குழந்தைகள்... சில உண்மைகள்! பகுதி 5

ஆன்மீகம், கல்வி இணையுமா - இந்தக் கட்டுரையில் ஓர் அலசல்...

Question: ஈஷா ஹோம் ஸ்கூலில் ஆன்மீகம் இருக்காது என்கிறீர்கள். அது ஒரு குறை இல்லையா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

(சிரிக்கிறார்) நான் கூறுவது, ஆன்மீகம் கற்பித்தலாக, கல்வி முறையாக இருக்காது என்பதுதான். அதேநேரத்தில் ஒரு குழந்தை எதைப் பற்றியும் எந்தவிதமான கற்பனையும் இல்லாமல், எந்தவொரு முட்டாள்தனமும் இல்லாமல் வளர்ந்தாலே, அவன் இயல்பாகவே ஆன்மீகத்தில் இருக்கிறான். மற்றவரின் தாக்கமின்றி, தன் இயல்பான தன்மையுடன் வாழ்ந்தாலே, சுய புத்திசாலித்தனத்துடன் வாழ்ந்தாலே, ஆன்மீகத் தன்மையாய் மாறுவது இயல்பாய் அவனுக்குள் நிகழும். பெரும்பாலான மக்கள் தங்கள் இயல்புப்படி வாழாமல், தங்கள் மேல் சுமத்தப்பட்ட கல்வியறிவின்படி வாழ்வதாலேயே, ஆன்மீகம் என்பது அவர்களது வாழ்வில் அதிதொலைவில் உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக அவ்வழியில் செல்லாத ஒருசில குறிப்பிட்ட மக்களைத் தவிர, தங்கள் இயல்புப்படி வாழ்ந்தால் ஆன்மீகம் என்பது பெரும்பாலான மக்களுக்கு தானாகவே நிகழும்.

மற்றவரின் தாக்கமின்றி, தன் இயல்பான தன்மையுடன் வாழ்ந்தாலே, சுய புத்திசாலித்தனத்துடன் வாழ்ந்தாலே, ஆன்மீகத் தன்மையாய் மாறுவது இயல்பாய் அவனுக்குள் நிகழும்.

எனவே, நான் ஆன்மீகம் இல்லை என்று சொல்கிறபொழுது, ஞானம் அடைவது எப்படி, அதற்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்களுடன் அமர்ந்து பேசப்போவதில்லை. அதேநேரத்தில், கல்விமுறையால் குழப்பப்படாமல், எந்த ஆதிக்கமும் இன்றி, எந்த மதமும் இன்றி, எந்தவிதமான நம்பிக்கையும் கருத்துக்களும் திணிக்கப்படாமல் இருந்தால், ஒரு குழந்தை தனக்குத் தேவையானதைத் தானே தேர்வு செய்துகொள்ளும். எப்பொழுது நீங்களே உங்களுக்குத் தேவையானதைத் தீர்மானிக்க அனுமதிக்கப்படுகிறீர்களோ, அப்பொழுது வேறுவழியே இல்லை, வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் உள்நோக்கிப் பார்க்கத்தான் வேண்டும். பைபிளையோ, கீதையையோ அல்லது இந்த மனிதர் சொல்வதையோ அந்த மனிதர் சொல்வதையோ கேட்கிறீர்களென்றால், அப்பொழுது உள்நோக்கிப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே அவை எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் அதுபோன்ற எதையும் படிக்காமல், வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கும்போது, வாழ்க்கையைப் பார்க்க ஆரம்பிக்கும்போது, இயல்பாகவே நீங்கள் பார்க்க வேண்டிய ஒரே இடம் உங்கள் உள்நிலைதான், இல்லையா? வேறெங்கு நீங்கள் பார்ப்பீர்கள்?

ஒருநாள் இப்படி நடந்தது, பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியையாக இருக்கும் ஒரு பெண்மணி, தன் வீட்டிற்கு ஒரு சிறிய அளவு வீட்டு சாதனப் பொருளை வாங்கி வந்தார். பெட்டியைப் பிரித்து எல்லா குறிப்புகளையும் படித்தார். அந்தப் பெட்டியில் வந்த அனைத்தையும் ஒன்றாய் இணைக்க முனைந்தார். அவர் எவ்வளவோ கடுமையாக முயன்றும் அவரால் அவற்றை ஒன்றாய்ப் பொருத்தமுடியவில்லை. கடைசியாக, எல்லா பாகங்களையும் ஒரு குவியலாக வைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். மாலைநேரம் வீடு திரும்பியவர் ஆச்சரியப்படும் வகையில், அந்த வீட்டு சாதனப் பொருள் சரியாகப் பொருத்தப்பட்டு, ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்டு இருந்தது. அவர் வேலைக்காரப் பெண்மணியைக் கூப்பிட்டு, அதைப் பொருத்தியது யாரெனக் கேட்டார். வேலைக்காரப் பெண்மணி, தான் தான் அதைப் பொருத்தியதாகக் கூறினார். அவரால் நம்பவே முடியவில்லை. அவரிடம், "எப்படி இதனைச் செய்தீர்கள்?" என்று கேட்டார். "எப்பொழுது உங்களுக்கு எழுதப் படிக்க தெரியவில்லையோ, அப்பொழுது நீங்கள் உங்கள் மூளையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும்" என்றார் அந்தப் பெண்மணி.

எனவேதான், நாம் குழந்தைகளுக்கு எழுதப் படிக்க மட்டும் கற்றுக்கொடுக்காமல், அவர்களுக்கு தங்கள் மூளையை எப்படிப் பயன்படுத்துவது என்பதனையும் கற்றுக் கொடுக்க விரும்புகிறோம். எழுதுவதும் படிப்பதும் முக்கியம்தான். ஆனால் மூளையை உபயோகிப்பது அதைவிட முக்கியம், இல்லையா? பெரும்பாலான படித்த மக்கள், தங்கள் தொழிலில் வெற்றிபெற்றவர்களாகவும், சொந்த வாழ்க்கையில் சிக்கலோடும் இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். சொந்த வாழ்க்கை என்று வரும்பொழுது அவர்கள் தங்கள் மூளையைப் பயன்படுத்துவதில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது, இல்லையா? அவர்கள் இருக்கும் முறையைப் பார்த்தாலே மிகத் தெளிவாகத் தெரிகிறது, தங்கள் வாழ்க்கை என்று வரும்பொழுது, அவர்கள் தங்கள் மூளையை உபயோகிப்பதில்லை என்பது. எப்படி மருத்துவராவது, இஞ்ஜினியராவது, பெரிய அறிஞராவது எல்லாம் அவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களது வாழ்க்கை என்று வருகிறபோது, அவர்களுக்கு மூளையே இல்லாதது போல் தெரிகிறது. அவர்களுக்கு மூளையில்லை என்றில்லை, அவர்கள் அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதனை மறந்துவிட்டனர்.

எனவேதான், கல்வியென்பது உங்கள் மூளையை மந்தப்படுத்தக்கூடாது, அதனைத் தூண்டிவிடவேண்டும். கல்வி உங்கள் அறிவை எடுக்கக்கூடாது, அதைத் தூண்டிவிட வேண்டும். ஒரு குழந்தை இருபது வருடங்கள் இந்த முறையிலான கல்வியைக் கற்றால், அவனுடைய புத்திசாலித்தனத்தில் எழுபது சதவீதம் மீட்கமுடியாத அளவு அழிக்கப்படுவதாக உலகெங்கிலும் உள்ள இன்றைய கல்வியியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, நீங்கள் ஒரு கற்றறிந்த முட்டாளாக வெளிவருகிறீர்கள். இது மனிதகுலத்திற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும், இல்லையா? ஒரு குழந்தையின் அறிவினை அழிப்பது, மனிதகுலத்திற்குச் செய்யும் துரோகமாகும். ஏனெனில் வருங்கால உலகம் அவர்களது மூளையைக் கொண்டே அமையவுள்ளது, இல்லையா? நாம் இந்த உலகில் மிக அழகானவற்றை உருவாக்கப்போகிறோமா அல்லது அழிவுமிக்க அணுகுண்டுகளை உருவாக்கப்போகிறோமா அல்லது அதைவிட இன்னும் அழிவுதரக் கூடியவற்றினை உருவாக்கப்போகிறோமா என்பது, மனிதனின் உணர்ச்சிகள், புத்திசாலித்தனம், மற்றவைகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதனைப் பொறுத்துத் தான் உள்ளது. அந்தவிதமாகத்தான் அவன் அவனது புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்தப்போகிறான். அதைத்தான் உலகில் அவன் உருவாக்கப்போகிறான்.

பாருங்கள், பெரும்பாலான புத்திசாலி மக்கள் தான், இப்புவியில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் காரணம். இல்லையென்றால், வன்முறை இப்பொழுது உள்ள அளவிற்கு நடக்காது. சிலர் எப்பொழுதுமே வன்முறையாளராகத்தான் இருந்து வந்துள்ளனர். குகைமனிதனாக இருந்தபோதோ அல்லது அதற்குப் பிறகு வெண்கல யுகத்திலோ, இரும்பு யுகத்திலோ எதை எடுத்துக்கொண்டாலும் மனிதன் எப்போதுமே வன்முறையில் தான் இருந்திருக்கிறான். குகைகளில் வாழ்ந்தபோது கல்லைக்கொண்டு கொன்றான், அது கற்காலம். இரும்புயுகத்தில் இரும்பைக்கொண்டு கொன்றான். பிறகு வெண்கல யுகத்தில் வெண்கலத்தினால் கொன்றான். அணுயுகம் என்றால் அவன் அணுவினால் கொல்கிறான். மக்கள் எப்போதுமே வன்முறையில்தான் இருக்கிறார்கள். ஆனால் இன்று நடக்கும் வன்முறையின் அளவு இவ்வாறு இருப்பதற்குக் காரணம், உலகின் மிகச்சிறந்த அறிவாளிகள் எல்லோரும் இதற்கு ஒத்துழைக்கிறார்கள், இல்லையா? உலகில் உள்ள மிகச் சிறந்த அறிவாளிகள் எல்லோரும் மனித குலத்தினை அழித்திட மிகமிக கொடூரமான வழிகளை கண்டறிதல் குறித்து உழைக்கின்றனர். புத்திசாலியான மக்கள் ஒத்துழைக்கவில்லையென்றால், வன்முறையான மனிதன் கல்லையோ கம்பையோ கொண்டு ஒரு சிலரைக் கொல்வதோடு நின்றிருப்பான். உலகில் உள்ள புத்திசாலியான மனிதன், வன்முறையான மனிதனுக்கு ஒத்துழைப்பதால்தான் லட்சக்கணக்கான மக்களை அவனால் கொன்றுபோட முடிகிறது.

நமது நலவாழ்விற்கெதிராக புத்திசாலித்தனம் திசைமாறினால், அது புத்திசாலித்தனமே இல்லை. தற்போது மனித புத்திசாலித்தனம் இப்படித்தான் உள்ளது. இது ஒரு வரமல்ல, இது சாபம். மனிதனுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய வரம், அவனுடைய புத்திசாலித்தனம் தான். ஆனால் இப்பொழுது இந்த புத்திசாலித்தனமே மனிதகுலத்திற்கு ஒரு பெரிய சாபமாய் உள்ளது. ஏனென்றால், ஒரு மனிதன் மிக நன்றாய் ஒருங்கிணைக்கப்பட்ட மனிதனாக வெளிவருவதில்லை, அவன் தன்னுள்ளேயே பிளவுபட்டு இருக்கிறான். இதுபோன்ற புத்திசாலித்தனம் ஆபத்தானது. நீங்கள் ஒரு கழுதையாக இருந்தால் உங்களால் உதைக்க மட்டுமே முடியும். அதற்குமேல் எதுவும் செய்யமுடியாது, இல்லையா? உங்களால் விளையக்கூடிய அதிகபட்ச வன்முறை, உங்கள் இரு கால்களினால் ஒரு உதை கொடுப்பதுதான். ஆனால் இப்பொழுது மனித புத்திசாலித்தனம் மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. எது வரமாக இருக்கவேண்டுமோ, அது இன்று மிகப்பெரிய சாபமாக இருக்கிறது. அதில் கல்வி நிச்சயமாக ஒரு பெரும் பங்கினை வகிக்கிறது.

குழந்தைகள்... சில உண்மைகள்! தொடரின் பிற பதிவுகள்