ஈஷா கிராமோத்சவம் - முதற்கட்ட போட்டிகள் ஆரம்பம்!

கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் நோக்கில், சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஆண்டுதோறும் ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 4ஆம் தேதி கொடிசியா மைதானம், கோவையில் சத்குரு மற்றும் பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்ட விழாவாக நிகழவுள்ளது. 25 மாவட்டங்களிலிருந்து 880 கிராமப்புற அணிகளைச் சேர்ந்த 10360 வீரர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். முதற்கட்ட போட்டிகள் நேற்று (ஜூலை 30) முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறுகின்றன. மண்டல அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 14 முதல் நடைபெறும். தொடர்புக்கு: 83000 83000

சந்நிதி ஈஷாங்கா பயிற்சி!

ஈஷா யோகா மையத்தில் நிகழ்ந்த ‘சந்நிதி ஈஷாங்கா பயிற்சி’யில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 119பேர் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் சத்குருவின் அருள்பெறும் வகையில் சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு ஆன்மீக செயல்முறைகளில் பங்கேற்பாளர்கள் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி, பயிற்சியாளர்கள் முன்னிலையில் ஜூலை 25ஆம் தேதி இரவு ஆதியோகி ஆலயத்தில் அரங்கேறியது!

அப்துல்கலாம் நினைவாக ஈஷா+தினமலர் இணைந்து வழங்கும் மரக்கன்றுகள்!

இளைஞர்களின் நெஞ்சில் எழுச்சி நாயகனாக நீங்கா இடம்பிடித்துள்ள மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்களின் முதாலாம் ஆண்டு நினைவு நாள் ஜூலை 27ல் உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவை பசுமையாக்கும் அவரது கனவை நிறைவேற்ற துணைநிற்கும் விதமாக தினமலர் நாளிதழுடன் இணைந்து ஈஷா பசுமைக் கரங்கள் இலவச மரங்களை வழங்கி வருகிறது. அன்னாரின் நினைவுநாளன்று குடியிருப்புகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என பல இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு ஒருநாள் நிகழ்வாக இல்லாமல், வருடம் முழுவதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஜனவரி 27 முதல் இன்றுவரை 4000 மரக்கன்றுகளை வழங்கியுள்ள ஈஷா, தொடர்ந்து இதற்கான மரக்கன்றுகளை வழங்கவுள்ளது. இந்த முயற்சியில் கைகோர்க்க விரும்பும் சமூக ஆர்வர்கள், தன்னார்வ அமைப்புகள் இதில் இணையலாம்! தொடர்புக்கு: 87540 33032.

சென்னையில் 8வது ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சி!

சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 2 முதல் 8ஆம் தேதி வரை, இந்து மத ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சி நடைபெறுகிறது. பல்வேறு ஆன்மீக அமைப்புகள் பங்கேற்கும் இந்த கண்காட்சியில் ஈஷா அறக்கட்டளையும் தனது பங்களிப்பை வழங்குகிறது. யோகா குரு திரு.பாபா ராம்தேவ் அவர்கள் இந்நிகழ்ச்சியை முன்னின்று துவக்கிவைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சி குறித்த மேலும் தொடர்புக்கு: 044 2462231/2/3

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.