கடந்த வருட வெள்ளத்திற்குப் பிறகு இமாலய யாத்திரைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீண்டும் எப்போது கிட்டுமோ, என்று காத்திருந்தவர்களுக்கு இதோ வருகிறது வாய்ப்பு. பன்னிரு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்றின் உறைவிடமான கேதார்நாத்தின் முக்கியத்துவம் குறித்தும், காலங்காலமாக இந்தத் தலம் பல்லாயிரம் ஞானிகளாலும் யோகிகளாலும் சக்தியூட்டப்பட்டிருப்பதைப் பற்றியும் இங்கு சத்குரு விவரிக்கிறார்.

சத்குரு:

கேதார்நாத் அதி அற்புதமான இடம். 'ஷிவா' எனும் ஒலி இங்கு உச்சரிக்கப்படும்போது, அது முற்றிலும் புதிய பரிமாணத்தையும் முக்கியத்துவத்தையும் பெறுகிறது. இந்த ஒலிக்காகவே, இவ்விடத்தை பிரத்தியேகமாக உருவாக்கினர். 'ஷிவா' என்ற சொல், படைக்கப்படாத ஒன்றன் விடுதலையுணர்வை, படைக்கப்படாத ஒருவரின் மோட்ச நிலையை குறிக்கிறது. இப்படிச் சொல்வது சரியல்ல என்றாலும், இப்பூமியிலே 'ஷிவா' எனும் ஒலி இங்கிருந்து வெளிப்படுகிறது என்பதுபோல் இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் இந்த இடத்தை இவ்வொலியின் அதிர்வாகத்தான் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆதிசங்கரர் மலைகளுக்குள் மறைந்து போவதற்கு முன் கடைசியாக தென்பட்ட இடம், கேதார்நாத்.

நாம் ஷிவா என்று சொல்லும் போது, அது ஒரு சிலையை, 'செல்வச் செழிப்பை எனக்கு வாரிவழங்கு' என்று நாம் வேண்டி நிற்கக்கூடிய இன்னொரு கடவுளை குறிக்கவில்லை. ஷிவா என்றால் 'எது இல்லையோ அது'. இன்று நவீன விஞ்ஞானம், 'அனைத்துமே ஒன்றுமற்ற தன்மையில் இருந்து வந்து, மீண்டும் ஒன்றுமற்ற தன்மைக்குள் ஒடுங்கிவிடுகிறது' என்று நிரூபித்து வருகிறது. இந்த பிரபஞ்ச இருப்பின் அடிப்படையே, இந்தப் பிரபஞ்சத்தின் தன்மையே, பரந்து விரிந்திருக்கும் ஒன்றுமற்றதன்மை தான். இங்குள்ள பால்வெளி மண்டலங்கள் எல்லாம், அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சிற்சிறு நிகழ்வுகள். மற்றவை எல்லாமே ஒன்றுமற்ற தன்மை, இதைத்தான் ஷிவா என்று குறிப்பிடுகிறோம்.

கிறுகிறுக்க வைக்கும் சக்திகளின் கலவை

கேதார்நாத், சற்றே கிறுகிறுக்க வைக்கும் பலவித சக்தி அதிர்வுகளின் கலவை. ஒவ்வொரு விதத்திலும், ஆயிரமாயிரம் யோகிகள், ஞானியரை கண்டிருக்கிறது இவ்விடம். இதில் நீங்கள் கற்பனை கூட செய்திராத வகையானவர்கள் பலர். இவர்கள் பொது மக்களுக்கு எதையும் கற்றுக் கொடுக்க முயற்சி எடுத்ததில்லை. ஆனாலும் இவ்வுலகிற்கு ஒரு அர்ப்பணிப்பாக, தங்கள் சக்தியை, தாங்கள் பின்பற்றிய வழிமுறைகளை, தாங்கள் பெற்ற பலன்களை இங்கு ஏதோ ஒருவிதத்தில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆதிசங்கரர் மலைகளுக்குள் மறைந்து போவதற்கு முன் கடைசியாக தென்பட்ட இடம், கேதார்நாத். அதற்கு அடையாளமாக, அங்கிருக்கும் சுவற்றில் அவரது கோல் ஏந்திய கை, இவ்விடத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்புவரை இருந்தது.

ஈஷாவுடன் இமாலய பயணம்... பகுதி 1, Ishavudan imalaya payanam paguthi 1

ஆன்மீக வழியில் இருந்தால், அவர் இப்படித்தான் இருப்பார், இப்படித்தான் நடந்து கொள்வார், இப்படித்தான் உடை அணிவார், இப்படித்தான் பேசுவார் என்று உங்களுக்குள் ஒரு அபிப்ராயம் வைத்திருப்பீர்கள். ஆனால் இந்நிலத்தில், ஆன்மீகவாதிகள் என்றால் இப்படித்தான் என்று வரையறுத்துவிட முடியாது. நீங்கள் கற்பனை செய்தது போல் இருக்கும் ஆன்மீகவாதிகள் இங்கு இருந்திருக்கின்றனர்.

நீங்கள் சற்றும் எதிர்பார்த்திரா வண்ணம், மிக மிக விசித்திரமாய், எதற்கும் அஞ்சாமல், ஏன் காட்டுமிராண்டித்தனமாய் நடந்துகொள்பவர்கள் கூட இருந்திருக்கிறார்கள். அவர்களை ஆன்மீகவாதி என்று நீங்கள் ஒருபோதும் ஒத்துக் கொண்டிருக்கமாட்டீர்கள். ஆனால் அவர்கள் உயிரின் உச்சத்தை அடைந்தவர்களாய் இருப்பார்கள். நீங்கள் ஒருவரை யோகி என்று சொல்லும் போது, அது அவருடைய ஒழுக்கத்தையோ நடத்தையையோ குறிப்பதில்லை. யோகி என்றால் உயிர்தன்மையுடன் முழுவதுமாக ஒன்றி இருப்பவர். எந்த அளவிற்கு என்றால், ஒரு சைக்கிள் மெக்கானிக் ஒரு சைக்கிளை எப்படி அங்கம் அங்கமாகப் பிரித்து, மீண்டும் அந்த நட்டு போல்டுகளை சேர்த்து ஒரு சைக்கிளாய் உருவாக்குவாரோ, அதே போல, இவர், உயிராய் இயங்கும் ஒன்றை அதன் இயற் பாகங்களாய் பிரித்து, மீண்டும் ஒரு உயிராய் சேர்த்து உருவாக்க வல்லவர். இந்த வல்லமை கொண்டவரைத்தான் யோகி என்கிறோம். இது போன்ற மிக அற்புதமான மனிதர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆன்மீக வளர்ச்சியை விரும்புபவர்களுக்கு கேதார், ஒரு வரம் - வேண்டற்கரிய, பெருதற்கரிய, உணர்தற்கரிய அற்புத வரம்.

ஆன்மீக வளர்ச்சியை விரும்புபவர்களுக்கு கேதார், ஒரு வரம் - வேண்டற்கரிய, பெருதற்கரிய, உணர்தற்கரிய அற்புத வரம். ஒருவர் திறந்த மனநிலையில் இருந்தால், கேதாரை இப்படித்தான் உணர்வார்கள். இதை வார்த்தைகளால் விளக்குவது கடினம். பார்க்கப் போனால், அது வெறும் மலைதான்! பெரிய பாறைகளின் குவியல். ஆனால் இவ்விடத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தவர்களின் தன்மை, அவர்களின் பங்களிப்பு, அர்ப்பணிப்பு இவ்விடத்தை மிக அற்புதமான இடமாய் மாற்றியிருக்கிறது.

பல யோகிகள் தங்கள் உடலை நீத்த இடம் இது. இந்த அபூர்வ இடத்தை நீங்கள் உணரவேண்டும். இந்தியாவில் பிறந்தும், இந்த இடத்தை நீங்கள் உணராமல் போவது அபாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். முதுமை அடைந்து, எதை செய்வதும் இயலாது, முடியாது என்று ஆகும் முன், ஒரு முறையேனும் நீங்கள் இமயமலை வர வேண்டும்.

காளையின் திமில்...

கேதார் குறித்து புராணத்தில் ஒரு கதை உண்டு. குருக்ஷேத்ர யுத்தம் முடிந்த பின்னர், பாண்டவர்கள் மிகுந்த மன உளைச்சலில் தவித்தார்கள். காரணம் அவர்கள் தம் சகோதரர்களை, உறவினர்களையே போரில் கொன்றுவிட்டிருந்தனர். இதற்கு 'கோத்திரவதை' என்று பெயர். அவர்களைக் குற்றவுணர்வு வாட்டியது. பெருத்த பாவம் செய்துவிட்டதாக உணர்ந்து, அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் சிவபெருமானை நாடிச் சென்றனர்.

இக்கொடுஞ்செயலால் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த குற்ற உணர்விலிருந்து அவர்கள் விரைவாக மீள்வதை சிவபெருமான் விரும்பவில்லை. எனவே அவர் தன்னை ஒரு காளையாக உருமாற்றிக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பிக்க விழைந்தார். ஆனால் இதை அறிந்த பாண்டவர்கள், விடாது பின்தொடர்ந்து, அவரை பிடித்துவிட முயற்சி செய்தனர். உடனே சிவன், தன்னை இப்பூமிக்குள் புதைத்துக் கொண்டார். மீண்டும் வெளி வந்த போது, அவரின் உடல் தனித்தனி பாகங்களாக பல்வேறு இடங்களில் வெளிவந்தது.

நெற்றி தோன்றிய இடம், நேபாளின் பசுபதிநாத். இது தான் அனைத்திலும் மிக முக்கிய ஸ்தலமாகக் கருதப்படுகிறது. காளையின் திமில் வெளிப்பட்ட இடம், கேதார்நாத். முன்னங்காலகள் இரண்டும் வெளிப்பட்ட இடம், துங்கநாத். இது கேதார் செல்லும் வழியில் உள்ளது. நாபி (வயிற்றுப் பகுதி) வெளிப்பட்ட இடம் மத்திய மஹேஷ்வர். இவ்விடம் இந்திய இமாலயப் பகுதியில் உள்ளது. இங்கு மிகவும் சக்தி வாய்ந்த மணிப்பூரக லிங்கம் உள்ளது. அவருடைய ஜடாமுடி தோன்றிய இடம் கல்பநாத். இது போல அவருடைய உடற்பாகங்கள் பல இடங்களில் தோன்றின.

இப்படி வெளிவந்ததாய் விவரிக்கப்படும் உடற்பாகங்கள், உடலின் ஏழு சக்தி சக்கரங்களுடன் தொடர்புடையவை. ஆக, கோவில்களாய் உருவாக்கப்பட்ட இந்த இடங்கள், ஒரு மனித உடலை பிரதிபலிக்கிறது. இது ஒரு மிகப்பெரிய பரிசோதனை முயற்சி. தாந்திரீக சாத்தியம் நிறைந்த, ஒரு மாபெரும் உடலை உருவாக்கும் முயற்சி. இத்தகைய ஒரு உடல், இமயமலையின் இந்தியப் பகுதியில் அமைந்துவிட்டது. மற்றொரு முயற்சி, மேற்கே நிகழ்ந்தது. அதில், நேபாளம் முழுவதையுமே ஒரே சக்தி உடலாய் மாற்றினர்.


குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15-25 துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.

தொடர்புக்கு: 94 88 123 777/111

வலைதளம்: www.sacredwalks.org