ஈஷா கிராமோத்சவத்தில் நடைபெறும் பாரம்பரிய கிராமிய உணவுத் திருவிழாவைப் பற்றி சில தகவல்கள் இங்கே... படியுங்கள், ருசிக்க வாருங்கள் ஈஷா கிராமோத்சவத்திற்கு...

வரும் செப்டம்பர் 4ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நிகழவிருக்கும் ஈஷா கிராமோத்சவ திருவிழாவிற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடந்து வருகின்றன. அதோடு அங்கு காலை முதலே தமிழர்களின் பாரம்பரிய உணவுத் திருவிழாவும் களைகட்டவிருக்கின்றன. இன்று நாம் நமது பாரம்பரிய உணவுப் பொருட்களான, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகளை அடியோடு மறந்துபோயிருக்கும் இவ்வேளையில், ஈஷாவின் இந்த உணவுத்திருவிழா நமது பாரம்பரிய உணவுகளை நினைவூட்டக் காத்திருக்கின்றன.

நாம் ஆரோக்கியமான வலிமையான ஒரு தலைமுறையை உருவாக்க நினைத்தால், சத்தான, ஆரோக்கியமான உணமுறைகளை நம் பிள்ளைகளுக்கு கற்பித்தல் அவசிமானது. பசியால் வாடும் குழந்தைகள் ஒருபுறம் இருக்க, இன்னொரு புறமோ உடற்பருமன் பிரச்சனையால் பலவித நோய்களுக்கு ஆளாகும் குழந்தைகளையும் பார்க்கிறோம்! இந்நிலைக்கு மிக முக்கிய காரணம், கேழ்வரகு கஞ்சியும், பாசிப்பயறு சுண்டலும் சாப்பிட்டு திடகாத்திரமாய் வளர்ந்த நம் குழந்தைகள், இன்று ஜங்க் (குப்பை) உணவு (Junk food) எனப்படும் சிப்ஸ், பேக்கரி பொருள், கோலா பானம், நூடுல்ஸூக்கு அடிமையாக்கப்பட்டு, உருளைக்கிழங்கு போல் உருண்டு திரண்டு திராணியற்று வளர்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
முழுமையாக பச்சைக் காய்கறிகளுக்குப் போவதன் மூலமாகவே, ஒருவர் யோகக்கலையில் சிறந்துவிட முடியாது.

“பசிக்கு மட்டுமே உண்டோம்! பண்டிகையின் போது மட்டுமே வெள்ளை அரிசி! அசைவம் அளவாய் வைத்தோம்! விரதங்கள் மேற்கொண்டோம்! ஜங்க் வகையறாக்கள் என்னவென்றே அறியாதிருந்தோம்! கூடி உழைத்தோம்! பிள்ளைப் பருவத்தில் ஓடியும், ஆடியும், பாடியும் விளையாடினோம்!” ஆனால் இன்றோ நம் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு திறன் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்தியாவில், 6ல் 1 ஆணும், 5ல் 1 பெண்ணும் குண்டாய் உள்ளனர். வளரும் குழந்தைகளில் 17% பேர் அதிக எடை கொண்டவர்கள். ஆக உடற்பருமனை வெறும் நோயாய் பாராமல், நம் கலாச்சார சிதைவின் ஒரு வெளிப்பாடாய் பார்த்து, நம் மண்ணின் வாழ்வியல் முறைகளைக் காத்து கடைபிடித்தலே நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும். அந்த வகையில், கொடிசியாவில் ஈஷா நடத்தும் இந்த உணவுத் திருவிழா, நமது பாரம்பரிய உணவுகளை நமக்கு நினைவூட்டக் காத்திருக்கிறது.

தினை கருப்பட்டி அல்வா, சாமை தேங்காய் தோசை, வரகு வெள்ளரி தோசை, குதிரைவாலி கொய்யா தோசை, கம்பு அன்னாசி தோசை, ராகி இனிப்பு தோசை, கலவை பொடி இட்லி, கொல்லிமலை முடவாட்டு கால் சூப், தண்டக்கொட்டை- கொட்டை கொழம்பு, வாழப்பூ வடை, கீரை வடை, சீதள கறி, வெந்தய இட்லி, சோள பணியாரம் போன்ற நீங்கள் இதுவரை கேட்டிராத, ருசித்திராத பல பாரம்பரிய உணவு வகைகள் விழாவில் இடம்பெற உள்ளன.

செம்மேடு, கோபி, திருச்செங்கோடு, உசிலம்பட்டி, தேவகோட்டை ஆகிய பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தரும் குழுவினர் வழங்கவிருக்கக் கூடிய இந்த பாரம்பரிய உணவுப் பண்டங்களும், ஈஷா ருசியின் சத்தான சிறுதானிய உணவு வகைகளும் விழாவினை அலங்கரிக்கவும், உங்கள் நாவிற்கு ருசி கூட்டவும் காத்திருக்கின்றன.

உணவுமுறை குறித்து சத்குரு கூறுகையில்...

“பொதுவாக மேலை நாடுகளைப் பொறுத்தவரை ஆரோக்கியம் என்பது ஏதோ அடைய வேண்டிய விஷயம் என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் ஆரோக்கியம் நமக்குள்ளிருந்து இயல்பாக, எழுவது. அமெரிக்கர்கள் சிலர் தங்கள் ஊட்டச் சத்துக்கும், உற்சாகத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் மாத்திரைகளை நம்பி வாழ்க்கை நடத்துவதை நாம் பார்க்கிறோம். முழுமையாக பச்சைக் காய்கறிகளுக்குப் போவதன் மூலமாகவே, ஒருவர் யோகக்கலையில் சிறந்துவிட முடியாது. காலை, மதியம், இரவு உணவுகளில் வைட்டமின் மாத்திரைகள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆனால், அதையே சரி என்று இந்தியர்கள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அமெரிக்க நாட்டில் வசிக்கிற, ஏராளமான இந்தியர்கள் நன்கு பணிபுரிகிறார்கள். வெற்றிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் மாத்திரைகளை நம்பி வாழ்பவர்கள் இல்லை. மனித உடலை அதற்குரிய நிலையில் வைத்திராமல், பொருளியலுக்கோ, ஆன்மீகத்திற்கோ மேற்கொள்கிற எந்த முயற்சியிலும் வெற்றி பெற இயலாது.

உணவும் உணர்வும்!

உணவுக்கும், உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை உற்சாகமாக வைத்திருக்கக்கூடிய உணவு வகைகளை மட்டுமே உட்கொள்ளுங்கள். சரியான விகிதத்தில் இயற்கை உணவை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடுகிற உணவு, உங்களுக்கு சக்தியை தருவதாக, செயல்களில் ஈடுபட உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தருவதாக இருக்கிறதா என்பதை கண்காணித்துக் கொள்ளுங்கள். இதுவும் ஒரு விழிப்புணர்வை பெறுவதற்கான அணுகுமுறைதான். நான் சொல்வது உணவுமுறை பற்றிய போதனை அல்ல. உணர்வு பற்றிய விழிப்புணர்வை நீங்கள் பெறுகிற வழி!” என்கிறார்.

ஈஷா கிராமோத்சவத்தில் சச்சின்!

கிராமப்புற மக்களின் உடல், உள்ளம், பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பாட்டை எடுத்து வந்து, அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை கொண்டுவரும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நிகழ்த்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுகின்றன. இந்த ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 4ஆம் தேதியன்று கோவை கொடிசியா மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நிகழவிருக்கும் கிராமோத்சவ விழா நிகழ்ச்சியில் நிகழ்கிறது. வெற்றிபெறும் அணிகளுக்கு சத்குரு அவர்களின் முன்னிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் பரிசினை வழங்கி சிறப்பிக்கவுள்ளார். பாரம்பரிய விளையாட்டுகளும், கிராமிய நடனங்களும், இசை நிகழ்ச்சிகளும், அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திருவிழாக்களும் இந்நிகழ்ச்சியில் நிகழவுள்ளன. மேலும் நாள்முழுக்க நிகழவுள்ள கிராமிய உணவுத் திருவிழாவும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வு கண்காட்சியும் இந்நிகழ்ச்சிக்கும் கூடுதல் சிறப்பு சேர்க்க உள்ளன. அனைவரும் கலந்துகொள்ளலாம்!

அனுமதி இலவசம்!