புத்தகத்தைத் தழுவி வடிக்கப்பட்ட படம், புத்தகத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட தொடர் என புத்தகத் தழுவல்கள் பலவற்றின் தாக்கம் சமீபத்திய படம் வரை நம்மில் இருக்கத்தான் செய்கிறது. இவர் தழுவிய புத்தகம் எப்படி தன்னை மாற்றியிருக்கிறது என்கிறார் பாரத் மேட்ரிமோனியின் முருகவேல்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திரு முருகவேல் ஜானகிராமன்:

ஆனந்த விகடனில் சத்குருவின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரின் வாசகன் நான். விகடன் பத்திரிகை வாங்கியதும் முதலில் அதைத்தான் படிப்பேன். பின் அது புத்தகமாக வந்ததும் பல முறை படித்திருக்கிறேன். நான் படித்ததிலேயே மிகச் சிறந்த புத்தகம் என்று அதைச் சொல்லலாம். அது எனக்குள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எனக்குள் இருந்த சின்னச் சின்னக் கட்டுப்பாடுகளில் இருந்தும், வற்புறுத்தல்களில் இருந்தும் சுலபமாக விடுதலை கொடுத்தது.

உதாரணமாக, 30 வருடங்களாக வெந்நீரிலேயே குளித்து வந்த நான், இப்போது அதிகாலையிலும் ஆனந்தமாக பச்சைத் தண்ணீரில் குளித்து வருகிறேன். பிறந்ததிலிருந்து அசைவம் சாப்பிட்டு வந்த நான், எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுத்த சைவமாக மாறியிருக்கிறேன். முன்பெல்லாம் மீன் உண்ணாமல் என்னால் வாழ முடியும் என்று நம்பியதுகூட இல்லை. ஒரு புத்தகம், ஒரு மனிதனை இந்த அளவு மாற்ற முடியுமா என்பது ஆச்சரியம்!

என் அலுவலகத்திலும் அத்தனை பேருக்கும் ஒரு மீட்டிங் போட்டு இந்த மாயப் புத்தகம் பற்றிக் கூறியதோடு, அனைவருக்கும் இதை என் பரிசாக அளித்தேன். இன்று வரை இதை பல பிசினஸ் பார்ட்னர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து வருகிறேன்.

சத்குருவை சென்னையில் நேரில் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பையும் தொடர்ந்து கோயம்புத்தூரில் அவரிடமே 3 நாட்கள் யோகப் பயிற்சி கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்ததையும் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். ஈஷா மையமும், தியானலிங்கமும், தன்னார்வத் தொண்டர்களுமாக என்னை மயக்கிய இடங்களுள் ஈஷாவும் ஒன்று!

ஷாம்பவி மஹாமுத்ரா’ கற்றுக்கொண்டேன். அந்தப் பயிற்சியைச் செய்வதே ஓர் அற்புத அனுபவம். தினமும் அதைச் செய்வதால், மிகுந்த பயன் அடைந்துள்ளேன். குறிப்பாக, அலுவல் காரணமான மன அழுத்தத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டிருக்கிறேன். அனைவரிடமும் எளிதாக அன்பாக இருக்க முடிகிறது. நாள் முழுக்கக் களைப்பில்லாமல், உற்சாகமாக இருக்க முடிகிறது.

என் தொழில் நிமித்தம் உலகம் முழுக்கப் பயணம் செய்தபடியே இருக்கிறேன். இருந்தாலும் கற்றுக்கொண்ட நாள் முதல் இன்று வரை ஒரு நாள்கூட, ஒருவேளை பயிற்சியைக்கூடத் தவறவிட்டதில்லை. அதன் நற்பலன்களையும் அனுபவித்துக்கொண்டே இருக்கிறேன். வாழ்நாள் முழுதும் இதனைக் கைவிடக் கூடாது என்றிருக்கிறேன்.
எல்லாம் தெரிந்த மனிதர் என்றால், அது சத்குருதான். இவர் போன்ற ஞானம் பெற்ற குருவின் தீட்சை கிடைத்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னைப் பொறுத்தவரை அவரிடம் விடை கிடைக்காத கேள்விகள் எந்த மனிதனுக்கும் இருக்க முடியாது!