ஈஷா கிராமோத்சவம் 2016 எப்படியிருந்தது… ஒரு சிறப்பு தொகுப்பு!

செப்டம்பர் 4, காலை 9 மணி முதலே கொடிசியா மைதானத்தில் பரபரப்பு தொற்றியது! தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்துகொண்டு சாரை சாரையாக வரத் துவங்கினர்.

ஏற்கனவே அறிவித்திருந்தபடி காலையில் 3வது 4வது இடத்திற்கான பெண்கள் த்ரோபால் போட்டி மற்றும் ஆண்கள் வாலிபால் போட்டி ஆகியவை 10 மணியளவில் நடைபெறத் துவங்கின. மைதானத்தின் வடக்கு எல்லையில் கலைநிகழ்ச்சிகளுக்கென அமைக்கப்பட்டிருந்த மேடையில், பறையிசை அதிரத் துவங்கியதும் மக்கள் ஆங்காங்கே அமர்ந்தபடியும் நின்றபடியும் இசையை ரசிக்கத் துவங்கினர். தர்மபுரி ஈஷா வித்யாவைச் சேர்ந்த மாணவர் குழு ஒன்று பறை இசையால் உற்சாகம் மேலெழும்ப, தங்கள் ஆசிரியர்கள் சகிதம் ஆட்டம்போட்டு புழுதியைக் கிளப்பினர்.

நாட்டுப்புற கலைகளின் சங்கமம்

மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவுக்காக வருடத்திற்கு ஒருமுறை வர்ற கரகாட்டமும் இப்போ வர்றதில்ல! சினிமாவிலும் யூ ட்யூப்பிலுமே அனைத்தையும் பாத்துக்கொள்ள நினைக்கிறார்கள் இன்றைய மக்கள்! அப்போ நம்ம நாட்டுப்புற கலைகளின் கதி…?

பறையாட்டம், கைச்சிலம்பாட்டம், கட்டைக்குழல், ராஜா-ராணி ஆட்டம், ஜிம்லா மேளம், ஒயிலாட்டம், கனியன்கூத்து, சேவையாட்டம், மாடு மயிலாட்டம், கிழவன் கிழவியாட்டம், தோடர்கள் ஆட்டம், வில்லுப்பாட்டு, துடும்பாட்டம், பம்பை ஆட்டம், களியாட்டம், ஜமாப்பு, தோல்பாவைக் கூத்து, கொக்கிலிக்கட்டை ஆட்டம், காவடியாட்டம் போன்ற 40க்கும் மேற்பட்ட கிராமிய கலைகள் ஈஷா கிராமோத்சவ மேடையில் அரங்கேறின.

இதோடு ஈஷா கலைக் குழுவினரின் ஒயிலாட்டம் கரகாட்டம் தப்பாட்டமும் இடையிடையே அரங்கேற்றப்பட்டன. அழிந்துவரும் கிராமிய கலைகளை மீட்டெடுத்து கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் சத்குருவின் வழிகாட்டுதலில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“அரசுசாரா தனியார் அமைப்பான ஈஷா இத்தனை நாட்டுப்புற கலைகளையும் ஓரிடத்தில் அரங்கேற்றியது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது! விளையாட்டையும் கலைகளையும் புத்துயிர் கொள்ளச் செய்யும் ஈஷாவின் இந்த முயற்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!” என தர்மபுரியைச் சேர்ந்த பம்பையாட்டக் கலைக்குழு தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

சிவனுக்கு பிரியமான பம்பையாட்டம் கைலாய ஆட்டம் என்றும் அழைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதுபோல் பல்வேறு கலைக்குழுக்கள் தங்கள் கலைத் திறனை ஈஷா கிராமோத்சவ மேடையில் அடுத்தடுத்து தொடர்ந்து மாலை 4 மணி வரையில் வழங்கிக் கொண்டிருந்தனர்.

“ஈஷா கிராமிய கலைக் குழுவினருக்கு நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம். கிராமத்து இளைஞர்களுக்கு நாட்டுப்புற கலைகளை பயிற்றுவிப்பதற்கு ஈஷா எங்களை ஊக்குவிக்கிறது. இந்த முயற்சியில் நானும் பங்களிப்பை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்,” என தெரிவித்த அகஸ்டின் (சகா கலைக்குழு தூத்துக்குடி) கடந்த 6 வருடங்களாக ஈஷா கிராமோத்சவத்தில் தங்களது நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை வழங்கி வருவதாக கூறினார்.

கலைநிகழ்ச்சிகள் நிகழ்ந்த மேடைக்கு அருகில் கபடிப் போட்டியின் இறுதி ஆட்டங்கள் நிகழ்ந்ததை பலர் ஆர்வமாக ரசித்துக் கொண்டிருக்க, அருகிலேயே வண்ண கோலங்களை சாணம் மொழுகிய தரையில் இட்டு கோலப் போட்டியில் மும்முரமாகியிருந்தனர் பெண்கள்!

கேளிக்கை விளையாட்டுகளில் குழந்தைகளாக…!

அலுவலர்களாக, வியாபாரிகளாக, ஆசிரியராக, முதலாளிகளாக இருந்த பார்வையாளர்கள் சடுதியில் குழந்தைகளாக மாறி சைக்கிள் டயர் உருட்டும் ரேஸ், லெமன் வித் த ஸ்பூன், மூன்றுகால் ஓட்டம், உறியடி, பலூன் உடைத்தல், சாக்கு ரேஸ் என களத்தில் இறங்கி கலகலப்பாகினர்.

கிராமிய உணவுத் திருவிழா

WhatsApp Image 2016-09-04 at 1.04.00 PM

WhatsApp Image 2016-09-04 at 2.04.58 PM

அம்மிக் குளவிகளும், திருகையும், உலக்கையோடு உரல்களும் நமக்கு அளித்த கிராமிய உணவுகள் எத்தனை?! இந்திய கிராமங்களின் மண்மணம் மாறாத கிராமிய உணவு வகைகளை நம்மால் மறக்க முடியுமா? பரபரப்பான வாழ்க்கை சூழலில் ஃபாஸ்ட் ஃபுட்டுக்கு மாறிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஈஷா கிராமோத்சவம் பாரம்பரிய இயற்கை உணவுகளின் மேன்மையை எடுத்துரைக்கும் விதமாக உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தது. பல்வேறு வகையான கிராமிய உணவுகள் நாவின் சுவை அரும்புகளை சுண்டி இழுத்தன.

விறுவிறுப்பாக நிகழ்ந்த இறுதிப் போட்டிகள்!

மாலை 4.30 மணியளவில் சிறப்பு விருந்தினர்களோடு சத்குருவும் திருவிழாவிற்கு வருகை தந்தனர். பெண்களுக்கான த்ரோபால் இறுதிப் போட்டியை முதல் பந்தினை வீசி மேதகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் துவங்கி வைத்தார். ஆண்களுக்கான வாலிபால் இறுதிப் போட்டியை மாண்புமிகு மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் முதல் சர்வீஸ் செய்து துவங்கி வைத்தார்.

ஆண்களுக்கான வாலிபால் இறுதிப் போட்டியில் முதல் செட்டை வேலூர் லத்தேரி அணி வெல்ல, இரண்டாவது செட்டை அபாரமாக ஆடி கடலூர் கருங்குழி அணி வென்றது. விறுவிறுப்பாக நடந்த மூன்றாவது செட்டில் வேலூர் லத்தேரி அணி கடலூர் அணியை போராடி வீழ்த்தியது!

முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் ஈடுகொடுத்து விளையாடிய கோபி முருகன்புதூர் அணியை கோவை தேவராயபுரம் அணி வீழ்த்தி, வெற்றி வாகை சூடியது!

காலையில் நடைபெற்ற ஆண்களுக்கான கபடிப் போட்டியில் தேவராயபுரம் அணி வெற்றி பெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கும் ஈஷா கிராமோத்சவம்!

இவ்வருடம் ஈஷா கிராமோத்சவத்தில் குறிப்பிடத் தகுந்த அம்சமாக மாற்றுத் திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. கோவை கொடிசியா மைதானத்தில் இதன் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தாங்கள் இதில் கலந்துகொண்டது மிகுந்த உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிப்பதாகத் தெரிவித்தனர்.

விழா மேடையில் சத்குருவின் உரை…

fin1

மாலை 6.30 மணியளவில் வெற்றிபெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்தனர்! முன்னதாக ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் அகஸ்திய முனி வழங்கியருளிய களரிப்பயட்டு விளையாட்டை செய்து காண்பித்து பார்வையாளர்களின் கரகோஷத்தைப் பெற்றனர்.

அடுத்த கிராமோத்சவ திருவிழாவில் தமிழகத்தின் 53,000 கிராமங்களும் பங்குபெற வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்திய சத்குரு, இதற்காக தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் வருடத்தில் 5 நாட்கள் செலவழித்து செயல்புரியவும் கேட்டுக்கொண்டார். இதற்கான பயிற்சிகள் ஈஷாவில் வழங்கப்படும் என்று அறிவித்த சத்குரு, அடுத்த ஆண்டு கிராமோத்சவ போட்டிகளின் முதற்பரிசு ரூ.5 லட்சம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதனை வெல்வதற்கு உங்கள் ஊரிலேயே ஒரு அணியை தயார் செய்யுங்கள் அதோடு அனைத்து கிராம இளைஞர்களிடமும் தெரிவியுங்கள் என்று உற்சாகமாக அறிவித்தார்.

புதுச்சேரியில் இந்த கிராமோத்சவத்தை நடத்த விரும்புவதாகவும் அதற்கான முதற்கட்ட முயற்சிகளை வரும் சனிக்கிழமையே துவங்கப் போவதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ரதோர் அவர்கள் விளையாட்டு என்பது ஒழுக்கத்தையும் பக்குவத்தையும் வழங்குவதாக கூறினார். இப்படியொரு உற்சாகமான கூட்டத்தை தான் ஐபிஎல் போட்டிகளில்கூட கண்டதில்லை என்றும், இங்கு கரைபுரண்டோடும் உற்சாகத்தால் தனக்கும் ஈஷா கிராமோத்சவத்தில் விளையாட வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படுவதாகவும் தன் ஆசையை தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவில் வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் அவர்கள் இருந்த இடத்திலேயே இரவு உணவினை தன்னார்வத் தொண்டர்கள் வழங்கினர்.

பின்னர் தொடர்ந்து நாட்டுப்புற கலைநிகழ்ச்சியான தோல்பாவை கூத்து நடைபெற்றது. மொத்தத்தில் 2016ஆம் ஆண்டின் கிராமோத்சவ திருவிழா பாரம்பரிய கலையையும் விளையாட்டையும் மக்களுக்கு நினைவூட்டி, மக்களின் நெஞ்சங்களில் மறக்கமுடியாத நிகழ்வாய் இடம்பிடித்துக் கொண்டது!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert