ஈஷா ஹோம் ஸ்கூலில் தடதடத்த Sports Day !

ஈஷா ஹோம் ஸ்கூலில் தடதடத்த SPORTS DAY !

ஓட்டப் பந்தயத்தில் இடறிய கால்களில் பட்ட விழுப்புண்கள்; புயலாக ஓடி முதலிடம் பிடித்த தோழியின் வெற்றியைக் கொண்டாடிய சக தோழியர்; தங்கள் அணியினரை உற்சாகப்படுத்துவதற்கு ஓயாமல் இரைந்துகொண்டிருந்த பிஞ்சு குழந்தைகள் என கடந்த வாரம் ஈஷா ஹோம் ஸ்கூலில் நடைபெற்ற ‘ஸ்போர்ட்ஸ் டே’ நிகழ்வுகளின் வர்ணனை இங்கே உங்களுக்காக!

மலையும் மலை சார்ந்த இடமும் என்றால் அது குறிஞ்சி. மலையும் மாணவரும் சேர்ந்த இடமென்றால் அது ஈஷா ஹோம் ஸ்கூல். ஆம்! நான்கு புறமும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் முற்றுகையிட்டிருக்கும் அற்புதச் சூழலில், போர் பாசறை போன்றே அமைக்கப்பட்டிருந்த நான்கு கூடாரங்களில் தங்கள் விளையாட்டு தினத்திற்காக மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.

வழக்கமாக மற்ற பள்ளிகளில் உள்ளதைப்போல ரெட், க்ரீன், யெல்லோ, ப்ளூ என்று வண்ணங்களின் பெயர்களில் மாணவர்கள் பிரிக்கப்படாமல், பாரதத்தின் புகழ்பெற்ற சாம்ராஜ்ஜியங்களான சோழர், காகத்தியர், மராட்டியர், ஹவுசாலர் என நான்கு பேரரசுகளின் பெயரில் பிரிக்கப்பட்டிருந்தனர். சோழர்களின் அடையாளமாக சிங்கமும், காகத்தியர்களின் சின்னமாக கழுகும், மராட்டியர்களின் சின்னமாக குதிரையும், ஹவுசாலர்களின் சின்னமாக புலியும் வழங்கப்பட்டிருந்தது மிகவும் சுவாரஸ்யம். நான்கு அணி மாணவர்களும் தங்களுக்கென தனித்தனி theme songஐ தாங்களே இயற்றி இசையமைத்திருந்ததுதான் இதில் ஹைலைட்.

27 oct 13 mid6

27 oct 13 mid7

பாரம்பரியத்தை பறைசாற்றிய அணிவகுப்பு
27 oct 13 mid1

27 oct 13 mid 2

ஆங்கிலேயர் விட்டுச் சென்ற அதே கல்வி முறையை இன்றுவரைக் கடைபிடித்து வரும் பள்ளிக் கூடங்கள், அவர்களைப் போலவே விளையாட்டு தினக் கொண்டாட்டங்களையும் மாற்றாமல் அதே பாணியில் கடைப்பிடித்து வருவதுதான் வேதனையானது. ஆனால், ஈஷா ஹோம் ஸ்கூலில் கொண்டாடப்பட்ட விளையாட்டு தினம், சத்குருவின் வழிகாட்டுதலுடனும் ஆசியுடனும் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் கறுமை நிற பஞ்சகட்சமும் வெள்ளை நிற மேலங்கியும் அணிந்திருந்தனர்; தங்கள் இடுப்பில் கட்டியிருந்த துண்டு மட்டும் அணிகளைப் பாகுபடுத்திக் காட்டும் வகையில் நான்கு வெவ்வேறு வண்ணங்களில் அமைந்திருந்தன.

“நாங்கள் பள்ளி வாழ்க்கையில் இல்லையே;
நாங்கள்தான் பள்ளியே…”

என்ற சத்குருவின் கவிநயமிக்க பாடல் வரிகளில் அமைந்திருந்த அந்தப் பாடலை ஒருசேர பாடிய பள்ளி மாணவர்களின் விளையாட்டு தின அணிவகுப்பு, இதுவரை வேறெந்தப் பள்ளியிலும் கண்டிராத வண்ணம் அழகும் பாரம்பரியமும் மிளிர்வதாய் அமைந்தது.

விளையாட்டு காட்டிய வருண பகவான்!

இத்தனை தனித்துவமும் அழகும் நிறைந்த விளையாட்டு தினம், வானில் கரு கருவெனத் திரிந்த முகில் கூட்டங்களின் எச்சரிக்கைகளுக்கு இடையே, நடந்ததே மிகப் பெரிய ஆச்சரியம்தான்!
விளையாட்டு தினத்திற்காக பிற மாநிலங்களிலிருந்தும், தொலைதூர ஊர்களிலிருந்து(ம்) வந்திருந்த பெற்றோர்கள் ஒரு புறம்; விளையாட்டு மைதானத்தை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் என ஆலோசனையில் ஆழ்ந்திருந்த ‘டெக்கரேஷன் டீம்’ ஒருபுறம் என ஹோம் ஸ்கூல் பரபரத்துக் கிடக்க, முந்தைய நாள் இரவு, ஆசை தீர கொட்டித் தீர்த்தான் வருண பகவான். பள்ளி நிர்வாகத்தின் திட்டமெல்லாம் தவிடுபொடியாக, ஸ்போர்ட்ஸ் டே நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விகள் அலையத் துவங்கின.

மறுநாள் காலையில் அவசர அவசரமாக வேலைகளைத் துவங்கிய பள்ளி நிர்வாகக் குழுவினருடன் ஹோம் ஸ்கூல் மாணவர்களும் கைகோர்க்க, மழைபெய்த சுவடே தெரியாமல் விழாக் கோலம் பூண்டது மைதானம். வழக்கமாக காலையிலேயே துவங்கி விடும் விளையாட்டு தின அணிவகுப்பு முற்பகலில் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது.

தடகளமும் தழும்புகளும்
27 oct 13 mid4

27 oct 13 mid3

27 oct 13 mid5

காலை 10.30 மணியளவில், தங்கள் பிள்ளைகளைக் கண்ட சந்தோஷத்தில் சில பெற்றோர்களும் பிள்ளைகளின் முகங்களைத் தேடியபடி சில பெற்றோர்களும் புன்னைகை பூக்க மைதானத்திற்கு வந்தனர். மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்கும் முன்னர், பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில், பெற்றோர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்குபெற்றனர்.

நான்கு அணிகளைச் சேர்ந்த மாணவ தலைவர்களும், உப தலைவர்களும் கையில் ஜோதியை ஏந்தியபடி மைதானத்தை சுற்றி வந்து மையத்தில் பிரதானமாக இருந்த ஜோதி ஸ்தம்பத்தை ஏற்றிவைத்தனர். பின்னர் நடைபற்ற விளையாட்டு தின அணிவகுப்பைத் தொடர்ந்து, இறுதிச் சுற்று தடகளப் போட்டிகள் ஆரம்பமாகின.

100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாவதாக வந்த அந்த ஆறாம் வகுப்புச் சிறுவன், காலை நொண்டிக் கொண்டே வந்து முதலுதவிக் கூடாரத்தில் அமர்ந்தான்.

“கால் கொஞ்சம் சுழுக்கியிருக்கு போல… பேண்டேஜ் போடறேன்” என செவிலியர் கூற, “நோ! நோ! ச்சும்மா ஸ்ப்ரே மட்டும் அடிங்க. நான் அடுத்து 200 மீட்டர்ல ஓடணும்” என்ற அந்த பிஞ்சு முகத்தின் தீவிரத்தைப் பார்த்ததும் சுற்றியிருந்தவர்களுக்கு வியப்பில் வார்த்தைகள் வரவில்லை. சூப்பர் சீனியர் பிரிவில், 100மீ, 200மீ, 400மீ எனச் சீறிப்பாய்ந்து முதலிடம் பெற்ற மாணவி ஸ்வாதினியை, ரிலே ரேஸில் தன் குழுவினரின் கூட்டு முயற்சியால் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் மாணவி அனா.

மாணவர்கள் வருண், குஷால், நரேன், கார்கி, மனோஜ், ரிஷி, அஞ்சன், தனுஷ் மற்றும் ராஜ் பரத் ஆகிய மாணவர்கள் அந்தந்த அணிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து புள்ளிகளை ஈட்டினர். அடுத்தவர் வெற்றியைக் கொண்டாடும் பக்குவத்தையும், தனது அணியின் வெற்றிக்காக, விடாமுயற்சியுடன் போராடும் தீவிரத்தையும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களிடத்தில் ஒரு சேரக் காண முடிந்தது. ஈஷா மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகளை அமைதியாய் ரசித்தபடியே, அங்கு ஓங்கி உயர்ந்து நின்றிருந்த மலையும் கூட, மாணவர்களைக் கண்டு நிச்சயம் மலைத்திருக்கும்!
27 oct 13 mid8

27 oct 13 mid9
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert