ஈஷாவில் ஏன் மந்திரங்கள் இல்லை, மந்திரங்களின் தேவை எப்போது வரும்... இவற்றைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விளக்குகிறார் சத்குரு.

ஈஷாவில் மக்களை ஒன்றாக இணைப்பதற்கும், ஒரு சக்தி சூழலை உருவாக்குவதற்கு மட்டுமே மந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் "மந்திர சாதனா" என்பது இங்கே கிடையாது. பிரம்மச்சாரிகள் மட்டுமே, முற்றிலும் வேறு சில காரணங்களுக்காக ஒரு சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் ஆன்மிக செயல்முறையில் மந்திரங்களுக்கு ஒன்றும் பங்கு இல்லை. நாம் இதுவரை செய்தவற்றில் முற்றிலும் சிக்கலான ஒன்றான தியானலிங்க பிரதிஷ்டை நிகழ்ந்த பொழுதும் மந்திரங்கள் எதுவுமே இல்லை. மக்களை ஒன்றாக, ஈடுபாட்டோடு வைத்திருக்கவும், சுற்றி ஒரு "ஆரா" உருவாக்க சிறிய அளவில் மந்திரங்களின் உபயோகம் இருந்தது. ஆனால் அடிப்படை செயல்முறையில் எந்தவித மந்திர உபயோகமும் இருக்கவில்லை. முற்றிலும் ஒரு சக்தி செயல்முறையாக மட்டுமே அது நிகழ்ந்தது.

இப்பொழுது அதை அனுபவிப்பதற்கான ஒரு காலம். வெறுமனே இங்கே அமர்ந்து அதிலேயே வெடித்துப் போகலாம். அதைப் பருக நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சும்மா உட்கார்ந்து மந்திரங்கள் உச்சரித்துக் கொண்டிருக்கும் சமயம் அல்ல இது. மிகுந்த பயனுள்ள பரிமாணம் எதுவும் உங்கள் எவருக்குமே நிகழவில்லை என்றால், பிறகு ஒரு நாள் மந்திரங்கள் நிகழும். அவை பயனற்றவை என்று சொல்ல வரவில்லை. அது ஒரு மாற்று வழி மட்டுமே. சப்தங்களை உச்சரிப்பதன் மூலம் ஒரு அதிர்வை உருவாக்க முயற்சி செய்கிறீர்கள். எந்தவித சப்தமும் ஏற்படுத்தாமலே நாம் விரும்பும் அதிர்வை உருவாக்க முடியும். என் இருப்பின் சாரமே அதுதான். மந்திரங்கள் சிறிது என்னை எரிச்சலடைய செய்கின்றன, பின் வாசல் வழியாக உள்ளே நுழையும் ஒரு முயற்சி அது என்பதால். வேலை செய்யாது என்று இல்லை. வேலை செய்யும்தான். ஆனால் பின்வாயில் வழியாக ஏன் நுழைய வேண்டும்? அணுகும் வழி தெரியா விட்டால், ஜன்னல் வழியே ஏறி வரலாம். முன் கதவை திறந்து உள்ளே புக முடியும் என்று வாய்ப்பு இருக்கும் பொழுது அதுதான் சிறந்த வழியாக இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மந்திரங்களுக்கு என்று அழகு உள்ளது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மௌனத்தை விட சிறந்தது எதுவும் இல்லை. நம்முள்ளே உறையும் விழிப்புணர்வு எனும் அடிப்படை சக்தியை விட பெரிதானது ஒன்றும் இல்லை. அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறியாவிட்டால், அதை செய்யும் உகந்த சில சப்தங்களை உருவாக்கலாம். ஆனால் உங்கள் விழிப்புணர்வுடன் அதை ஒப்பிட முடியாது. எந்த ஒரு சப்தத்தையும், எந்தவித புறமுறைகளையும் நம்முள்ளே துடித்துக் கொண்டிருக்கும் படைப்பின் அடிப்படை மூலத்தோடு ஒப்பிட முடியாது. படைப்பின் அடிப்படை மூலம் வெளிப்படுவதை எப்படி அனுமதிப்பது என்று தெரிந்து விட்டால், பிறகு எதற்கு உட்கார்ந்து மந்திரம் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும்?

நாம் உருவாக்க விழையும் சூழல் சற்று கடுமையான ஒன்றாக இருக்குமானால் ஒரு நாள் முழுவதும் மந்திரம் உச்சரித்துக் கொண்டிருக்கலாம். ஆனாலும் அது அடிப்படையான செயல்முறை அல்ல. ஒரு தயார் நிலை படியாகவே உபயோகப்படுத்தப் படுகிறது. ஈஷா யோகா மையத்தில், மந்திர உச்சாடனை ஒரு பிரதான செயல்முறையாக மாறாமல் இருக்க உங்களில் சிலர் உறுதியுடன் இருக்க வேண்டும். வருங்கால சந்ததியின் பொறுப்பு இது.

உங்கள் விழிப்புணர்வு உயர்வதை நீங்கள் அனுமதிக்க விருப்பமா அல்லது நாள் முழுவதும் மந்திரம் உச்சாடனை செய்து கொண்டிருக்க வேண்டுமா? மந்திரம் என்பது அழகான ஒரு ஆயத்த நிலை. அதையே ஒரு பாதையாக பயன்படுத்த நினைத்தால், அது ஒரு விரிவான செயல்முறையாக இருக்கும். மந்திரத்தின் அனுகூலம் என்னவென்றால் நீங்கள் வெறும் ஒரு டேப் ரெகார்டர் ஆக இருந்தால் போதும். அது வேலை செய்யும். விழிப்புணர்வின் அழகு என்னவென்றால், நீங்கள் குறிப்பாக எதையும் செய்யத் தேவை இல்லை. ஆனால் எதுவுமே செய்யாது இருந்தாலும் ஒன்றும் நிகழாது. இது தந்திரம் அல்ல. நீங்கள் குறிப்பாக எதுவும் செய்யத் தேவை இல்லை. செய்யும் அனைத்தையும், வாழ்வின் இறுதி விஷயமாக, செய்யப் போகும் ஒரே விஷயமாக, வாழ்வே அதை சார்ந்து இருப்பதாக நினைத்து செய்தால், தனியாக எதுவும் செய்யத் தேவை இல்லை. உங்களுக்கு நிகழ்ந்தது எல்லாம், உங்களை சுற்றி பல நிலைகளாக பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தி இறுக்கமான ஒரு உயிராக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

அடிப்படையில் வாழ்க்கை நடப்பது, அதன் பதில் கொடுக்கும் திறனால்தான். அத்துணை சிக்கலான வாழ்வு, ஆனால் எளிமையான காற்று இயக்கம் நின்று போனால் அது முடிந்து போகும். பதில் கொடுக்கும் தன்மை எளிமையான ஒரு விஷயம்தான், ஆனால் அடிப்படையான ஒன்று. சுவாசம் மட்டும் அல்ல, லட்சக்கணக்கான பல வழிகளில் நீங்கள் இந்த கணத்தில் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கற்பனை செய்தும் பார்க்க முடியாத பல வழிகளில் முழு பிரபஞ்சத்துக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பதில் கொடுப்பது நின்று போனால் அதுவே முடிவு.

உங்களுக்குள் ஒரு விதமான துறக்கும் உணர்வு வந்து விட்டால் நீங்கள் குறிப்பாக எதுவும் செய்யத் தேவை இல்லை. இது பைத்தியக்காரத்தனமான செயல்கள் செய்வதனால் அல்ல, உங்களுள் எதையும் பிடித்து வைக்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் சாத்தியம். உகந்த சூழல் மட்டுமே தேவை. இறுக்கமான, தடை செய்யப்பட்ட சூழலாக இல்லாது, உகந்த ஒரு சூழல் தேவை. சுயம் பேணுதல், சுயம் பாதுகாத்தல் என நீங்கள் உருவாக்கிய சுவர்கள் அனைத்தும் நீங்களே உருவாக்கிக் கொண்ட சிறைகளின் சுவர்கள்தான். துரதிர்ஷ்டவசமாக பலரும் இதை உணர வாழ்நாள் முழுதும் எடுத்துக் கொள்கிறார்கள்.

தனிநபர் பிரபஞ்சத்துடன் கொண்டுள்ள பரிவர்த்தனையின் ஆழமான இயல்பை அறிந்து கொள்வீர்களாக!

Love & Grace