கடந்தவாரம், தமிழகம் முழுவதும் தமிழ்ப் புத்தாண்டை பலவாறு கோலாகலமாகக் கொண்டாட, ஈஷாவில் தமிழ்ப் புத்தாண்டு எப்படி களைகட்டியது என்பதை இந்த வார ஈஷாவில் நடந்தவையில் படித்து மகிழுங்கள்!

ஈஷாவில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14, முழு நிலவோடு அமைய, தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஈஷா யோகா மையத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டன. பௌர்ணமியன்று லிங்கபைரவியின் உற்சவ மூர்த்தி ஊர்வலம் சிறப்பாக நிகழ்ந்தது. ஊர்வலத்தின்போது, தியானலிங்கத்தின் முன் நடைபெற்ற நெருப்பு நடனம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு லிங்கபைரவியில் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தேவிக்கு "சித்திரைக் கனி" படைத்தனர். லிங்கபைரவி வளாகம் முழுவதும் பக்தர்களின் கனி அர்ப்பணிப்பால் நிறைந்திருந்தது. தியானலிங்க வளாகத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தியானலிங்கத்தின் அருள் பெற்று புத்தாண்டைத் தொடங்கினர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.


7
6

"ஜெய" வருடத்தை வரவேற்ற ஈஷா சம்ஸ்கிருதி

தமிழ்ப் புத்தாண்டான "ஜெய" வருடத்தை வரவேற்கும் விதமாக ஏப்ரல் 15ம் தேதி மாலை ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஆதியோகி ஆலயத்தில் துவங்கிய இந்தக் கலை நிகழ்ச்சியில், மாணவர்கள் வழங்கிய களரிப்பயட்டு வீரவிளையாட்டு பார்ப்பவர்களை மெய்மறக்கச் செய்தது. உடலை வில்போல் வளைத்து அவர்கள் செய்த களரிவந்தனம், மெய்ப்பயட்டு மற்றும் குறுங்குச்சி விளையாட்டுக்கள் அவர்களின் திறம்மிகு உடல் அமைப்பினை பறைசாற்றின.

அனல் பறந்த களரிபயட்டு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. கலைநுட்பத்தோடு அமைந்த இந்நிகழ்ச்சி, கண்களுக்கு நல்விருந்தாகவும் அமைந்தது. வரவேற்பை வெளிப்படுத்தும் 'அலாரிப்பூ' எனும் நடனத்துடன் துவங்கிய நாட்டிய நிகழ்ச்சியில், தொடர்ந்து சிவனின் பிரபஞ்ச நடனத்தை வெளிப்படுத்தும் வகையில் 'சங்கரஸ்ரீகிரி' எனும் கீர்த்தனத்திற்கு அபிநயங்கள் அழகாக அரங்கேறின. நிகழ்ச்சியில், பல அழகிய கீர்த்தனங்களையும் அற்புத நாட்டியங்களையும் ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் வழங்க, கண்டுகளித்த அனைவரும் கலைவிருந்தில் திளைத்தனர்.

1
2
3

ஈஷா கிராமிய கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள்

கோவை ஈஷா யோக மையத்தின் அருகிலுள்ள குப்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, ஈஷா கிராமியக் கலை குழுவின் சார்பில் பலகலை நிகழ்ச்சிகள் ஏப்ரல் 14ம் தேதியன்று நடைபெற்றன. முள்ளாங்காடு, முட்டத்துவயல், இருட்டுப்பள்ளம், பட்டியார்கோவில்பதி மற்றும் தொம்பிலிபாளையம் ஆகியகிராமங்களில் உள்ள, ஈஷா கிராமியகலைக் குழு சார்பில் பயிற்சி பெற்ற 23 குழந்தைகள் இந்நிகழ்ச்சியில், தேவராட்டம், ஒயிலாட்டம், படுகர் நடனம், லம்பாடி நடனம் ஆகியவற்றில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.