ஈஷா யோகா மையம் வந்து ஈஷா க்ரியாவும் ஓம்கார தீட்சையும் பெற்றுச் சென்ற 60 பெண்கள் பற்றியும் அவர்கள் அனுபவங்கள் பற்றியும் சில வார்த்தைகள் இங்கே!

தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையும் ஈஷா அறக்கட்டளையும் இணைந்து ஈஷா யோக மையத்தில் ஏப்ரல் 23ம் தேதியன்று “வாழ்க்கைத்திறன் கல்வி முகாம்” நிகழ்ச்சியை வழங்கின. அன்னூர் மற்றும் SS குளம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த 60க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் இதில் கலந்துகொண்டனர்.. இவர்கள் அனைவரும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட, முறையான கல்வி வசதியும் வாய்ப்பும் பெற இயலாத பெண்கள் ஆவர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பள்ளிக்கல்வியிலிருந்து விடுபட்ட அல்லது பல்வேறு காரணங்களால் கல்வியைத் தொடர இயலாத மாணவியர்களுக்கு உதவுவதற்காக மத்திய-மாநில அரசாங்கங்கள் பயிற்சி முகாம்கள் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக யோகா மற்றும் தியானம் ஆகியவை ஈஷா யோக மையத்தில் இவர்களுக்கு பயிற்றுவிக்கபட்டன.

இம்முகாமின் வெற்றியில் நமது தன்னார்வத் தொண்டர்களின் ஒத்துழைப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் மூலம் இவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டாலும், யோகா இவர்கள் வாழ்வை வெகுவாக சீரமைக்க உதவும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இவர்கள் மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார்கள். இத்திட்டமானது ஒருமுகத்தன்மையை மேம்படுத்துதல், குணநலன் மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இவர்களுக்கு சக்தி வாய்ந்த தியான பயிற்சிகளான ஈஷா க்ரியா மற்றும் ஓம்கார தியானம் கற்றுக்கொடுக்கப்பட்டது, இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மனக்குவிப்புதிறன், ஆளுமை மற்றும் ஆரோக்கியம் முதலியவை மேம்பட வாய்ப்புள்ளது.

தாம் பெற்ற இன்பத்தை இவர்களும் உணர வேண்டும் என்ற நோக்கில் இவர்களை ஈஷா மையத்திற்கு கூட்டி வந்து, தியானலிங்க தரிசனமும் லிங்கபைரவி அருளும் பெறச் செய்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி நிர்மலா (அன்னூர்) அவர்களும், வளர்மதி (கோயில்பாளையம்) அவர்களும் ஏற்கனவே ஈஷா யோகா பயிற்சி பெற்று பயன் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி திருமதி. நிர்மலா கூறுகையில்...

"நான் ஈஷா யோகா 7 நாள் வகுப்பான ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி கத்துகிட்டேன். தினமும் பயிற்சி பண்ணிட்டு வர்றேன். இதனால என் வாழ்க்கையில கிடைக்குற ஆனந்தமும் உற்சாகமும் வார்த்தையில சொல்ல முடியாது. அப்புறம் எங்க வீட்டுல உள்ளவங்களுக்கு ஈஷா க்ரியா சிடி வாங்கி தியானம் கத்துக்கொடுத்தேன். அந்தப் பயிற்சி அவங்ககிட்ட பெரிய மாற்றத்த ஏற்படுத்துறத என்னால பாக்க முடிஞ்சது.

இந்த பயிற்சி முகாம்ல ஒரு பகுதியா மனம் ஒருங்கிணைப்பு மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டுப் பயிற்சிகள் இருக்குது. அத குடுக்குறதுக்கு எனக்கு ஈஷா யோகா மையம்தான் சரியான இடம்னு தோணுச்சு. இந்தப் பெண்களுக்கு ஈஷா க்ரியா பெரிய பக்க பலமா இருக்கும்னு நெனச்சேன். அதனால் நானும் திருமதி வளர்மதியும் இவங்கள கய்டு பண்ணி கூட்டி வந்தோம்.

இந்த பயிற்சி முடிஞ்சு போகும்போது இந்த பெண்கள் சொன்னது என்னன்னா... 'நாங்க இந்த நாள வாழ்க்கையில மறக்க மாட்டோம்'னு சொன்னாங்க!"