பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், பெண்ணியவாதி எனப் பலவாறாக அறியப்படுபவர் முனைவர் பர்வீன் சுல்தானா. உலகெங்கும் பயணம் செய்து தமிழின் வளத்தை, சிறப்பை, பெருமையை, அழகை தமது பேச்சின் மூலம் நிலைநாட்டி வருகிறவர். சத்குருவுடன் ஏற்பட்ட ஒரு சந்திப்பில் தான் கரைந்துபோனதைப் பற்றியும், தியானலிங்கம் தனக்கு ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

முனைவர் பர்வீன் சுல்தானா:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விழித்திருக்கும் நேரமெல்லாம், ‘விழிப்போடு’ இருப்பதை எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் சரிவரச் செய்ய முடிந்ததில்லை. அந்நேரத்தில் தான், மரபின் மைந்தன் முத்தையா, சத்குருவின் ‘ஞானியின் சந்நதியில்’ எனும் நூலை, திறனாய்வு செய்து ஈரோட்டில் பேச வேண்டும் என்று சொன்னார். இப்படித்தான் எனக்கு ஈஷா அறிமுகம்!

‘‘என் அடையாளங்களோடு எனக்குச் சாத்தியமில்லாதது, உன் அடையாளங்களோடு உனக்குச் சாத்தியமாகும்’’ என்றார்.

பின்னர், சில ஆண்டுகள் கழித்து கோவைக்கு ஒரு நிகழ்ச்சிக்காகப் பேச வந்தபோது ஈஷா யோக மையத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. திட்டமிடப்படாத திடீர் பயணம் அது. வளாகத்தின் உள்ளே நுழைந்ததும், அது ஒரு மிக நெருக்கமான ஒரு உணர்வை ஏற்படுத்தியது, அந்த வித்தியாசமான கட்டிட அமைப்பு, தூண்களில் நெளிந்து வளைந்து தொங்கிய கல் பாம்புகளின் உருவங்கள், பார்த்தவுடன் பிரமிப்பு சூழ்ந்து கொண்டது.

சர்வ மத, சமயச் சின்னங்களையும் தாங்கி நிற்கும் கல்தூண், பதஞ்சலி முனிவர், மின்னும் ஓரிலை கொண்ட மரச் சிலை, அக்கம்மா, கண்ணப்பர், மெய்ப்பொருள் நாயனார், சதாசிவ பிரம்மேந்திரர், பூசலார், சத்குரு பரப்பிரம்மா ஆகியோரின் கல் ஓவியங்கள், யோகியின் நெடுஞ்சாண்கிடைச் சிற்பம், பிரமிப்பூட்டும் தியானலிங்கம் என அனைத்தும் என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டன.

சில நாட்களுக்குப் பிறகு, சத்குருவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. திரும்பத் திரும்ப என் நினைவில் நான் அசைபோடும் அந்த நாளில், தொலைவிலிருந்து, நிதானமாக கம்பீரமாக நடந்து வந்தார் சத்குரு. மயில் உலவும் அழகிய குடில் சூழ்ந்த தோட்டம். பரிபூரணமாக அமர்ந்திருந்த அந்த மகா யோகியின் முன் அமர்ந்தேன்.

தாய்மையும் கருணையும் கண்களில் பொழிய, அவர் பேசத் துவங்கினார். 5 நிமிடத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த அந்த சந்திப்பு, 30 நிமிடங்களைக் கடந்துகொண்டு இருந்தது. மானுடத்தை மையமிட்ட சத்குருவின் பேச்சு, எனக்குள் சிதறிக்கிடந்த கேள்விகளையும் குழப்பங்களையும் மெல்ல விலக்கிக் கொண்டு இருந்தன. சத்குருவுடனான அந்த நிமிடங்கள் என் பிரயாணத்தில் உயிர்ச் சத்து வாய்ந்தவை.

இஸ்லாமியப் பெண்ணாகிய எனக்கு, என் மார்க்கம் தந்த வழிகாட்டுதல்கள், மானுடத்துக்கான என் பயணத்தை எனக்கு உணர்த்தியது. யோகப் பயிற்சிகள் நான் செய்யலாமா என்று சிறு தயக்கம் தலை தூக்கிய போது, யோகப் பயிற்சிக்கு மதம் ஒரு தடை அல்ல என்பதை உணர்த்தினார். அவர் பேச்சு, என்னை மேலும் தெளிவுபடுத்தியது. பலவற்றை எனக்கு உணர்த்தியது. ‘‘என் அடையாளங்களோடு எனக்குச் சாத்தியமில்லாதது, உன் அடையாளங்களோடு உனக்குச் சாத்தியமாகும்’’ என்றார்.

எனக்கு முன்னால் தன்னை உணர்ந்த ஞானி - என் குருவாக அமர்ந்திருக்க, அவருக்கு முன்னால் எனக்குள் கரையும் நான்... தவம் இன்றி வரம் பெற்றேன். வேறென்ன சொல்ல!

‘உலகில் வன்முறை, போர் தவிர்க்க முடியாது, ஆனால் தள்ளிப்போடலாம்’, ‘மலர் மலர்வதைப் பார்க்க மறுப்பவர்கள், குண்டு வெடிப்பதை மட்டும் கேட்கிறார்கள்’ எனும் சொற்கள் சூடாக, மானுடம் உய்ய வழி தேடும் உயிர்க் காற்றாக என்னைத் தாக்கியது. அப்போது நான் கரையத் தொடங்கினேன். என் கண்களில் கண்ணீர் வழிந்தோட ஆரம்பித்தது. கண் மூடி கைகள் மேல் முகமாக வைத்து தியானம் செய்யச் சொன்னார். செய்தேன்.

எனக்கு முன்னால் தன்னை உணர்ந்த ஞானி - என் குருவாக அமர்ந்திருக்க, அவருக்கு முன்னால் எனக்குள் கரையும் நான்... தவம் இன்றி வரம் பெற்றேன். வேறென்ன சொல்ல!

அன்றிலிருந்து அன்பு மயமாவது எனக்குள் சாத்தியமாயிற்று. சத்குருவின் நேரடிப் பயிற்சி வகுப்பு... மனம் விழைந்தபோது வாய்ப்பும் இயல்பாகவே வந்தது. ஐந்து நாட்கள் கற்றல், கேட்டல், உணர்தல், மகிழ்தல் என திளைத்தேன். யோகம் - ஞானம் - க்ரியா விற்கு அறிமுகமான தருணங்கள் என் வாழ்வில் மிக முக்கியமானவை.

என் வாழ்க்கைப் பயணத்தில், மதம் பற்றிப் பேசாமல் மனிதனுக்குத் தேவையான ஆன்மீகம் பற்றிப் பேசும், தன்னை உணர்ந்த மகாயோகியை சந்தித்ததும், அவரின் அருள் கிட்டியதும் எனக்கு ஈஷா மூலம் வாய்த்தது. நமக்குள் உள்ள உன்னதத்தை நமக்கு அறிமுகம் செய்யும் அந்தப் பேரருளுக்கு நாம் செலுத்தும் காணிக்கை, அந்த உன்னதத்தை நாமும் உணர்வதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?