ஈஷா ஆரோக்ய அலை

ஈஷா ஆரோக்ய அலை

ஆரோக்ய அலை நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள் இங்கு வீடியோவாக


18 Nov - 6.14pm

முகாம் முடிகிறது ஆரோக்ய அலை தொடர்கிறது…

இரண்டு நாட்களாக மிகச் சிறப்பாக நடந்த இந்த மருத்துவ முகாம், இன்று இனிதே முடிவடைந்தது. இன்று ஒரு நாள் மட்டும், 3,258 பேருக்கு பரிசோதனை நடந்து முடிந்தது. இன்று 39 பேர் கண் புரை அறுவைச் சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள்.

இந்த முகாமினால், பயன் பெற்ற நோயாளிகளை விட இதில் பங்கு கொண்ட மருத்துவ குழுவினர் முகத்தில்தான் அளவில்லா ஆனந்தம். ஈஷாவின் நிர்வாகமும், ஈஷாவின் வருபவரை உபசரிக்கும் தன்மையும் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று பல மருத்துவர்கள் நிறைவு விழாவில் பகிர்ந்துக் கொண்டனர்.

மீண்டும், மீண்டும் இதுப்போல ஈஷாவுடன் இணைந்து முகாம் நடக்க வேண்டும் என பல மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

எல்லாவற்றையும் விட மருத்துவர்கள் மிகவும் அதிகமாக பாராட்டியது, ஈஷாவின் சாப்பாட்டைதான்.

நிகழ்ச்சியில் முடிவுரை நிகழ்ந்துக் கொண்டிருக்கும்போதே அரவிந்த் கண் மருத்துவமனையிலிருந்து நமக்கு ஒரு இனிப்பான ப்ளாஷ் ந்யூஸ் வந்தது. இந்த இரண்டு நாட்களில், 75 பேருக்கு கண் அறுவை சிகிச்சை முடிந்து பார்வை திரும்பி விட்டது என்று.

75 பேர் வாழ்வில் ஏற்பட்ட இந்த ஒளி உலகெங்கும் பரவட்டும்!

18 Nov - 6.01pm

அன்புப் பரிசு அல்ல அன்பையே பரிசாக அளிக்கிறோம்

மருத்துவ சிகிச்சையில் தரம் என்றாலே “அப்பல்லோ” தான் என்பது போல இந்த சமூகத்தில் அப்பல்லோவிற்கு ஒரு நற்பெயர் இருக்கிறது. நவீன மருத்துவ கருவிகள் அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவை கொண்ட அப்பல்லோவிற்கு மக்களிடம் நற்பெயரை ஈட்டவோ விளம்பரம் செய்யவோ எந்த தேவையும் இல்லை.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக மட்டும் ஈஷாவுடன் கை கோர்த்தது அப்பல்லோ.

அப்பல்லோ என்ற சொல்லை கேட்டவுடனேயே மக்கள் முதலில் கூறுவது “ரொம்ப செலவாகுமே” என்பதுதான்.

இத்தனை விலையுயர்ந்த சிகிச்சையை ஏழை மக்களுக்கு அளிக்க முன் வந்த அப்பல்லோ குழுமத்திற்கு பதிலாக “நன்றி” என்ற ஒரு வார்த்தையை மட்டும் கூறி முகாமை முடித்துவிட முடியாது.

சத்குருவின் கருணையால் தொடப்பட்ட மக்கள் தன்னார்வத் தொண்டர்களாக மாறி பல செயல்கள் செய்கிறார்கள். ஆனால் ஈஷாவைப் பற்றி எதுவும் தெரியாத இந்த மருத்துவக் குழுவை சேர்ந்த அன்பர்கள் இரண்டு நாட்களாக தொடர்ந்து வேலை செய்வது நம் உள்ளங்களில் நெகிழ்வை ஏற்படுத்துகிறது.

இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்து இருட்டான இவர்கள் உலகில் பார்வை ஒளியை தர முன் வந்த அரவிந்த கண் மருத்துவமனையும் நம் இதயங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது.

சத்குருவின் ஆசியும் தன்னார்வத் தொண்டர்களின் நீங்காத அன்பையும் இவர்களுக்கு பரிசாக அளிப்பதில் ஈஷா பெருமை கொள்கிறது

18 Nov - 4.18pm

உணர்ந்தவர்கள் பகிர்கிறார்கள்

“மருத்துவத்துறையில் எனக்கு 28 ஆண்டு கால அனுபவம் இருக்கிறது. நான் இது போல பல முகாம்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் ஈஷாவில் வேலை செய்வது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இங்கு மக்களை அன்பாகவும் அமைதியாகவும் நடத்துகிறார்கள். இது மருத்துவ முகாம் போல இல்லை. ஒரு தெய்வீக சூழ்நிலையில் இருப்பது போல இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த எங்கள் நிறுவன மேலாளருக்கும் சத்குருவுக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்” என்று அப்பல்லோ மருத்துவக் குழுமத்தை சேர்ந்த சீனியர் டாக்டர் ஒருவர் கூறினார்

ஆலாந்துறையை சேர்ந்த திரு. மாரிசாமி இதைப் பற்றிச் சொல்லும்போது “எனது உடல் முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று 6 மாதத்திற்கு முன்பே மருத்துவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு ரூ. 10,000 செலவாகும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இப்போது ஈஷாவில் இது இலவசமாக செய்யப் படுவதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் வந்திருக்கிறேன்” என்று கூறினார்.

18 Nov - 12.28pm

எனக்குக் கிடைத்த அருள்

“உங்கள் யோகா மையத்திற்கு வருபவர்களை எல்லாம் கைகளையும் கால்களையும் வளைத்து யோகப் பயிற்சி செய்ய கற்றுத் தருகிறீர்கள். கைகளோ கால்களோ இல்லாத என்னை, என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேள்விக் கேட்பது போல ஒவ்வொரு முறையும் சத்குரு ஆலாந்துறையை கடந்து செல்லும்போதும் ஏக்கத்துடன் அவரை பல நாள் பார்த்திருக்கிறார் இந்தப் பெண்.

disabled, medical camp, health, isha, apollo

சத்குருவும் இந்தப் பெண்னை பலமுறை கவனித்து இருக்கிறார். இப்பெண்ணை பார்க்கும் போதெல்லாம் சத்குருவிற்கும் சற்று வருத்தமாகத்தான் இருந்திருக்கிறது. சுமார் 35 வயதை தாண்டியும், குழந்தைபோல தவழ்ந்தே செல்ல வேண்டிய சரஸ்வதிக்கு ஒரு ஞானியின் மேல் என்ன ஈர்ப்பு?

வார்த்தைகளற்ற சரஸ்வதியின் கேள்விக்கு இன்று பதிலாக கிடைத்தது அருள். இன்று எதேர்சையாக சரஸ்வதியை சிகிச்சை முகாமில் கண்ட சத்குருவும் அவரும் பார்த்துப் பேசிக் கொள்ள, காண்போர் கண்களில் கண்ணீர் வெள்ளம்

அங்கிருந்த ஆர்தோ ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களை அழைத்து, “எவ்வளவு மருத்துவ செலவானாலும் சரி, இப்பெண்ணுக்கு வேண்டிய அத்தனை சிகிச்சைகளையும் செய்யுங்கள்” என்று சொல்லிச் சென்றார் சத்குரு.

சத்குருவின் வழிகாட்டுதலில், இவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

18 Nov - 11.21am

அற்புதமான மருத்துவக் குழு

arogya alai, dentist, health, isha, awareness, medical camp

நேற்றிலிருந்து தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் இந்த மருத்துவ குழு எப்படி இருக்கிறது? சோர்ந்து விட்டார்களா?

இல்லை மாறாக தான் கற்ற கல்வி இது போன்ற ஏழை மக்களுக்கு பயன்படுகிறது என்பதில் அவர்களுக்கு மிகப் பெரிய உற்காகம்.

மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்கிறார்கள்.

ஈஷா ஏற்படுத்தியிருக்கும் சூழ்நிலை மற்றும் அற்புதமான நிர்வாகத்திறன், ஒரு நோயாளியைக் கூட கைக் கூப்பி வணங்கி வரவேற்று சிகிச்சை அளிக்கும் விதம் இவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளித்திருக்கிறது.

arogya alai, dentist, health, isha, awareness, medical camp

18 Nov - 10.45am

அப்பல்லோ அரவிந்த் வழங்கும் அற்புதங்கள்

arogya alai, health, isha, apollo, aravind eye hospital

சாதாரணமாக ஒரு முகாமில் X ray, Ultra sound, ECG போன்ற விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தப் படுவதில்லை.

ஆனால் இவ்வளவு விலையுயர்ந்த உபகரணங்கள் சாதாரணமாக ஒரு பந்தலில் போட்டு வேலை செய்ய வைக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட தட்பவெட்ப நிலையில் வேலை செய்யும் இந்த உபகரணங்களை கொண்டு வந்து இம்முகாமை பிரம்மாண்டமாக்கி உள்ளது சென்னை அப்பல்லோ.

இந்த உபகரணங்களை பராமரிக்க தகுந்த சூழ்நிலை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. ஏ.சி (ஜி.சி) வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இது செயல்புரியும் விதத்தை பார்த்தால், இது மருத்துவ முகாமல்ல, தற்காலிக மருத்துவமனை என்றே சொல்லத் தோன்றுகிறது!

அப்பல்லோவுக்கும் அரவிந்த் கண் மருத்துவமனக்கும் நம் மனமார்ந்த நன்றிகள்!

18 Nov - 10.11am

முகாமிற்கு அழைப்பு

Arogya Alai, Isha, health, apollo, medical camp

Arogya Alai, Isha, health, apollo, medical camp

இது போன்ற வாய்ப்பை மக்கள் தவறவிட்டு விடக் கூடாது என்பதற்காக காலை 6 மணிக்கே யோகா மையத்தில் இருக்கும் அன்பர்கள், கிராமம் கிராமமாக சென்று அழைப்பிதழ் கொடுத்து மக்களை பஸ்ஸில் ஏற்றி இன்றைய முகாமிற்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று காலை 9 மணிக்கே 1000 பேர் வந்துவிட்டனர்.

சுமார் 5000 பேருக்கு இன்று உணவு தயாராகிக் கொண்டிருக்கிறது.

17 Nov - 7.48pm

வெற்றிகரமான முதல் நாள்

ஏதோ ஒன்று நடக்கிறது வேடிக்கை பார்க்கலாம் என்று கூட்டம் கூடாமல் உண்மையாகவே நோயுள்ளவர்கள் இன்றைய முகாமிற்கு வந்திருந்தது இந்த முகாமின் மிகப் பெரிய வெற்றி ஆகும்.

இதற்கு காரணம் கடந்த ஒரு மாதமாக தன்னார்வத் தொண்டர்கள் செய்த செயல்தான். வெறும் விளம்பரப் பலகைகள் வைத்து மக்கள் கூட்டத்தை கூட்டாமல் வீடு வீடாக சென்று நோயுள்ளவர்களை கண்டறிந்து இந்த முகாமை பற்றி விளக்கமாக சொல்லி முன் பதிவு செய்து இந்த சேவை தேவை உள்ளவர்களைச் சரியாக சென்றடைய சிறப்பாக செயல் செய்திருக்கின்றனர்.

சமூகத்தில் இவ்வளவு தேவை இருக்கிறது என்பதை இன்று தன்னார்வத் தொண்டர்கள் கண்கூடாகக் கண்டனர்.

எந்த கவனிப்பும் இல்லாமல் இவர்கள் இத்தனை நாள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது நம் நாட்டில் இது போல் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற பெரிய கேள்வியை எழுப்பி இருக்கிறது.

நாளையும் தொடரும் இந்த முகாமில் இன்னும் பல கேள்விகளை சந்திக்க எங்களுடன் இணையதளத்தில் இணைந்திருங்கள்!

17 Nov - 7.18pm

சதமடித்த வீரர் சந்தேகம் கொண்டது ஏன்?

104 வயதை சேர்ந்த ஒரு முதியவரை அவர் வீட்டில் இருந்து ஒருவர் கொண்டுவந்து முகாமில் விட்டு விட்டு சென்று விட்டார்.

அவர் இங்கே பரிசோதனை முடிந்து மருந்து மாத்திரைகளை பெற்றுக் கொண்டு பின்னர் மதிய உணவருந்திவிட்டு வீட்டிலிருந்து தன்னை அழைத்து செல்ல யாராவது வருவார்களா என்று காத்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.

முகாமிற்கு கொண்டு வந்து விட்டாரா அல்லது தம்மை இங்கே நிரந்தரமாக விட்டு விட்டாரா என்று அந்த முதியவருக்கு சந்தேகம் வர திரும்பி வீடு செல்வோமா இல்லையா என்பது கூட தெரியாத நிலையில் அந்த முதியவர் “இங்க பாக்கலன்னா என் உடம்ப யார் பார்க்கப் போறாங்க சாமி” என்று கூறி தன்னார்வத் தொண்டர்கள் அனைவர் கண்ணிலும் கண்ணீரை வரவழைத்து விட்டார்.

17 Nov - 6.58pm

மாலை 5 மணி நிலவரப் படி 3100 பேருக்கு பரிசோதனை செய்து முடிக்கப்பட்டு விட்டது.

சாதாரணமாக மருத்துவ முகாம் என்றால் குறைந்தபட்ச பரிசோதனைகள் மட்டும் செய்யப்பட்டு நோய் இருப்பவர்களை மருத்துவமனைக்கு வரச் சொல்வார்கள்.

நோயுள்ளவர்கள் நோயற்றவர்கள் என்று பிரிப்பதற்கு மட்டும் தேவையான பரிசோதனைகளை செய்வதற்கு screening என்று சொல்வார்கள்.

அது போல அல்லாமல் பரிசோதனை, தேவைப்படுபவர்களுக்கு விவரமான பரிசோதனை (further investigations) மற்றும் அதற்கான சிகிச்சையும் அளிக்கப் படுகிறது.

உதாரணமாக 2250 பேருக்கு சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள தேவையான இரத்த பரிசோதனை (blood sugar test) செய்யப் பட்டது. 110 பேருக்கு எக்ஸ்ரே (X-ray) எடுக்கப்பட்டது. 110 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் (Ultra sound) எடுக்கப் பட்டது. 155 பேருக்கு ஈசிஜி (E.C.G) எடுக்கப் பட்டது. பேப் ஸ்மியர் (PAP smear) எனப்படும் கேன்சர் இருப்பதை கண்டறியும் பரிசோதனை 31 பேருக்கு செய்யப்பட்டது. 120 பேருக்கு முழு இரத்தப் பரிசோதனை (complete blood investigations) செய்யப்பட்டது.

22 பேருக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய அரவிந்த் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

17 Nov - 6.15pm

ஆசிரமத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன்

ஆலந்துரையில் நடக்கும் இந்த மருத்துவ முகாமிற்கு ஆசிரமத்தில் ஏன் இத்தனை பரபரப்பு!

மருத்துவ முகாமிற்கு எதிர்ப்பார்க்கப்படும் 10,000 பேருக்கும் இலவச மருத்துவம் மட்டுமல்ல, இலவச மதிய உணவும் கூட!

இந்த மருத்துவ முகாமிற்கு வருகை தந்த மருத்துவர்களுக்கும் மருத்துவ குழுவில் இருக்கும் மற்றவர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் தங்கும் வசதி மற்றும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

இது மட்டுமல்லாது சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் வேறு தியானலிங்க வளாகத்தில் நிரம்பி வழிகிறது.

நமது ஆசிரம சமையலறையின் குழு இன்று அதிகாலையிலிருந்தே இதற்கான ஏற்பாட்டை தொடங்கி அதிரடி ஆக்ஷனில் இறங்கிவிட்டது. முகாமிற்கு வந்தவர்கள் அனைவரும் இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு இத்தனை நேர்த்தியான உணவு ஏற்பாட்டை கண்டு வியந்து செல்கின்றனர்.

17 Nov - 5.50pm

காத்திருக்கும் மக்கள்…

பொதுவாக நகரத்தில் பரபரப்பான வாழ்க்கை முறையில் இருப்பவர்களுக்குதான் பலவிதமான நோய்கள் ஏற்படும், கிராமத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியமாகதான் இருப்பார்கள் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு என்று இன்றைய முகாம் நமக்கு புரிய வைத்து விட்டது.

கிராம மக்கள் தனது உடலை பரிசோதிக்காமலேயே வாழ்நாளை கழிப்பதால் இந்த புள்ளி விவரங்கள் வெளிவராமல் இருக்கின்றன.

இன்றைய முகாமிற்கு வந்திருந்தவர்களில் 90 சதவீதத்திற்கும் மேலானவர்கள் 60 வயதை தாண்டியவர்கள். அதில் பலரால் நிற்கக் கூட முடியவில்லை. மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் இவர்கள் இது போன்ற ஒரு முகாம் நிகழ்த்தப்படவில்லை என்றால் அப்படியே அவர்கள் நோயுடனேயே தன் வாழ்நாளை கழிக்கும் நிலைதான் ஏற்பட்டிருக்கும்.

மதியம் 2 மணி நிலவரப்படி 1500 பேருக்கு பரிசோதனை செய்து முடிக்கப்பட்டு விட்டது. மேலும் 2000 க்கும் மேலானோர் காத்திருக்கின்றனர். நடக்கக் கூட முடியாமல் இருக்கும் இவர்களுக்கு அவர்கள் ஊரிலேயே சென்று அவர்களை அழைத்து வந்து மீண்டும் அழைத்து செல்ல இலவச பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

17 Nov - 5.45pm

போனஸ்

இலவச மருத்துவமுகாம் மட்டுமல்லாமல் மக்களுக்கு இலவச நடமாடும் பல் மருத்துவமனை ஒன்றும் இன்று துவக்கி வைக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் “ஆரோக்கிய வாழ்வு” எனப்படும் ஒரு தமிழ் புத்தகம் ஒன்றும் இன்று வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் உணவு பற்றியும் யோகப் பயிற்சி பற்றியும் பெண்கள் எப்படி உடலை பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. சத்குருவின் வழிகாட்டுதலோடு உருவாக்கப் பட்ட இந்த புத்தகம் இன்னொரு போனஸ் தானே!

17 Nov - 5.12pm

சத்குரு பேசினார்…

இந்த விழாவிற்கு வருகை தந்த விவசாய மந்திரி மாண்புமிகு திரு தாமோதர் அவர்கள், பொள்ளாச்சி தொகுதியை சேர்ந்த மத்திய மந்திரி மாண்புமிகு திரு K. சுகுமாறன் அவர்கள், கௌண்டம்பாளையம் MLA மாண்புமிகு திரு R. ஆறுகுட்டி அவர்கள், தொண்டாமுத்தூர் MLA மாண்புமிகு திரு.S P வேலுமணி அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த Dr சத்தியபாமா அவர்கள் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் மாண்புமிகு திரு.S.M.வேலுசாமி அவர்கள் வருகை தந்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.

“தினமும் யோகப் பயிற்சி செய்வது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். ஒரு காலத்தில் முருங்கைக் மரம் இல்லாத வீடுகளே இல்லை. ஆனால் தற்போது கீரையின் மகத்துவத்தை அனைவரும் மறந்து விட்டனர். அமெரிக்கர்களோ ஒரு கிலோ முருங்கை கீரை வாங்க ரூ.5000 செலவு செய்கின்றனர். நமக்கு எளிதாக கிடைக்கும் இந்த கீரையை சாப்பிட்டால் நமக்கு அப்பல்லோ தேவையில்லை.”

அப்பல்லோ மருத்துவர்களை வரவழைத்து அவர்கள் முன்னாலேயே இப்படி பேச முடியும் என்றால் அது சத்குருவாக மட்டும்தான் இருக்க முடியும்!

“எப்போதாவது தேவைப்பட்டால் அப்பல்லோ! மற்ற நாட்களில் கீரை உணவு, தினமும் அப்பல்லோ தேவைப்பட்டால் நீங்கள் கல்லறையை நோக்கி பயணிக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்று கூறி அரங்கை சிரிக்க வைத்த சத்குரு, இது போல ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒரு முறை இப்படி ஒரு முகாம் நடக்கும் என்றும் அதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

17 Nov - 4.05pm

ஈஷா ஆரோக்ய அலை

ஆரோக்கியமும் உயிர்நலனும் அனைவரது பிறப்புரிமை

ஞானோதயம் அடைந்த ஒருவர் முன்னிலையில் உடல் தாண்டிய பரிமாணம் வேண்டி வந்திருக்கும் தியான அன்பர்களாக இருந்தாலும் சரி, உடலைத் தாங்குவதே சிரமமாக இருக்கும் கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களாக இருந்தாலும் சரி, அனைவரும் ஒன்றே!

இந்த அன்பின் வெளிப்பாடே ஈஷா ஆரோக்கியாவின் “மாபெரும் இலவச மருத்துவ முகாம்.” இன்று மற்றும் நாளை (Nov 17, Nov 18) நடக்கும் மிகப் பிரம்மாண்டமான இந்த மருந்துவ முகாமில் ஈஷா ஆரோக்யா, அப்பல்லோ மற்றும் அரவிந்த் மருத்துவமனைகள் கை கோர்க்க இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

மிகப் பிரம்மாண்டமான இந்த மருத்துவ முகாமிற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு! அதிகாலை 8 மணிக்கே சுமார் 3000 மக்கள் வந்து குவிந்திருப்பது மிகுந்த ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகிறது.

இது இந்த ஒரு நாளில் நடந்துவிடவில்லை. கடந்த ஒரு மாதமாக ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் சுமார் 50 கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுத்து மக்கள் மத்தியில் ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதன் விளைவாக இன்று சுமார் 10,000 பேர் பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

அப்பல்லோ மற்றும் அரவிந்த் மருத்துவமனைகளை சேர்ந்த சுமார் 250 மருத்துவர்களும் அவர்களது குழுவும் பரபரப்பாக களத்தில் இறங்கியுள்ளனர். அவர்களுக்கு துணையாக நம் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் குழு மருத்துவர்களின் நேரம் வீணாகாமல் அற்புதமாக நிர்வகித்து வருகிறது.

இதில் உடலின் அனைத்து அம்சங்களும் பரிசோதனை செய்யப்படுகிறது. இது ஒரு multi specialty camp.

பெண்கள் நல மருத்துவம், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவம், இதய நோய் மருத்துவம், காது மூக்குத் தொண்டை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம் மற்றும் கண் மருத்துவம் உட்பட அணைத்து விதமான வியாதிகளுக்கும் இந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இங்கு வெறும் மருத்துவ பரிசோதனை மட்டுமல்லாமல் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. ஈ.சி.ஜி மற்றும் (lab investigations) பரிசோதனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இங்கு வந்திருப்பது பிரம்மிக்கத்தக்கது.

இத்தனை பிரம்மாண்டமான ஒரு மருத்துவமுகாம் நம் தமிழகத்தில் இது வரை நடைபெற்ற மருத்துவ முகாம்களில் இரண்டாவது ஆகும்.

இந்த பிரம்மாண்டத்தின் மிக சுவாரசியமான துளிகள் உங்கள் வலைப்பக்கத்தில் இன்னும் சில மணி நேரங்களில்…
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert