உலக பூமி தினத்தை முன்னிட்டு, இன்று ஈஷாவில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம் பற்றி தொடர்ந்து படித்து அறிந்துகொள்ளுங்கள்!

நாம் ஒவ்வொருவரும் இந்த சுற்றுச்சூழலிடமிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு அதற்குப் பதிலாக கார்பன்டை ஆக்ஸைடை நமது கால்தடங்களாக விட்டுச் செல்கிறோம். எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனுக்கு பதிலாக நாம் விட்டுச் செல்லும் 'கார்பன்' கால் தடங்களைக் குறைக்க வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளாவது நடவேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆனால், இன்று பலருக்கும் சுற்றுச்சூழல் குறித்த கவனம் இருப்பதாய் தெரியவில்லை. அடுத்த தலைமுறைக்கு எதையும் விட்டுவைப்பதற்கு மனம் யாருக்கும் இல்லை போலும்! நாம் அடுத்த தலைமுறைக்கென உயர்வான ஒன்றைக் கொடுக்க நினைத்தால், அது மாசில்லா நல்லதொரு சுற்றுச்சூழலைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது.

பொதுவாக, ஒரு வளர்ச்சியடைந்த மரமானது, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான 260 பவுண்ட் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றது. அப்படியானால் சுற்றுச்சூழல் நலம் பெற நாம் ஆளுக்கொரு மரமாவது நடவேண்டும். ப்ளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகள் பயன்படுத்தலாம். மின்சாரத்தை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துவதை நிறுத்தலாம். கூடுமானவரை மோட்டார் வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லலாம்.

இதுபோன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னிறுத்தி உலக பூமி தினத்தை முன்னிட்டு, ஈஷாவில் மாரத்தான் ஓட்டம் இன்று நிகழ்ந்தது.

சத்ரபதி சிவாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் கோவை ஈஷா பசுமைக் கரங்களுடன் இணைந்து இந்த மாரத்தான் ஓட்டப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. ஈஷாவில் உலக பூமி தினத்திற்காக முதல் மாரத்தான் போட்டியாக நிகழ்ந்த இப்போட்டி, ஈஷா யோக மையத்தில் சூரிய குண்டம் நுழைவு வாயிலில் காலை 6.30 மணிக்கு துவங்கியது. இப்போட்டியில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்புவிடுத்திருந்தது ஈஷா. போட்டியில் கலந்துகொள்ள அலைபேசி மூலம் முன்பதிவு செய்யப்பட்டது.

சூரியகுண்டத்தின் முன் துவங்கிய மாரத்தான் ஓட்டமானது முட்டத்துவயல், செம்மேடு, இருட்டுப்பள்ளம் வரை சென்று, மீண்டும் ஈஷாவில் வந்து நிறைவடைந்தது. போட்டிக்கான தூரம் சுமார் 15 கி.மீ.

இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழியெங்கும் 4, 5 இடங்களில் தண்ணீர், ஜுஸ், குளுக்கோஸ் போன்றவை வழங்கப்பட்டன. வழியெங்கும் பொதுமக்கள் ஆரவாரித்து உற்சாகப்படுத்தினர். இந்த மாரத்தான் நடத்தப்படும் நோக்கத்தையும் கேட்டறிந்தனர். இதில் கலந்து கொள்வதற்காக கோவையிலிருந்து கல்லூரி மாணவர் முதல் அரசுப்பணிகளில் உள்ளவர் வரை வந்திருந்தனர். ஆசிரமத்தில் இருந்த தன்னார்வத் தொண்டர்களும் எவ்வித ஆயத்தங்கள் இல்லாமல் இருந்தாலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, 15 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு என இப்போட்டி மூன்று பிரிவுகளாக நடந்தது. மொத்தம் 150க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தானில் கலந்து கொண்டனர். போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களோடு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

ஜுன் 5ல் நடைபெற உள்ள உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டங்களுக்கான முதல்படியாக இந்த சுற்றுச்சூழல் மாரத்தான் அமைந்தது. இதைத் தொடர்ந்து இதைப் போன்று பல நிகழ்ச்சிகள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் ஈஷா சார்பில் நடைபெறவுள்ளன.