக்காகத்தான் வைத்திருந்தேன். இந்த வகுப்பிற்குப் பிறகு நான் எனது சாஃப்ட்வேர் என்ஜினியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மிமிக்ரி, காமெடியை முழு நேரத் தொழிலாக மாற்றிக் கொண்டேன். இது ஒரு பெரிய ரிஸ்க்தான். ஆனாலும் இப்போது என்னால் ரிஸ்க் எடுக்க முடிந்தது. நான் அப்போது எடுத்த முடிவு இப்போது எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது.

தொடர்ந்து ஈஷாவில் அடுத்த வகுப்பை செய்தேன். திடீரென்று 3வது நாள் என் கண்களிலிருந்து அருவியாக கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. ஏன் என்று எனக்கே சொல்லத் தெரியவில்லை. அந்த வகுப்பில் கிடைத்த அந்த அற்புத அனுபவங்களை நிச்சயமாக வார்த்தைகளால் விளக்க முடியாது. அதற்குப் பிறகு யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றாலும், எங்காவது ரோட்டில் நாய் அடிபட்டு கிடந்து பார்த்தாலும் என் கண்களில் கண்ணீர் வருகிறது. சமீபத்திய ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் சாதனை நிகழ்த்தி அவர் கொண்டாடியதைப் பார்த்தபோதும் எனக்குக் கண்ணீர் வந்தது. அடுத்தவர் சுக, துக்கங்களில் பங்கேற்கும் முதிர்ச்சி பெற்றுள்ளதாகவே நான் உணர்கிறேன்.

சத்குருவை நான் எப்போதெல்லாம் நேரில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அப்போதெல்லாம் நான் பார்த்து விடுகிறேன். சமீபத்தில் ஒன்றரை வருடமாக நான் அவரை தீவிரமாக நினைக்கவில்லை. எனவே அன்று அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் அதிகமானது. அன்று என் பிறந்த நாள் வேறு. எனவே எங்கள் வீட்டில் உள்ள சத்குருவின் படத்தைப் பார்த்தபடியே, "உங்களைப் பார்க்கவே முடியவில்லையே, நீங்கள் வேறு அடிக்கடி வெளியூர் போய் விடுகிறீர்கள், எப்போதுதான் உங்களைப் பார்க்கப் போகிறேனோ?" என்று ஆழமாக மனதில் நினைத்தேன். உடனே அது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. ஈஷா போகலாம், ஈஷா போகலாம் என்று எல்லோருமே அந்த தருணத்திலேயே முடிவெடுத்தோம். உடனே கார் எடுத்து கோவை ஈஷா யோகா மையத்திற்கு கிளம்பி விட்டோம். மாலை 6 மணிக்கு ஆசிரமத்திற்குள் நுழையும்போதே, உஷா அக்கா இடை மறித்து, "இப்போதுதான் வருகிறீர்களா, சத்குரு தர்ஷன் நடக்கிறது, சீக்கிரம் போங்கள்," என்றார். அப்படியே காரை நிறுத்தி வந்து தர்ஷனில் அவரைப் பார்த்தேன். அடுத்த நாள் சத்குருவினுடைய பிறந்த நாள். அவருடைய பிறந்த நாளிலும் அவரைப் பார்க்க நேர்ந்தது விசேஷம்தான்.

சத்குருவிடம் நானும் என் மனைவியும் முழுமையாக சரணடைந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள். 2007 ஜுலை 24, 25 ஆகிய நாட்களில் நாங்கள் நால்வரும் ஆசிரமத்திற்கு வந்துவிட்டு சென்றோம். திடீரென ஆகஸ்ட் 7ம் தேதியன்று என் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அப்போது அவளுக்கு 5 வயது. அப்போது சத்குருவிடம் தொடர்பிலும் இருந்தோம். ஆனால் 3 நாட்களில் அவள் இறந்து விட்டாள். ஏன் எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை. இத்தனைக்கும் நன்றாக இருந்த குழந்தை. சத்குரு மேலும் கோபமாக வந்தது. "உங்களைத்தானே நம்பியிருந்தோம், இப்போது வாழ்க்கையில் பற்றுதலே இல்லாமல் போய் விட்டதே," என நினைத்தேன். ஆனால் அந்த செய்தி சத்குருவிற்கு போனவுடனே அவர் ஒரு செய்தி அனுப்பியிருந்தார்.

பிறகு 1 மணி நேரத்திற்குள்ளாகவே எனக்குள்ளும் என் மனைவிக்குள்ளும் பெருத்த மாறுதல் வந்தது. நாங்கள் கண் மூடி உட்கார்ந்தால் தானாகவே 2 மணி நேரம், 3 மணி நேரம் என்று தியான நிலைக்கு சென்று விடுவோம். இதை சத்குரு மட்டுமே நிகழ்த்தி இருக்க முடியும், இல்லையா? வேறு எப்படி நடந்திருக்க முடியும்? இப்படி 15, 20 நாள் இருந்தோம். பிறகு ஆசிரமத்துக்கு கூப்பிட்டிருந்தார்கள். சத்குருவிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று நாங்கள் எழுதி வந்திருந்தோம். ஆனால் அவரை நேரில் பார்த்தபோது, நாங்கள் கேட்காமலே, எல்லா கேள்விகளுக்கும் அவரே பதில் அளித்து விட்டார். அப்போது அவர், "Nature has its own way of taking things" என்று சொன்னார். பிறகு மெதுவாக நிதர்சனத்துக்கு வந்தோம்.

அதே போல் ஒரு முறை 2004ம் ஆண்டில் சென்னையில் சத்குரு ஈஷா வகுப்பு நடத்தினார். நானும் பார்ப்பதற்காக சென்று பின்னால் அமர்ந்திருந்தேன். சாப்பாடு முடிந்து அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும்போது, சத்குரு கூப்பிடுகிறார் என்று ஒரு ஸ்வாமி வந்து என்னிடம் கூறினார். ஒரே ஆச்சரியம், அவசரமாகப் போனேன். "எல்லோரும் சாப்பிட்ட களைப்பில் இருக்கிறார்கள், உங்கள் நிகழ்ச்சியைப் பண்ணுங்களேன்!" என்றார். அதைவிட என்ன ஆனந்தம் வேண்டும்? ஒரு குரு எங்கேயோ உட்கார்ந்திருந்தவனை கவனித்து அழைத்து நிகழ்ச்சி செய்யச் சொல்கிறார் என்றால் அதை விட என்ன கொடுப்பினை வேண்டும்? இன்றும் நான் அதை பெருமையாக நினைக்கிறேன்.

பொதுவாக மக்கள் மத்தியில் காமெடியன்களுக்கு இருக்கும் மதிப்பு ஓரளவு குறைவுதான். நாம் நிகழ்ச்சி செய்யும்போது நன்றாக சிரிப்பார்கள். ஆனால் கதாநாயகன், கதாநாயகியோடு ஒப்பிடும்போது சமூகத்தில் மதிப்பு குறைவுதான். ஆனால் சத்குரு அவராக அழைத்து அவர் முன்பாக வந்து நிகழ்ச்சி செய்யச் சொன்னவுடன், என் குருவே என்னை ரசிக்கும்போது அப்புறம் நமக்கு என்ன? என்று எனக்குள்ளே ஒரு பெருமை வந்தது. இப்போது என் நிகழ்ச்சியை எங்கு செய்தாலும் முன்பைவிட பெருமையாக தலைநிமிர்ந்து செய்கிறேன்.