நடிகர் விவேக் - அறிமுகம் தேவைப்படாத நகைச்சுவை நடிகர். தன் படபிடிப்பின் போது ஏற்பட்ட ஒரு விபத்தினால் காயம்பட, அதன்பிறகு ஈஷாவின் பயிற்சிகளால் குணமடைந்ததையும், தனக்கு தன்னை உணர்த்திய உன்னதமாக ஈஷா எப்படி அமைந்தது என்பதையும், தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் இதில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

நடிகர் விவேக்:

மை டியர் ஈஷா வாசகர்களே!

நான்தான் உங்க விவேக்!

நலமா? நலமறிய ஆவல்!

இப்பவும் இங்கு எல்லோரும் சுகம்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என்னடா இது? லெட்டர் எழுதுற ஸ்டைல்ல எழுத ஆரம்பிச்சுட்டானேன்னு அதிர்ச்சி அடையாதீங்கோ!

தியான லிங்கத்தின் முன் அமர்ந்தால்... ‘நெஞ்சுக்கு நிம்மதி... ஆண்டவன் சன்னிதி’ என்ற கண்ணதாசன் வரிகள் உயிர்பெறுவதை உணரலாம்.

அட்லாஸ்ட்... ஒரு லாஸ்ட் ரிசார்ட் நம்ம எல்லோருக்கும் கிடைச்சிருக்கு. உடம்பு சுகம், மனசு சுகம், வாழ்க்கையில் சுகம்னு எல்லாம் வேணுமா? நேரா போய், ரைட் கட் பண்ணுங்க... மறுபடியும் ரைட் கட் பண்ணுங்க... மீண்டும் ஒரு தபா ரைட் கட் பண்ணுங்க. இப்ப எங்க வந்திருக்கீங்க?

அட, என்னது? புறப்பட்ட இடத்துக்கே வந்துட்டீங்களா? கரெக்ட்! நிம்மதியும் சந்தோஷமும் அப்படித்தான். நம்மகிட்டயே இருக்கும். ஆனா, அதை எங்கெல்லாமோ தேடிட்டிருப்போம். ‘உள்ளே தேட வேண்டியதை, வெளியே தேடாதே’ன்னு சொல்லிக்கொடுக்க ஒரு இடம் இப்போ கிடைச்சிருக்கு. அதுதான் ஈஷா யோக மையம்!

நம்ம பசங்களுக்கு இஷா கோபிகர், இஷா டியோல் மாதிரி சினிமா நட்சத்திரங்களைவிட ‘ஈஷா யோக மையம்‘ - நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதுக்குக் காரணம், அவங்க அப்ரோச்!

சில வருடங்களுக்கு முன்னாடி... படப்பிடிப்பில் எனக்கொரு ஆக்ஸிடென்ட். திருச்சியில் பைக்கில் வருவது போல காட்சி. சறுக்கி, வழுக்கி, தொபுகடீர் என்று விழுந்து... காலில் ‘ஜவ்வு’-அவுட்!

சுற்றி நின்ற நம் ரசிகப் பெருமக்கள் அதையும் கை தட்டி, விசிலடித்து, ரசித்து மகிழ்ந்தனர். “ஆகா, நம்ம விவேக் டயலாக் காமெடியோட, ஆக்ஷன் காமெடியும் சூப்பரா பண்றாரே”ன்னு கமென்ட் வேறு. ஒரு வழியா படுக்கையில் விழுந்து, மறுபடி எழுந்து நிக்கவே ஆறு மாசம் ஆச்சு. உடம்பும் மனசும் உளைச்சலில் இருந்த நேரம்... அப்படி அந்து அவலாகி, நொந்து நூடுல்ஸாகி இருந்தபோது... கர்நாடக இசைப் பாடகி பத்மஸ்ரீ சுதா ரகுநாதன் மூலம் எனக்கு ஈஷா பற்றி தெரியவந்தது. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா ஆசிரமத்தில் ‘ஹோல்னஸ் புரோக்ராம்’ செய்தேன்.

ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. எட்டு நாட்கள்... காலையில் 5 மணிக்கு மணி அடிச்சு எழுப்பிவிடுவதில் இருந்து... பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு, யோகா ஹாலுக்குச் சென்று வேம்பு உருண்டை + மஞ்சள் உருண்டை தின்று தண்ணீர் குடித்துவிட்டு (காலையில் சூடா டிகிரி காபி குடித்துப் பழக்கப்பட்ட நாக்கு இது!) உள்ளே போனால்... இரவு பத்து மணி வரை எத்தனை புரோக்ராம்ஸ்... ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் என்று நம்மை முற்றிலும் மாற்றிவிடக்கூடிய அற்புதமான, ஆனந்தமயமான தருணங்கள் அவை!

அதிலும் சத்குருவின் பேச்சுக்கள் மிக வசீகரமானவை. நகைச்சுவையுடன் தெளிவை உண்டாக்கும் பிராக்டிகலான உரையாடல்கள். மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்ட ‘ஆன்மிகம்’ அங்கே கிடைத்தது. ஞான ஒளி வீசும் அவர் முகத்தைப் பார்த்தால் கவலைகள்... கால் பிடரியில் பட, பி.டி. உஷாவை விட வேகமாக ஓடுகின்றன.

பிரேக் பிடிக்காத தண்ணீர் லாரி போல் ஓடுகிற மனம்... நிதானமாகி, நம் வசமாகிறது.

அங்கு கற்றுத்தரப்படும் கிரியாக்களும் தியான முறைகளும்... குறிப்பாக சூன்யா தியானம் நம்மை முற்றிலும் மாற்றவல்லது.

தியான லிங்கத்தின் முன் அமர்ந்தால்... ‘நெஞ்சுக்கு நிம்மதி... ஆண்டவன் சன்னிதி’ என்ற கண்ணதாசன் வரிகள் உயிர்பெறுவதை உணரலாம்.

பாதரச லிங்கம் உள்ள தீர்த்தக்குளத்தில் நீராடினால்... நாள் முழுதும், “I am the secret of my energy!” - என்று சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்!

ஊரில் உலகத்தில் புகழ்மிக்க மனிதர்களாகத் திகழும் பிரபலங்களும் பெரும் கோடீஸ்வரர்களும்கூட அங்கே தங்கள் புற அடையாளங்களைத் தொலைத்து, மிகவும் எளிமையாக, மிகவும் இனிமையாக, பணிவுடன் நமக்கு வாலன்டியர்களாகச் சேவை செய்வது இன்னொரு வியப்பு.

உங்கள் ஈகோ... ஈஷாவால் அழியும்!

சுருக்கமாகச் சொன்னால், ‘உன்னை உனக்கு உணர்த்தும் உன்னதம்’... அதுதான் ஈஷா யோக மையம்!

விருப்பமுடன்
விவேக்