ஈஷாவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா, ஈஷா வித்யாவிற்காக நிதி திரட்டிய சத்குரு - இவைப் பற்றி இந்த வார ஈஷா நிகழ்வுகளில் இங்கே பதிகிறோம்.

பொங்கல் திருவிழா!

ஈஷா யோகா மையத்தில்...

ஜனவரி 16 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் பொங்கல் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டங்களில் உலகம் முழுவதிலுமிருந்து 2500 பேர் கலந்து கொண்டனர். முதலாவதாக நடைபெற்ற கோலப்போட்டியில், ஈஷா தியான அன்பர்கள் கலந்து கொண்டு, தமிழ் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கோலங்களை வரைந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், பங்கேற்பாளர்கள் 7 குழுவாகப் பிரிக்கப்பட்டனர். மாடுகளை நினைவு கூறும் வகையில், காங்கேயம் காளை, செவலக் காளை, மச்சக் காளை, மருதக் காளை, மயிலக் காளை, ஜல்லிக்கட்டு காளை, கோயில் காளை என்று ஏழு தலைப்பில் பிரிக்கப்பட்ட அவர்கள், மாட்டுச் சாணத்தை பயன்படுத்தி "பொங்கல் வாழ்த்து" என்ற வார்த்தையை உருவாக்கினர். நம்மோடு கூடிவாழும் பசுக்களின் சேவையை நமக்குள் ஆழமாய் பதிக்கும் முயற்சி இது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷாவிலுள்ள மாட்டுத் தொழுவத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, அவைகளின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் பொங்கலும் கரும்பும் அவைகளுக்கு படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆதியோகி ஆலயத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களும், ஈஷா சமஸ்கிருதி மாணவர்களும் தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.

இந்தப் பொங்கலை முன்னிட்டு, 30 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வந்திருந்த அனைவருக்கும் பொங்கல் பதார்த்தங்களைத் தயாரித்தனர். தமிழக கிராம விழாக்களில் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கூட்டாஞ்சோறு பரிமாறி உண்பர். அதைப் போலவே ஈஷா பொங்கல் நிகழ்ச்சியிலும் கூட்டாஞ்சோறு உண்டனர். 10 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பொங்கல் சமைக்க, 10 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டுக் காய்கறி சேர்த்த கூட்டுக்கறி சமைக்க, 10 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இனிப்புகளைச் சமைத்து அனைவருக்கும் இரவு உணவு பரிமாறினர்.

பசுமைக் கரங்களில்...

ஈஷாவில் பொங்கல் திருவிழா!, Pongal in Isha

ஈஷா பசுமைக் கரங்களின் நர்சரிகள் இயங்கி வரும் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சேலம், கோபி ஆகிய இடங்களில், பசுமைக் கரங்கள் திட்டத்தில் செயலாற்றும் தன்னார்வத் தொண்டர்கள், பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்தப் பொங்கல், தேவிக்கு படையலிடப்பட்டு, சத்குரு சந்நிதியில் குரு பூஜையும் நடைபெற்றது. ஒவ்வொரு நர்சரியிலும் 40 க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

சேலத்தில்...

சேலம் குள்ளப்பநாயக்கனூரில் அமைந்துள்ள ஈஷா ஆரோக்யா கிராம மருத்துவமனை சார்பில், சேலத்தைச் சுற்றியுள்ள 7 கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஜனவரி 16, 17 தேதிகளில் நடந்த இந்த விழாவில், அந்த கிராமத்தினர் சேர்ந்து "ஊர் பொங்கல்" கொண்டாடி கிராமத்தினர் அனைவருக்கும் பொங்கல் பரிமாறினர். ரங்கோலி போட்டி, கலை நிகழ்ச்சிகள் என்று கோலாகலமாக நடந்து முடிந்தது இந்தத் திருவிழா.

மும்பையில் கோல்ஃப் நிகழ்ச்சி

ஜனவரி 9ம் தேதியன்று, ஈஷா அறக்கட்டளை சார்பில் மும்பையில் நடைபெற்ற "Make A Life Golf Jaunt" கோல்ஃப் விளையாட்டில் 73 கார்ப்பரேட் நிறுவனங்கள் கலந்துகொண்டன. சத்குருவுடன் இந்நிகழ்ச்சியில் கைகோர்த்த இந்த நிறுவனத்தினர், ஈஷா வித்யா குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி திரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.