நாம் இறந்த பின் கண்களையோ அல்லது சில உறுப்புகளையோ அல்லது உடல் மொத்தத்தையோ தானமாக வழங்கிட முடியும். ஆனால், பலருக்கும் இதில் மனதளவில் சில தயக்கங்கள் உள்ளன. சத்குருவின் இந்த உரை உறுப்புகளை தானம் செய்வது குறித்த தயக்கத்தைப் போக்குவதோடு தெளிவைத் தருகிறது.

சத்குரு:

நீங்கள் இறந்தபின், உங்கள் கண்கள் மூலம் இன்னொருவர் பார்வைப் பெறுவது நல்ல விஷயம்தானே? இந்தக் கேள்வியே, ‘ஒருவேளை என் உடலின் ஒரு பகுதி இந்த உலகில் தங்கி விட்டால், நான் சொர்கத்திற்கு போகாமல் போய்விடுவேனோ’ என்ற பயத்தில்தான் எழுகிறது. இந்த பிறவியில் கண் தானம் செய்தால் அடுத்த பிறவியில் குருடராக பிறந்துவிடுவீர்கள் என்று பல பேர் பிரச்சாரம் செய்ய துவங்கிவிட்டார்கள். இதுவே பலரை பயமுறுத்துகிறது.

நீங்கள் இறந்த பின் நடப்பது மற்றொரு பரிமாணத்தைச் சேர்ந்தது என்பதால், நீங்கள் நிச்சயமாக உங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம், பயப்பட வேண்டாம்.

ஒருமுறை உங்கள் உடலை விட்டு நீங்கள் சென்றுவிட்ட பின், அதற்கு என்ன ஆனால் உங்களுக்கென்ன? உங்கள் கண்களை பிடுங்கி வேறு ஒருவருக்கு கொடுக்கவும் செய்யலாம், அதனை மிருகக் காட்சி சாலையில் யாருக்காவது உணவாகவும் படைக்கலாம். அதைப் பற்றி நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா என்ன? ஏன் உங்கள் உடல் உரமாகக் கூட மாற்றப்படலாம். மரத்திற்கு உரமாவதோ இல்லை இன்னொருவருக்கு கண் பார்வை அளிப்பதோ உங்கள் சாய்ஸ்!

நீங்கள் இறந்த பின் நடப்பது மற்றொரு பரிமாணத்தைச் சேர்ந்தது என்பதால், நீங்கள் நிச்சயமாக உங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம், பயப்பட வேண்டாம். உங்கள் சிறுநீரகம் பயன்படுத்தப்பட்டதா என்பது கேள்வியல்ல, ஆனால் “என்னால் இன்னொருவர் பயன் பெறட்டுமே” என்கிற எண்ணம் உங்களுக்குள் ஏற்படுகிறதே, அந்த எண்ணம் உங்கள் மேல் ஏற்படுத்தும் தாக்கம்தான் முக்கியம். இந்த எண்ணம், உங்களுக்குள் ஒரு நல்ல சூழ்நிலையை உண்டு பண்ணும்.

அதனால் நீங்கள் இறந்த பின், உங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதில் பிழையேதும் இல்லை. ஆனால் நாம் வாழும்போதே இந்த உறுப்புகள் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும், அதுவே மிக முக்கியம். உங்களைச் சுற்றி வாழ்வதற்கு சிறப்பான சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும், உங்கள் உடலைப் பயன்படுத்த வேண்டும். இதுவே நீங்கள் வழங்கக் கூடிய மிகப் பெரிய தானம். உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் நீங்கள் அளிக்கக் கூடிய அருமையான கொடை இது தானே?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.