இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்... பகுதி 7

கொஞ்ச நேரம் கரண்ட் கட்டானாலே டார்ச்சு லைட்டையும் எமர்ஜன்சி விளக்குகளையும் தேடுகிறோம் நாம். இதில், காடுகளில் இரவுநேர கும்மிருட்டில் நடந்து செல்வதென்பது கற்பனையிலும் நடவாத காரியமென்று உங்களுக்குத் தோன்றலாம். உண்மையில், இயற்கை நமக்கு இருளிலும் பார்க்கும் திறனை வழங்கியுள்ளது என்பதை இந்த அனுபவப் பகிர்வின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

ஆனந்த்,

ஈஷா பசுமைக் கரங்கள்

இருட்டுக்குள் செல்வதென்றால் பலருக்கும் பயம் வந்துவிடுகிறது. ஏனென்றால் நமது பார்வைத் திறன் வெளிச்சத்தில்தான் வேலை செய்கிறது. நம் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதால் பயம் தொற்றிக்கொள்கிறது. சத்குரு கூட இருள் பற்றி பல முறை ஆன்மீகம் சார்ந்து பேசியிருக்கிறார். இருட்டிற்குள் நடந்து செல்லும் அனுபவம் குறித்தும் விவரித்திருக்கிறார். ஆம்! இயற்கையோடு இயைந்து வாழ்பவர்களுக்கு இருள் நண்பனாகி விடுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அரை மணிநேர பயணத்திலேயே எங்களால் 40% முதல் 50% வரை இருளில் பார்க்க முடிந்தது. தொடர்ந்து நாம் இருளில் பார்த்துக் கொண்டே செல்லும்போது நமது பார்வையானது இருளுக்கு ஏற்றாற்போல மெதுவாக தன்னை சரி செய்துகொள்கிறது.

வன வழிகாட்டி திரு.நடராஜ் அவர்களுடன் நாங்கள் காட்டில் இருந்த நாட்களில் எங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு முக்கிய பயிற்சி இருட்டினில் நடந்து செல்வது. அடர்ந்த அந்த காட்டுக்குள் கும்மிருட்டில் நடந்து செல்லும்போது இருள்தான் இயற்கையானது என்பதை நாங்கள் உணர்ந்தோம். இது 'பவர் ஃபுல்' பேட்டரிகள் போடப்பட்ட டார்ச் விளக்குகளை ஏந்திக்கொண்டு மேற்கொள்ளும் பயணம் அல்ல. கையில் எந்தவித விளக்குகளுமின்றி இருளை மட்டுமே துணையாகக் கொண்டு மேற்கொள்ளும் பயணம்.

ஆம்! இயற்கை அணிந்திருந்த இருள் திரையை தொடர்ந்து விலக்கியவாறு நடராஜ் அவர்களுடன் நடந்தோம். அரை மணிநேர பயணத்திலேயே எங்களால் 40% முதல் 50% வரை இருளில் பார்க்க முடிந்தது. தொடர்ந்து நாம் இருளில் பார்த்துக் கொண்டே செல்லும்போது நமது பார்வையானது இருளுக்கு ஏற்றாற்போல மெதுவாக தன்னை சரி செய்துகொள்கிறது. தொடர்ந்து இருளில் விளக்குகளைப் பயன்படுத்தாமல் பார்க்கும் போது நமது பார்வை இருளில் பார்க்கும் திறனை வளர்த்துக்கொள்கிறது.

இருட்டில் பார்ப்பது சாத்தியமா?, Iruttil paarppathu saathiyamaa?

திரு.நடராஜ் அவர்கள் எங்களை விட இருளில் தெள்ளத் தெளிவாக எதையும் காண்பார். ஏன் இந்த பயிற்சி? இருளில் நடந்து பார்த்துப் பழகுவதால் என்ன பயன் என்று கேட்டால், இருளில்தான் காடுகளின் வாழ்க்கை துவங்குகிறது. அசைவம் உண்ணும் விலங்குகள் இருளில்தான் நடமாடத் துவங்குகின்றன. இந்தப் பயிற்சியானது அவற்றை அடையாளம் காண பலமுறை எனக்கு உதவி புரிந்துள்ளது.

எனது வளர் பருவத்தில் நான் சுற்றுச் சூழல் குறித்த கட்டுரைகளையும் புத்தகங்களையும் படிக்கத் துவங்கினேன். அப்போதெல்லாம் இணையதளங்கள் இருக்கவில்லை. இயற்கை மற்றும் காட்டுவாழ்க்கை சார்ந்த ஒரு மாத இதழுக்கு சந்தா செலுத்தி, மாதா மாதம் அந்த இதழைப் படித்து வந்தேன். அதன் மூலம் மனித இனம் இயற்கைக்கு இழைத்து வரும் கேடுகளைப் பற்றி அறிந்துகொண்டதோடு, அதனால் விளையவிருக்கும் விபரீதங்களும் புரிந்தன. தற்போது நாம் அனுபவிக்கும் இயற்கை சூழலை அடுத்த தலைமுறையினருக்கும் விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் வேரூன்றியது.

எனக்கு பதினான்கு வயதாக இருக்கும்போது, ஒரு நாள் பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்குள் நுழைந்தேன். ஒரு தாடி வைத்த பெரியவர் என் தந்தையுடன் உரையாடிக் கொண்டிருந்தார். எனது தந்தை என்னை அழைத்து "இவர்தான் நம்மாழ்வார் ஐயா" என அவரை அறிமுகம் செய்துவைத்தார். அவர் என்னை அருகில் அமரச் சொன்னார். பத்து நிமிடங்கள் பேசிவிட்டுச் செல்லலாமென்று நினைத்து நானும் அவரருகில் அமர்ந்தேன். அவரது பேச்சைக் கேட்கத் துவங்கிய நான், நிமிடங்களைத் தாண்டி சில மணிநேரங்கள் கடப்பதை உணர்ந்திருக்கவில்லை.

இயற்கை, விவசாயம், இந்திய வரலாறு, இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல் போன்ற பல தளங்களில் சென்றுகொண்டிருந்த நம்மாழ்வார் ஐயாவின் பேச்சு என்னை அங்கேயே கட்டிப்போட்டது. அந்த நாள்தான் நம்மாழ்வார் ஐயா மூலமாக இயற்கைச் சூழலையும் விவசாயத்தையும் காக்க, நாம் செய்ய வேண்டிய சேவையின் அவசியத்தை உணர்ந்தேன். காத்திருங்கள் இன்னும் பயணிப்போம்!

இயற்கை இன்னும் பேசும்!

இத்தொடரின் பிற பதிவுகள்: இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்