சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 10

"60 வருடங்களுக்கு முன் ஒன்றாக இருந்த நாம், இடையே ஒரு கோடு வரைந்து விட்டதால் இந்தியா - பாகிஸ்தான் என்றாகிவிட்டோம்; இது மனதில் நாம் கொண்டுள்ள அடையாளம் மட்டுமே," என்று கூறும் சத்குருவிடம், உண்மையில் நாம் யார் என்பதைக் கேட்டறிவோம் சேகர் கபூர் மூலமாக...


சத்குரு: இந்த உலகில் இயங்குவதற்கு, இந்த உலகில் செயல்படுவதற்கு உங்களுக்கு ஒரு அடையாளம் தேவை. மும்பையில் நீங்கள் போய்க் கொண்டிருக்கும்போது, யாராவது நீங்கள் யார்? என்று உங்களிடம் கேட்டால், நான் ஒருவருமில்லை என்று உங்களால் சொல்ல முடியாது. உங்களைச் சுற்றியுள்ள மக்களுடன் செயல்படும்போது உங்களுக்கு ஒரு அடையாளம் தேவை. இந்த சேகர் மட்டும் போதாது. ஏனென்றால் அங்கே நிறைய சேகர்கள் இருக்கலாம். நீங்கள் கபூர்-ஐயும் சேர்த்துக்கொள்ளத் தேவையிருக்கிறது. எனவே இது ஒரு அடையாளத்தை உங்களுக்குக் கொடுக்கிறது.
நீங்கள் உங்களை இந்தியன் என்று அடையாளப்படுத்திக் கொண்டால் பிறகு இந்தியா தொடர்பானது அத்தனையும் நல்லதாகவும் இந்தியாவுக்கு எதிரானதெல்லாம் கெட்டதாகவும் உங்களுக்குத் தோன்றும்.

நீங்கள் சேகர் கபூர் என்று சொல்லும்போது, எனக்கு உங்களை பற்றி எதுவுமே தெரியாவிட்டாலும், உங்கள் பெயரை மட்டும் கேட்டவுடன், ஒன்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது. ஓ, இவர் இந்தியாவில் இருந்து வந்துள்ளவர் என்று, சரியா?

சேகர்: சரி

சத்குரு: உங்கள் பேச்சை கேட்கும்போது, 'சரி, இவர் கட்டாயமாக இந்தியாவின் இந்த பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்' என்று யூகிக்க முடிகிறது. எனவே இது ஒருவருக்கொருவர் திறமையாக செயல்படுவதற்கு வழி செய்கிறது. எனவே, இவ்வகையில் அடையாளம் என்பது மிகவும் சரியே.

ஆனால் சேகர் கபூர் என்பதுதான் நான் என்று நீங்கள் நம்பத் தொடங்குவதுதான் பிரச்சனையே. பிறகு உங்களை ஒரு எல்லைக்குள் குறுக்கிக் கொள்கிறீர்கள். உங்களின் அடையாளம் உங்களை எல்லைக்கு உட்படுத்துகிறது. ஏனெனில் உங்கள் மனம் எப்போதும் உங்கள் அடையாளத்தை சுற்றியே வேலை செய்கிறது.

நீங்கள் எதனோடு அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களோ அது எப்போதும் சரியாக இருப்பதை போலவும் எதனோடு அடையாளப்படுத்திக் கொள்ளவில்லையோ, அது சரியாக இல்லாதது போலவும் தோன்றுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நேற்று நீங்கள் கலந்துகொண்ட யோகா வகுப்பிற்கு இஸ்லாமாபாத்தில் இருந்து ஒருவர் வந்திருந்தார். அவர் ஒரு பாகிஸ்தானியர். அவர் யாரிடமும் தான் பாகிஸ்தானிலிருந்து வந்திருப்பதாக சொல்லவில்லை. நேற்று இரவு அவர் என்னிடம் 'நான் பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளேன்' என்று சொன்னார்.

நான் சொன்னேன், 'மிகவும் நல்லது, நீங்கள் இங்கே வந்ததற்கு உண்மையில் உங்களை பாராட்டுகிறேன். நீங்கள் அனைவரிடமும் சொல்லியிருக்க வேண்டும்' என்றேன். ஆனால் அவரோ இந்த அடையாளம் ஒரு பிரச்சனையாகும் என்று நினைத்தார்.

ஒரு இந்தியராகவும் ஒரு பாகிஸ்தானியாகவும் இருப்பது, 50, 60 வருடங்களுக்கு முன் உருவான ஒரு அரசியல் அடையாளம் மட்டுமே. அதற்கு முன்னால் இதுமாதிரி எதுவும் இல்லை. நாம்தான் இப்படி உருவாக்கினோம், இல்லையா?

யாரோ ஒருவர் ஒரு செயற்கையான கோட்டை வரைந்து, யாரெல்லாம் இந்தப் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் இந்தியர்கள், அந்தப்பக்கம் இருப்பவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று சொன்னார். அதற்கப்புறம் எவ்வளவு பிரச்சனை பாருங்கள், ஏனெனில், நீங்கள் அதனோடு மிகுந்த அடையாளம் கொண்டுவிட்டீர்கள்.

இப்போது இந்த உலகில் செயல்படுவதற்காக, நடைமுறைத் தேவைகளுக்காக ஒரு அடையாளத்தைக் கொள்வது நல்லதுதான். ஆனால் உங்கள் இயற்கையான தன்மையை உங்கள் அடையாளத்தைக் கொண்டு உருவாக்க முயற்சிக்கிறீர்கள். இது ஒரு பெரிய குழப்பத்தில்தான் கொண்டுவிடும். ஏனெனில் பிறகு நீங்கள் ஒரு உயிராக இருக்க மாட்டீர்கள். நீங்கள் ஒரு மனிதராக இருக்க மாட்டீர்கள். நீங்கள் இந்த அடையாளத்துடன் செயல்படும் ஒரு பொருளாகவோ, ஒரு கருத்தாகவோ, அல்லது முன்முடிவுகளின் ஒரு குவியலாகவோ மட்டுமே இருப்பீர்கள்.

நீங்கள் உங்களை இந்தியன் என்று அடையாளப்படுத்திக் கொண்டால் பிறகு இந்தியா தொடர்பானது அத்தனையும் நல்லதாகவும் இந்தியாவுக்கு எதிரானதெல்லாம் கெட்டதாகவும் உங்களுக்குத் தோன்றும்.

சேகர்: சரி, இது எனக்கு புரிகிறது. ஆனால் எப்படி இந்த அடையாளத்தைத் தாண்டிச் செல்வது....

சத்குரு: இப்போது, நீங்கள் பாலிவுட்டில் செயல்பட விரும்புகிறீர்கள். மக்கள் உங்களை ஒரு படத் தயாரிப்பாளர் என்று தெரிந்துகொண்டிருப்பது நல்லது. இல்லையென்றால், யாரும் ஒரு படத்தை இயக்கித் தரும்படி உங்களிடம் கேட்க மாட்டார்கள். எனவே, இந்த உலகில் பணிபுரிய இது தேவைப்படுகிறது.

ஆனால், நான் ஒரு படத் தயாரிப்பாளர். அதுமட்டும் தான் 'நான்' என்று நீங்கள் நம்ப ஆரம்பித்து விட்டால், அது உங்களை பெரிய விதத்தில் சுருக்கிவிடும். உங்களுடைய மனம் படத் தயாரிப்பாளர் என்பதைச் சுற்றியே இயங்கும்.

ஏனெனில் எவ்வளவு ஆழமாக நீங்கள் அதில் ஈடுபடுகிறீர்களோ, எவ்வளவு அனுபவங்கள் உங்களுக்கு சேர்கிறதோ, அந்த அளவிற்கு நீங்கள் ஒரு நல்ல படத்தயாரிப்பாளராக இருப்பீர்கள், இல்லையா?

இப்போது ஒரு பள்ளி ஆசிரியர் 6 வயது குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறார். ஆனால் அவருடைய வாழ்க்கை அனுபவம் எவ்வளவு ஆழமாக உள்ளதோ அந்த அளவிற்கு அவர் ஒரு நல்ல ஆசிரியராக இருப்பார், இல்லையா?

ஆனால் எதில் ஈடுபடுகிறோமோ அதனுடன் மட்டும் அடையாளப்படுத்திக் கொண்டால் அனுபவ ஆழம் சுருங்கிவிடும். எல்லாவற்றுடனும் ஒரு திறந்த தன்மையில் இருந்தால் மட்டுமே உங்கள் அனுபவத்தை ஆழப்படுத்த முடியும்.

அடுத்த வாரம்...

நான் யார்? என்ற கேள்வியை சேகர் கபூர் கேட்க சத்குரு என்ன பதில் சொல்லியிருப்பார் அடுத்த வாரப் பதிவில் காணலாம்.