ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் நாட்டிய நிகழ்ச்சியாக வழங்கிய ராமாயண காவியத்தைப் பற்றி ஒரு கண்ணோட்டம் இங்கே...

ஏப்ரல் மாதம் 12ம் தேதி, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் "பாவயாமி ரகுராமத்தை" அடிப்படையாகக் கொண்டு, இராமாயண காவியத்தை பரதநாட்டிய நிகழ்ச்சியாக வழங்கினார்கள். "பாவயாமி ரகுராமம்" என்பது 17ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கர்நாடக இசை பாடலாசிரியர் மஹாராஜா ஸ்வாதித் திருநாளின் படைப்புகளில் ஒன்று. இந்தப் படைப்பு, இராமாயண காவியத்தின் ஏழு பாகங்களை சுருக்கமாகவும், வெவ்வேறு ராகங்களிலும் இயற்றியதனால் ஏற்கனவே புகழ் பெற்றதாகும்.

நடனமாடிய ஒரு மாணவியின் பகிர்வு:

“இது வரையில் நாங்கள் ஒரு மணி நேரம் தொடர்ந்து நடனம் ஆடியது இல்லை என்பதால் முதலில் சிறிது சந்தேகமாகவே நடனப் பயிற்சியை தொடங்கினோம். ஆனால் ஓயாத பயிற்சியாலும், ஆசிரியர்கள் ஊக்குவித்தலாலும் நாங்கள் பயம் தெளிந்தோம். ஆரம்பத்தில், 10-15 நிமிடங்களிலேயே ஓய்ந்து போவோம், ஆனால் இன்று ஒரு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை.”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ராமனாக முதல் காட்சியில் நடனமாடியவரே அடுத்த காட்சியில் சீதாவாகவும், ஒரு காட்சியில் வானரமாகவும், மற்றொரு காட்சியில் ராக்ஷச தலைவன் ராவணனாகவும் நடித்து, ஆடினார்.

நிகழ்ச்சி நடக்கும் தினத்தில், நடனமாடுபவர்கள், பாடுபவர்கள் எல்லோரும் பதற்றம், தவிப்பு, எதிர்பார்ப்பு, ஆவல் என்று ஒரு சேர பல உணர்ச்சிகளுடன் பரபரப்பில் இருந்தனர். குழந்தைகளுக்கு வானர வேஷம் போடுவது, மற்ற நடன கலைஞர்களுக்கு ஒப்பனை செய்வது போன்றவை ஒரு சவாலான வேலையாக இருந்தது. ஒலி - ஒளி போன்ற ஏற்பாடுகளை சமஸ்கிருதி மாணவர்களே செய்வதாக ஏற்றுக்கொண்டதால் நிகழ்ச்சிக்கு வெகு முன்னதாகவே ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.

தனக்கே உரித்தான முறையில் சத்குரு 5 மணிக்கு அரங்கினுள், அனைவரின் உணர்ச்சி அலை பொங்க, நுழைந்தார். அவருடைய ஆசியுடன் நிகழ்ச்சி துவங்கியது.

இதற்கு முன், மாணவர்களில் ஒரே நபர் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு முக்கிய பாத்திரம் ஏற்று நடித்ததை போல அல்லாமல், இந்த முறை ராமனாக முதல் காட்சியில் நடனமாடியவரே அடுத்த காட்சியில் சீதாவாகவும், ஒரு காட்சியில் வானரமாகவும், மற்றொரு காட்சியில் ராக்ஷச தலைவன் ராவணனாகவும் நடித்து, ஆடினார்.

நாடகக் காட்சிகள்...

சிவனின் வில்லை முறித்து சீதாவின் கரம் பிடித்த இளவயது ராமனின் கதையை ஆடிக்காட்டினார்கள். அடுத்த காட்சியில் அவர் 14 வருடங்கள் நாடு கடத்தப்பட்டு, காட்டில் சூர்ப்பனகையுடன் மோதினார். பயங்கரமான ராட்சசி, துரிதமான இசை, லக்ஷ்மணனால் அதிவேகமான முறையில் சூர்ப்பனகையின் மூக்கும் காதும் அறுபடும் காட்சி, எல்லாம் சேர்ந்து பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. கோபாவேசமாக அவளது தமையன் பத்து தலை ராவணன் ஒரு பிராமணர் போல உருமாறி ராமனின் மனைவி சீதையை தூக்கிக்கொண்டு செல்லும்போது வீணை இசையும் வயலினுடைய சீற்றமும் மககளைக் கவர்ந்தன.

மூன்றரை அடி உயரம் கூட இல்லாத வானரக்குட்டிகள் சொரிந்து கொண்டு, குதித்துக்கொண்டு, குட்டிக்கரணம் அடித்துக்கொண்டு வந்தபோது பார்வையாளர்களால் உரத்த சிரிப்பலையை கட்டுப்படுத்த முடியவில்லை. ராமன் தன் வானர சேனையின் உதவியுடன் இலங்கைக்கு பாலம் கட்டுகிறார். ராம ராவண யுத்தம்தான் நிகழ்ச்சியின் முக்கிய கட்டம். மிருதங்கமும் கஞ்ஜீராவும் மாறி மாறி வாசித்த அந்த அதிர்வு, யுத்தக்காட்சியை ஒரு புது உச்சத்திற்கு எடுத்து சென்றது. இதற்கெல்லாம் உச்சமாக இரு உலோகங்கள் மோதுவது போன்ற சத்தத்துடன் ராவணன் வீழ்ந்தான். கடைசியில் மணி ஓசையும், வெற்றிச்சங்குகளும் முழங்க ராமனும் சீதையும் பட்டாபிஷேக வைபவத்தில் திரும்ப இணைந்து, வெற்றியை நிலைநாட்டும் காட்சியில் மேடை ஒரு அழகுமின்னும் அரசவையாக மாறியது எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டது.

நிகழ்ச்சியின் முடிவில் பார்வையாளர்களின் இடி ஓசை போன்ற கைதட்டல் ஒலி, ஆதியோகி ஆலயத்தின் கூரையில் பெய்யும் மழை போல இருந்தது.

சில பகிர்வுகள்...

“இது இவ்வளவு நன்றாக அமையும் என்றோ, இவ்வளவு அங்கீகாரம் கிடைக்கும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை” என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி ஒருவர் பகிர்ந்து கொண்டார்.

சமீபத்தில் ஈஷா சம்ஸ்கிருதியில் சேர்ந்துள்ள நடன ஆசிரியை ஐஸ்வர்யா பிள்ளை பேசும்போது, “நிகழ்ச்சி முடிந்தவுடன் எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. இது எனக்கும், என் மாணவிகளுக்கும் ஒரு அற்புதமான உணர்வு. நடன ஆசிரியையாக என் பயணத்தின் மிக அழகான ஆரம்பம்” என்றார்.

ஒரு காவியம் அரங்கேறி முடிவடைந்த அந்த கோலாகலமான மாலை நேரம் பார்வையாளர்களை அகமகிழ வைத்து நெகிழ வைத்தது.