வீரேந்தர் சேவாக் - சத்குருவை தில்லியில் சந்தித்தவர், ஈஷாவின் மேல் ஆர்வம் கொண்டு, மையத்திற்கு வந்து, தியானலிங்கம் தரிசித்து, ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களுக்கு கிரிக்கெட் உக்திகளையும் கற்றுக் கொடுத்தார். அவரின் ஈஷா விஸிட்டில் நடந்த நிகழ்ச்சிகள் உங்களுக்காக...

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக், ஈஷா யோகா மையத்திற்கு வந்திருந்தார். ஈஷா ஹோம் ஸ்கூல் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டவர், சில பயிற்சி நுணுக்கங்களையும், யுக்திகளையும் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

மாணவர்களுடனான உரையாடலில், அவர்கள் கேள்வி கேட்க சேவாக் பதிலளிக்க என சுவாரஸ்யமாய் கழிந்தது அன்றைய பொழுது. அதிலிருந்து சில துளிகள் உங்களுக்காக...

மாணவர்: IPL, ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி - இவற்றில் உங்களுக்கு பிடித்தது எது?

சேவாக்: நிச்சயமாக ஐ.பி.எல் தான். IPL'ல் எனக்கு 2.5 மில்லியன் டாலர்கள் கொடுக்கிறார்கள், மற்ற போட்டிகளில் வெறும் 2 லட்சம்தான் கிடைக்கிறது (சிரிப்பலை). ஆனால் என்னைப் பொருத்தவரை டெஸ்ட் போட்டிகளே சோதனையானவை. அதில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம்.
23 oct 13 mid 2

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

23 oct 13 mid 7

மாணவர்: உங்கள் ரோல் மாடல் யார்?

சேவாக்: சச்சின் டெண்டுல்கர், மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ்.

மாணவர்: நீங்கள் பார்த்து பயந்த பந்து வீச்சாளர் என யாரைச் சொல்லமுடியும்?

சேவாக்: பாகிஸ்தானின் சோஹைப் அக்தர். 1999ல் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியே என் முதல் போட்டி. அப்போது அக்தரின் முதல் பந்திலேயே நான் ரன் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினேன். அதன்பின் ஓய்வறையில் இருந்தபோது, கேப்டன் சௌரவ் கங்குலி என்னிடம், "இந்திய அணியில் இடம் பிடிப்பது சுலபம், ஆனால் அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்வது மிகவும் கடினம். நீ இன்னும் உன்னை தயார்படுத்திக் கொண்டு வா," என்றார். பிறகு நான் சில உள்ளூர் போட்டிகளில் விளையாடி, வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே எதிர்கொண்டு பயிற்சி எடுத்து, மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தேன். அதன்பின் வேகப்பந்தை எதிர்கொள்வது எனக்குச் சுலபமாகிவிட்டது.

மாணவர்: உங்கள் அதிகபட்ச ஸ்கோர்கள் என்னென்ன?

சேவாக்: டி20 - 119, ஒருநாள் போட்டி - 219, டெஸ்ட் - 319 (இந்த விடை கேட்ட மாணவர்கள், எண்களில் உள்ள ஒற்றுமைக் கண்டு ஆச்சரியத்தில் புன்னகைத்தனர்)

மாணவர்: 2011 உலகக் கோப்பையை வென்ற அனுபவம்...

சேவாக்: அணி முழுவதும் காற்றில் மிதந்தது. என் கால்கள் பூமியிலேயே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உன்மையைச் சொல்ல வேண்டுமென்றால், 1983க்கு பிறகு இந்தியா உலகக் கோப்பையை வெல்லவில்லை. அதனால் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக இருந்தோம். நான் 2003, 2007 உலகக் கோப்பைகளில் விளையாடினேன், 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நாளன்று அணி வீரர்கள் அனைவரும் கதறி அழுதோம், அந்தத் தோல்வி மறக்க முடியாதது. பிறகு 2007 உலகக் கோப்பையின் ஆரம்பச் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டோம். அதனால் 2011 உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்ற உறுதியுடன் அதற்கான பயிற்சியை 2008லிருந்தே துவங்கினோம். 2008ம் ஆண்டிலிருந்து நடந்த ஒவ்வொரு போட்டியையும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போன்றே எதிர்கொண்டு விளையாடினோம். அதன் பலனாக 2011 உலகக் கோப்பையில் நடந்த ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்ற முடிந்தது. அது என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.

மாணவர்: கிரிக்கெட் விளையாடத் துடிக்கும் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு, நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

சேவாக்: விளையாட்டு என்பது உங்களின் விருப்பத்தினால் நடக்க வேண்டுமே தவிர, அதை நீங்கள் ஒரு பொழுதுபோக்கிற்காக செய்யக் கூடாது. அதில் ஈடுபாடு இருந்தால் மட்டுமே உங்களால் சாதிக்க முடியும். தோல்வியைக் கண்டு துவளாமல் ஈடுபாட்டுடன் பயிற்சி செய்தால் நாளடைவில் உங்கள் திறமை வளரும், பிறகு வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
23 oct 13 mid 1

மேலும், தன்னுடைய பயிற்சியாளர், தன் குடும்பம் மற்றும் தான் கடந்து வந்த வெற்றி தோல்விகளைப் பற்றி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு யதார்த்தமாகவும், நகைச்சுவையுடனும் பதிலளித்தவர், இடையிடையே, தன்னுடன் விளையாடிய வீரர்கள் மற்றும் தான் எதிர்கொண்ட பிற நாட்டு கிரிக்கெட் வீரர்களின் திறமையையும் போற்றத் தவறவில்லை.