உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா பசுமைக் கரங்கள் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள், ஈஷா பசுமைக் கரங்களின் இந்த வருட இலக்கு போன்றவற்றை இக்கட்டுரையில் காண்போம்...

ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டது. 'சுற்றுசூழல் தினம்' - இது குறிப்பிட்ட இனத்தவருக்கோ மதத்தவருக்கோ உரியது அல்ல, இது உயிர் வாழும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய தினம். சுவாசிக்கும் அனைத்து மனிதனும் கவனிக்க வேண்டிய ஒரு தினம்.

நமது பாதி நுரையீரலே மரங்களில்தான் தொங்கிக்கொண்டுள்ளது என சத்குரு சொல்வதுண்டு.

அப்படியானால், விலங்குகளும் பறவைகளும் புழு-பூச்சிகளும் இந்த தினத்தை அனுசரிக்க தேவையில்லையா?! ஆம், தேவையில்லை! அவை இயற்கையின் கட்டுப்பாட்டுக்குள் இயற்கையை சிதைக்காமல் அதன் பாதையில் செல்கின்றன. ஆனால், மனிதன் மட்டும்தான் எந்தெந்த வழிகளில் இயற்கையை சூறையாட முடியுமோ அந்த வழிகளையெல்லாம் அறிந்துள்ளான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மனிதனுக்கு, தனக்கு வேண்டியது எவ்வளவு என்பதும் கூட பல சமயங்களில் புரிவதில்லை. இந்த பூமி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு, இருந்து வரும் சந்ததிகளுக்கு வாழ்வாதாரமாக அமைய வேண்டும் என்ற மனப்பான்மை மனிதனுக்கு இருப்பதாய் தெரியவில்லை.

மண்ணும் நீரும் காற்றும் மனிதனிடம் சிக்கி சீர்கெட்டு வருவதோடு, பின்விளைவுகளைச் சுமந்துகொண்டு அவனுக்கு எமனாகவும் காத்திருக்கின்றன. வாய்க்குள் நுழையாத ஏதேதோ பெயர்களில் நோய்கள்; புது புது வைரஸ்கள்; காற்றிலும் நீரிலும் பரவும் இதுபோன்ற உயிர்க்கொல்லி நுண்ணுயிர்களால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் இறப்புவிகிதம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இனியாவது நாம் விழிப்புணர்வு பெறவில்லையென்றால், எதிர்கால சந்ததிகள் ஆரோக்கியம் என்பதையும், நல்வாழ்வு என்பதையும் ஏடுகளில் எழுத்துக்களாக மட்டுமே படித்துக் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை!

சுற்றுச்சூழலைக் காக்க...

சுற்றுச்சூழலைக் காப்பதென்பது மரங்களின் உதவியில்லாமல் நடவாது. இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் மரங்கள் இல்லாமல் மனிதனால் ஜீவிக்க முடியாது. மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சாகிறது. நமது பாதி நுரையீரலே மரங்களில்தான் தொங்கிக்கொண்டுள்ளது என சத்குரு சொல்வதுண்டு.

அந்த வகையில், தமிழகத்தின் இந்த வறட்சி நிலையை மாற்றுவதற்காக ஈஷா துவங்கியுள்ள பசுமைக் கரங்கள் திட்டத்தின் பணி மகத்தானது. மரங்களின் தேவையை மக்கள் மனதில் பதிய வைத்தல், மக்களை மரம் நடவும் வளர்க்கவும் ஊக்கப்படுத்துதல், மரங்களைப் பாதுகாத்தல், தமிழ்நாட்டின் பசுமைக் குடையை 10% அதிகரித்தல் என பல்வேறு செயல்பாடுகளில் இறங்கி அதில் வெற்றியும் கண்டுவருகிறது பசுமைக் கரங்கள் திட்டம்! தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க 12.5 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நட்டு வளர்ப்பது என ஒரு மகத்தான நோக்கத்திற்காக தம்மை அர்ப்பணித்திருக்கிறது.

2015ல் 50 லட்சம் மரக்கன்றுகள்!

2015ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறது ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம். இத்திட்டத்தின் மூலமாக பசுமைக்கரங்களின் வல்லுநர்கள் விவசாயிகளின் நிலத்திற்கு நேரடியாக சென்று அவர்களுக்கு மரம் வளர்க்கும் முறைகள் மற்றும் ஆலோசனைகள் இலவசமாக தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு மரங்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி அவர்களின் மூலமாகவே மரக்கன்றுகள் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, சேலம், நாமக்கல், மேட்டூர், தஞ்சாவூர், பல்லடம், கரூர், திருவண்ணாமலை, நெய்வேலி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி, விழுப்புரம், பூந்தமல்லி, செங்கல்பட்டு, பெருந்துறை மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியின் துவக்கவிழா விரைவில் நடைபெறவுள்ளது.

பசுமைக் கரங்களின் சுற்றுச் சூழல்தினக் கொண்டாட்டங்கள்!

ஜூன் 5 - சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஈஷா பசுமைக்கரங்கள் சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக பேரணிகள் நடத்தப்பட்டன. ஈஷாவின் ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களும் பொதுமக்களும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இந்த பேரணியில் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

ஈஷா பசுமைக் கரங்கள்

தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062