திருமதி ஷோபா சந்திரசேகர் - நடிகர் விஜய்யின் தாயாகவும், பிரபல கர்நாடாக இசைக் கலைஞராகவும், நடிகையாகவும் நமக்கு அறிமுகமானவர். ஆனால் ஒரு ஈஷா தியான அன்பராக தன் வாழ்க்கை எப்படி புனரமைக்கப்பட்டது என்பதை இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

திருமதி. ஷோபா சந்திரசேகர்:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான் ஈஷா வகுப்பில் சத்குருவின் மாணவியாகச் சேர்ந்து, பிறகு விசிறியாகி முடிவில் அவரது பக்தையாகவே மாறி பல ஆண்டுகள் ஓடிவிட்டன.

கி.மு. - கி.பி. என்பதுபோல் ஈ.மு. - ஈ.பி. (ஈஷாவுக்கு முன், ஈஷாவுக்குப் பின்) என்றே என்னைப் பொருத்தவரையில் கணக்குப் போடவேண்டும். இங்கு வந்து சென்றபின் நான் புத்துணர்வு பெற்று புனர் ஜென்மம் எடுத்தேன். ஆரோக்கியத் தட்டுப்பாடு, குடும்பக் கவலை, சமுதாயக் கவலை என்று அலை அலையாய் வந்த கவலைகளுக்கிடையே, மற்ற எல்லோரையும் போல்தான் நாட்களைத் தள்ளி வந்தேன்.

இங்கே தியானம், யோகா எல்லாம் முறையாகக் கற்றேன். புனர் ஜென்மம் பெற்றேன்.

ஈஷா யோகா - ஆஹா... சொல்ல முடியாத ஒரு அலாதியான சுகம்! அனுபவித்தால்தான் புரியும்! நான் இப்போது மகிழ்ச்சி, ஆரோக்கியம், மன அமைதி அனுபவித்துக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். தொல்லைகளைக் கண்டு முன்போல் துவண்டு விடுவதில்லை, சரி வரட்டும் பார்க்கலாம், எப்படி வந்ததோ அப்படியே அதை அனுப்பி வைப்போம் என்ற சிறிது பக்குவ நிலை வந்துவிட்டதை உணர்கிறேன்.

ஈஷா யோகா மையம், ஒரு புண்ணிய பூமி. இயேசு, கிருஷ்ணா, அல்லா, ராம் என்ற தத்துவம்தான் இங்கே! ஜாதி, மத பேதம் அறவே கிடையாது. அந்தஸ்து பேதமற்ற சமத்துவம் திடமாகக் கடைபிடிக்கப்படுகிறது. தியான வகுப்புகளில், அதிகாலை குளிர்ந்த நீரில் குளியல், ஆழ்ந்த தியானம், உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் உணவு... இப்படி முறையாக காலை முதல் இரவு வரை எல்லாமே முறையாக வகுக்கப்பட்டிருக்கிறது. 7 நாட்கள் பயிற்சி முகாம் நேரம் போவதே தெரியாமல், வீடு திரும்ப மனமில்லாமல் திரும்புவோம்.

தியானலிங்கம்...
அடேயப்பா! அந்தப் பிரம்மாண்ட மஹாலிங்கத்தை எப்படி வார்த்தைகளால் சொல்வது? தரிசித்த அடுத்த கணமே இமைகள் துடிக்க மறுக்கும், உயர்த்திய புருவம் கீழே இறங்காது. பேச்சற்று கண் கலங்கி நிற்கப் போகிறீர்கள்!

அடுத்து ஒரு வைபவம், அங்குள்ள தீர்த்தகுண்டம்! நோய் தீர்க்கும், பக்தி ரசம் பெருகும், பாதரசலிங்கம்!

எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் போதாது, சொன்ன திருப்தியும் எனக்கு வராது, தேன் என்று பல நாள் பேசினாலும் பல பக்கம் எழுதினாலும் தித்திக்காது... நாவில் ஒரு துளி தடவினால் போதும். அதுபோல் அதை நீங்கள் தரிசித்தால்தான் உணரமுடியும்!

காலம் பொன்னானது. மானிட ஜென்மாவை வீணாக்காமல் அங்கே விரைந்து சென்று உங்களை இறைவனுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளுங்கள் என உரிமையோடு வேண்டிக்கொள்கிறேன்!