Question: பல அற்புத உயிர்களும் குருமார்களும் ‘முட்டைகள்’ என்று நீங்கள் குறிப்பிட்ட சக்திநிலையை பல்வேறு இடங்களில் இட்டார்கள் என்று கூறினீர்கள். இதனால் எதிர்காலம் குறித்து அவர்கள் பல கணிப்புகளை வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது. புத்தர் கூட அப்படித்தான் செய்தாரா? பல நூற்றாண்டுகளுக்குப் பின் தன் ஆன்மீக வழிமுறை என்னவாகும் என்று புத்தருக்கு அப்போதே தெரிந்திருந்ததா? சத்குரு, உங்களுக்கும் உங்கள் வழிமுறைகள் பின்வரும் நூற்றாண்டுகளில் என்னவாகும் என்று தெரியுமா?

சத்குரு:

ஆம்! புத்தருக்கு அது தெரிந்தே தான் இருந்தது. புத்தர் ஒரு குருவாக, தன் கற்பிக்கும் செயல் என்னென்ன பின்விளைவுகளை சந்திக்கும் என்று நன்கு அறிந்திருந்தார். நானும் அப்படித்தான். நான் கற்பிப்பதன் விளைவுகளை நன்கு அறிவேன். விளைவுகள் குறித்த முன்யோசனை இன்றி, ஏதோ உந்துதலில் நான் கற்பிக்கவில்லை’

ஒருவேளை திறன் கொண்ட ஒருவர் வந்துவிட்டால், அவர் மூலம் அது இன்னும் பல காலம் நீட்டிக்கப்படும். அது எவ்வளவு காலம் நீட்டிக்கப்படும் என்று கணிக்க முடியாது. ஒருவர் இதே விதையைக் கொண்டு, வேறுவிதமான ஒரு புதிய தோட்டத்தை உருவாக்கலாம். அதில் 500 மாம்பழங்களும் காய்க்கலாம்; 5000 மாம்பழங்களும் காய்க்கலாம். அது இதைக் கையாள்பவரின் திறன் பொறுத்தது.

நான் என் வாழ்வின் சில தன்மைகளைப் பற்றி-அதில் இருக்கும் மிகக் கடினமான சிக்கல்கள், அதைக் கையாள நான் எடுக்கும் தீவிரமான நடவடிக்கைகள் குறித்து-உங்களிடம் பேசினால், நான் வேண்டியதை நடத்திக்கொள்ள இரக்கமின்றி எதையும் செய்யக்கூடியவன் என்று நீங்கள் நினைக்கக் கூடும். அல்லது என்னைக் கடவுள் என்று நினைக்கத் தோன்றும். சில விஷயங்கள் முற்றிலும் நம்பமுடியாததாக, மிகவும் சிக்கலாக இருக்கும். அவற்றை மயிரிழையில் மிகவும் நுட்பமாகக் கையாள்கிறேன். கடவுள் என்றோ அரக்கன் என்றோ, நீங்கள் எப்படி நினைத்தாலும் சரி. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு இருக்கிறது. எனவே, கற்பித்தலுக்கும் ஒரு பின்விளைவு இருக்கிறது. ஏனென்றால், கற்பித்தல் என்பது ஒரு செயல். அதுவும் ஒரு கர்மா தான். நம் வழிமுறைகளும் கர்மா தான். எனவே, எப்போதும் பின்விளைவுகளை கணக்கிட்டுத் தான் செயல்பட வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏதோ ஒன்றை நல்லது அல்லது கெட்டது என்று நம்புபவன் ஒரு முட்டாள். அந்தக் கோணத்தில் எப்போதும் பார்க்கக்கூடாது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு; ஆனால் இதற்கு விளைவு இப்படித் தான் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது. ஒரு செயல் செய்யும்போது, அதன் விளைவுகளை சந்திக்க நீங்கள் தயாரா, என்று மட்டும் தான் பார்க்கவேண்டும்.

குறிப்பாக ஆன்மீகச் செயல்களில் ஈடுபடும்போது, விளைவுகள் மிக அதிகமாகத்தான் இருக்கும். எனவே தான், ஒவ்வொரு குருவும் தன் செயல்களால் அடுத்த நூறு ஆண்டுகளில் அல்லது அடுத்த ஐநூறு ஆண்டுகளில் என்ன பின்விளைவு ஏற்படும் என்று பார்க்கிறார். இத்தனை அற்புதமான யோகிகளும், ஞானிகளும், இமயத்தில் இருந்தும், அவர்கள் ஏன் ஒரு வார்த்தை கூட கற்பிக்கவில்லை என்றால், அதற்கு இதுதான் காரணம். தங்கள் செயல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்த்தார்கள். அதை அவர்கள் எதிர்கொள்ளத் தயாராக இல்லை. எனவே செயல்பட வேண்டாம் என்று முடிவு செய்தார்கள். அதனால்தான் அவர்கள் எதையும் கற்பிக்கவில்லை. அவர்கள் தம் சக்திநிலையை குறிப்பிட்ட விதத்தில் நிலைநிறுத்திச் சென்றார்கள். இதற்கும் விளைவு உண்டு. ஆனால் அந்த விளைவு மிகக் குறைவாக இருக்கும். எனவே தான், பிறரை ஈடுபடுத்தாமல் அவர்கள் மட்டும் ஈடுபடும்படியான செயல்களை மட்டும் செய்தார்கள். தங்களை, தம் சக்தியின் மூலம் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

எவ்வித எதிர்ப்பும் இல்லாமல், யாராவது அங்கு வந்தால் நல்லது. அப்படிப்பட்டவர் எவரும் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. அங்கு ஒரு கழுதை மேய்ந்தாலும் பரவாயில்லை; ஒரு மலையேற்ற வீரர் நடந்தாலும் பரவாயில்லை. ஒரு பக்தர் வந்து அமர்ந்து உள்நிலையில் வெடித்தெழுகிறார், அதுவும் பரவாயில்லை. இப்படி எது நடந்தாலும் பரவாயில்லை என்று செயல்படுவது தான் மிகவும் அறிவுப்பூர்வமானது. ஆனால், கற்பித்தல் என்று இறங்கிவிட்டால் அதன் பின்விளைவுகள் என்னவென்று நிச்சயம் யோசிக்க வேண்டி இருக்கிறது.

எனவேதான் கௌதம புத்தர், “நான் ஆண்களுக்கு மட்டும் தீக்ஷை கொடுத்தால், 2500 ஆண்டுகளுக்கு இந்த ஆன்மீக செயல்முறை தொடரும். ஆனால் பெண்களுக்கு தீக்ஷை கொடுத்தால் இந்த செயல்முறையின் ஆயுட்காலம் 2000 ஆண்டுகள் குறைந்துவிடும்” என்று கூறினார். அப்படியானால் பெண்களிடம் ஏதாவது தவறா? அது அப்படி அல்ல. இது ஒரு பின்விளைவு, அவ்வளவு தான். ஆண்களும் பெண்களும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகத் தான் இங்கு வருகிறார்கள். குருவின் முன்னிலையில் இருக்கும் தருணங்களில் ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வத்துடன் தான் இருக்கிறார்கள். அப்போது ஆண், பெண் என்ற நினைவு கூட எழுவதில்லை. ஆனால் குருவானவர், அந்தப்பக்கம் சென்றவுடன், கண்களைத் திறந்து சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். இப்போது நான் ஆண், நான் பெண் என்ற உணர்வுதான் பிரதானமாகி விடுகிறது. பிறகு அங்கு ஆன்மீகம் நிகழ வாய்ப்பில்லை. ஆண்-பெண் உணர்வு தான் மிஞ்சும். இப்படி ஆண்-பெண் உணர்வுடன் இருப்பதற்கு நீங்கள் ஒரு ஆன்மீகக் குழுவில் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை; வேறெங்காவது அதை நடத்திக் கொள்ளலாமே. எனவே கௌதமர் அப்படிச் சொன்னது சரி தான். அதில் தவறேதும் இல்லை.

அவர், தான் கற்பித்தவையெல்லாம் அதிக காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே தான், அதில் இருந்த சுவை அனைத்தையும் வடிகட்டி விட்டார். அவர் கற்பித்தவை எல்லாம் வறண்ட தன்மை கொண்டதாக இருந்தது. அந்த வறட்சியால் தான், அவர் கற்பித்தவை எல்லாம் அதிககாலம் அப்படியே மாறாமல் தொடர்ந்து இருந்தன. அவை உயிர்ப்புடனும் சுவையுடனும் இருந்திருந்தால், அது இந்நேரம் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் அனுமானம் செய்யப்பட்டிருக்கும். மாற்றிப் புரிந்துகொள்ள வழியேயில்லாமல், வறண்ட தன்மையில் வழங்கப்பட்டதால், அவர் கற்பித்தவையெல்லாம் பல நூற்றாண்டுகள் தொடர்ந்துள்ளன. இருந்தாலும் அவர் சொன்னவைகளில் சில தற்போது மிக மோசமாகப் புரிந்துகொள்ளப் படுகின்றன என்பதையும் மறுக்கமுடியாது.

கௌதம புத்தர், “நான் ஆண்களுக்கு மட்டும் தீக்ஷை கொடுத்தால், 2500 ஆண்டுகளுக்கு இந்த ஆன்மீக செயல்முறை தொடரும். ஆனால் பெண்களுக்கு தீக்ஷை கொடுத்தால் இந்த செயல்முறையின் ஆயுட்காலம் 2000 ஆண்டுகள் குறைந்துவிடும்” என்று கூறினார். அப்படியானால் பெண்களிடம் ஏதாவது தவறா? அது அப்படி அல்ல. இது ஒரு பின்விளைவு, அவ்வளவு தான்.

ஈஷாவை எடுத்துக் கொண்டால், இந்த ஆன்மீகமுறை மிகுந்த உயிரோட்டத்துடன் இன்னும் 600 முதல் 700 ஆண்டு காலம் தொடரும். பிறகு சற்றே குறைந்து போகும். ஆனால் குறைவான அளவில் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எது எப்படி இருந்தாலும், ஈஷாவில் நாம் நிலைநிறுத்தியுள்ள சக்திநிலை மட்டும், அழிவே இல்லாதது. யாரும் அதை அழிக்க முடியாது. எனவேதான் கற்பித்தல், சக்திநிலையிலான செயல்பாடுகள் என இந்த இரண்டிலும் ஒரு சமநிலையுடன் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இப்போது ஈஷாவில் கற்றுக் கொடுத்தல் தான் பெரும் செயல் போல் தோன்றலாம். ஆனால் உண்மையில், என் வாழ்வில் கற்பித்தல் என்பது சிறிய பங்கு தான் வகிக்கிறது. என் செயல்முறைகள் எல்லாம் நான் பேசுவதிலோ, நான் உலகெங்கும் சென்று செய்யும் செயல்களிலோ, இல்லை. என் உண்மையான செயல்முறை, நான் தொடர்ந்து இடும் முட்டைகள் தான். அவை எப்போதும் அப்படியே நிலைத்திருக்கும்.

எனவே சக்திநிலையில் செயல்முறைகள் செய்யும்போது, அது சரியாக பராமரிக்கப்பட்டு வந்தால் ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருந்தாலும் சரி, அதை உணரும் திறனுடன் ஒருவர் அங்கு வந்தால், அங்குள்ள சக்திநிலை அவர் உள்தன்மையைத் தொட்டுவிடும். ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும், இந்த ஆன்மீக முறை உடனே புத்துயிர் பெற்றுவிடும். அப்படி திறன் கொண்ட யாரும் வரவில்லை என்றால், இந்த ஆன்மீகமுறை இன்னும் 600, 700 ஆண்டுகளுக்கு மட்டுமே தொடரும். ஒருவேளை திறன் கொண்ட ஒருவர் வந்துவிட்டால், அவர் மூலம் அது இன்னும் பல காலம் நீட்டிக்கப்படும். அது எவ்வளவு காலம் நீட்டிக்கப்படும் என்று கணிக்க முடியாது. ஒருவர் இதே விதையைக் கொண்டு, வேறுவிதமான ஒரு புதிய தோட்டத்தை உருவாக்கலாம். அதில் 500 மாம்பழங்களும் காய்க்கலாம்; 5000 மாம்பழங்களும் காய்க்கலாம். அது இதைக் கையாள்பவரின் திறன் பொறுத்தது.

1890 களில் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஒரு பிஷப் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக ஓஹியோ மாகாணத்திற்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஒரு இளம் மந்திரியைச் சந்தித்தார். அந்த மந்திரி, ஒரு வேதியியல் விரிவுரையாளரும் கூட. தேவைப்படும்போது, பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்துவார். பிஷப் அந்த மந்திரியிடம் சென்று, “உலகம் தன் முடிவை நெருங்கிவிட்டது என்று நான் நினைக்கிறேன். மனிதனால் என்னவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் மனிதன் செய்துவிட்டான், எனவே முடிவு நெருங்கிவிட்டது என்றே தோன்றுகிறது” என்று கூறினார்.

அதை அந்த மந்திரி ஒப்புக்கொள்ளவில்லை. “அப்படிக் கூறமுடியாது. அடுத்த ஐம்பது வருடங்களில் மனிதனின் கண்டுபிடிப்புகள் அதிகமாகும். முன் எப்போதையும் விட, அதிக கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவான். மனிதன் வானில் பறப்பது கூட சாத்தியமாகலாம்” என்றார்.

“மனிதனால் பறக்க முடியாது. பறப்பது என்பது தேவதைகளுக்கே உரித்தான செயல்” என்று மந்திரியின் கருத்திற்கு பிஷப் மறுப்பு தெரிவித்தார். ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘வில்பர்‘ மற்றும் ‘ஆர்வில்’ இருவரும், முதல் விமானத்தை வடிவமைத்து வானில் பறந்தனர். அவர்கள் யார் தெரியுமா? பறப்பது மனிதனுக்கு இயலாது என்று கூறிய அதே பிஷப்பின் மகன்கள் தான். எனவே, வருங்காலத்தில் யாரேனும் ஒருவர், ஈஷாவை எவ்வகையில் மேம்படுத்துவார் என்று இப்போதே எப்படி சொல்லமுடியும்?