Question: நானும், என் தம்பியும் ஒரே குடும்பத்தில்தான் பிறந்தோம்; ஒரே பெற்றோரால் வளர்க்கப்பட்டோம். ஒரே கல்விக்கூடத்தில், ஒரேவிதமான சூழலில்தான் கற்றோம். ஆனால், என் தம்பிக்கு இருக்கும் துணிச்சல், எனக்கு இல்லையே, ஏன்?

சத்குரு:

இயற்கையின் ஆச்சர்யங்கள் இப்படித்தான். ஒரே பூமி.... ஒரே மண்... ஒரே சமயத்தில் உருவானாலும், இரு வேறு தாவரங்கள் இரு வேறு குணங்களைத்தான் கொண்டு இருக்கின்றன.

உங்கள் மனம் இப்படித்தான்... ஒவ்வொரு தகவலையும் தனக்குத் தேவையான விதத்தில் அலசிச் சேர்த்துக் கொள்கிறது.

இரு வேறு தாவரங்களை விடுங்கள்... ஒரே தாவரத்தின் இரு விதைகளைத் தோட்டத்தில் விதையுங்கள். ஒரே விதமான உரம் போட்டு, ஒரே அளவு தண்ணீர் விட்டு வளர்த்துப் பாருங்கள். வெளிப்படையில் வளர்ச்சி ஒன்றே போல் தோற்றமளித்தாலும், ஊன்றிக் கவனித்தால், அவற்றுக்கிடையே நுண்ணிய வித்தியாசங்கள் பலவற்றைக் காண்பீர்கள். உயிர் என்பது பிளாஸ்டிக்கால் ஆன பொருள் அல்ல; கணத்துக்குக் கணம் மாறும் தன்மையுடன் இருப்பதைத்தான் உயிர்ப்புடன் இருப்பதாகக் கருதுகிறோம்.

அதேபோல் ஒரே பொருளை ஒரேவிதமாக இருவர் பார்ப்பதில்லை. வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்க்கப்படும். அதே பொருள், இருவரிடத்திலும் குறைந்த அளவு வித்தியாசத்துடனாவது பதிவாகிறது. இப்படி, வெளிச் சூழல்களிலிருந்து பெறும் தகவல்களைத் தன்னிச்சையாக அலசி ஆராய்ந்து, ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு விதமாக முடிவெடுக்கிறது.

மனநல மருத்துவரிடம் சங்கரன்பிள்ளை

தீவிரமாக யுத்தம் நடந்து கொண்டு இருந்த பகுதிக்கு சங்கரன்பிள்ளை மாற்றப்பட்டார். ராணுவப் பயிற்சிகளில் கலந்து கொள்ள அவர் ஏன் வரவில்லை என்று கேட்பதற்காக, அவருடைய முகாமுக்கு மேலதிகாரி கோபத்துடன் வந்தார்.

அங்கே சங்கரன்பிள்ளை கீழே கிடக்கும் ஏதாவதொரு காகிதத்தை எடுப்பதும், அதைப் பார்த்துவிட்டு, "இது அல்ல" என்று கிழித்துப் போடுவதுமாக இருப்பதைக் கவனித்தார். அதிகாரியின் கேள்விகளுக்கெல்லாம் சங்கரன்பிள்ளை இதேபோல் விசித்திரமாக நடந்து கொண்டார். காரணம் புரியாததால், அவரை மனநல மருத்துவரிடம் அனுப்பி வைத்தார் அதிகாரி.

சங்கரன்பிள்ளையை பலவிதங்களில் சோதித்தார் மருத்துவர். அங்கேயும் காகிதங்களை எடுத்துப் படிப்பதும், "இது அல்ல" என்று கிழித்துப் போடுவதுமாக இருந்தார் சங்கரன்பிள்ளை. அவருடைய மனநலம் பிறழ்ந்திருப்பதாக முடிவு செய்தார் மருத்துவர்.

அவர் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்து, மேலதிகாரிக்கு ஒரு குறிப்பு எழுதினார்.

அந்தக் குறிப்பை எடுத்துப் படித்த சங்கரன்பிள்ளை குதித்தார். "இதுதான்... இதுதான்!"

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் மனம் இப்படித்தான்... ஒவ்வொரு தகவலையும் தனக்குத் தேவையான விதத்தில் அலசிச் சேர்த்துக் கொள்கிறது.

தாவரங்களில்கூட இந்த வித்தியாசம் இருக்கிறது. ஆனால், உயிரின் மேன்மையான தன்மையான மனித வடிவில், இது இன்னும் அதிகப்படுகிறது. மெலிதான வித்தியாசங்கள் கூட தீவிரமான கூர்மையுடன் உயிருக்கு உயிர் மாறுபடுகின்றன.

Question: இரட்டையாகப் பிறந்தவர்கள் ஒரே மாதிரி உணர்வுடன் இருப்பார்கள் என்பதாவது உண்மையா? இல்லையா?

சத்குரு:

தங்கையுடன் எப்போதும் வெறுப்புடன் பழகி வந்த அண்ணன் ஒருவன் தன் தாயைக் கேட்டான்... "இவள் எங்கேயிருந்து வந்து தொலைத்தாள்?"

புத்திசாலித்தனம் அதிகரிக்க அதிகரிக்க, ஒரு குழந்தை மற்றதிலிருந்து மாறுபடுகிறது.

"அப்படித் தப்பாகப் பேசாதேடா! அவள் சொர்க்கத்திலிருந்து வந்தவள்" என்றாள் தாய்.

"இப்போது புரிகிறதா...? சொர்க்கத்திலேயே தாங்க முடியாததால்தான் இவளை இங்கே தூக்கி எறிந்துவிட்டார்கள்!" என்று பொருமினான் அண்ணன்.

அண்மையில் இப்படிப்பட்ட சகோதர, சகோதரியைச் சந்தித்தேன். இத்தனைக்கும் அவர்கள் இரட்டையராகப் பிறந்த அண்ணன், தங்கை.

இரட்டையர் என்றால் ஒரே ரசனையும் ஒரே விதமான குணநலன்களும் கொண்டிருப்பர் என்ற பொதுவான நம்பிக்கைகளைத் தகர்க்கும் விதமாக இருந்தது அவர்களுக்கிடையே இருந்த வித்தியாசங்கள். இவனுக்குப் பிடித்தது, அவளுக்குப் பிடிக்கவில்லை; அவள் ரசிப்பதை, இவன் ரசிக்கவில்லை.

அவர்களுக்குள் ஒற்றுமை என்பதே இல்லாமல், எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள் என்று கேள்விப்பட்டேன்.

"ஒரே தாயின் கருப்பையில், ஒரே காலகட்டத்தில் இரு உயிர்களும் அருகருகில் ஒன்றாகத்தானே வளர்ந்தன. அப்புறம் ஏன் இத்தனை வித்தியாசம்?" என்று அவர்களுடைய அப்பா கேட்டார்.

"மற்ற அண்ணன், தங்கைகள் வெளியுலகில்தான் ஒருவரை ஒருவர் மேலோட்டமாக அறிவார்கள். இவர்கள் மிக நெருக்கமாக ஒருவர் உருவாவதையே மற்றவர் அருகிலிருந்து கவனித்துக் கொண்டு இருந்ததால் இருக்கலாம்." என்று நகைச்சுவையாகச் சொன்னேன்.

Question: அப்படியானால், இரண்டு உயிர்கள் ஒரே மாதிரி உருவாவதே இல்லையா?

சத்குரு:

வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதுதான்! படைப்பில் இயற்கை எண்ணற்ற கலவைகள் வைத்திருக்கிறது.

பச்சிளம் சிசுக்கள் கூட தங்கள் அசைவிலும், அழுகையிலும், சிரிப்பிலும் வித்தியாசப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அப்படியானால், புதிதாக பிறக்கும்போதே, அந்த உயிர்களில் பழைய பதிவுகள் இருக்கின்றன என்றுதானே அர்த்தம். இதைத்தான் ஆன்மீகத்தில் 'கர்ம வினை' என்கிறோம்.

பழைய கர்ம வினைகளின் சேகரிப்பபில் ஒரு பகுதி, இப்பிறவியில் கரைக்கப்படுவதற்காக ஒதுக்கப்படுகிறது. அதன் பிரதிபலிப்புதான், பிறப்பிலேயே சில குணநலன்களைத் தீர்மானிக்கிறது. நீங்கள் அறிந்திருக்கும் மிக நுணுக்கமான கம்ப்யூட்டர் புரோகிராம்களை விடவும் வெகு சிக்கலான புரோகிராம் இது. எளிதில் புரிந்து கொள்ள முடியாத நிகழ்வமைப்பு.

உங்கள் அனுபவத்தில் இல்லாத இது பற்றி அதிகம் பேசுவதில் அர்த்தம் இல்லை. ஆனால், ஒன்றை மட்டும் தீர்மானமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரே கணத்தை வெவ்வேறு உயிர்கள் பல்வேறு விதமாக நுகர்வதற்கு இயற்கை வாய்ப்பளிக்கிறது. பார்க்கும் காட்சிகள், கேட்கும் ஒலிக் குறிப்புகள், தொடும் உணர்ச்சிகள், முகரும் வாசனைகள் என எண்ணிலடங்கா தகவல்கள் வெவ்வேறு மனிதரிடம் வெவ்வேறு விதமாகச் சேகரமாகின்றன; வெவ்வேறு விகிதங்களில் கலக்கப்படுகின்றன.

புத்திசாலித்தனம் அதிகரிக்க அதிகரிக்க, ஒரு குழந்தை மற்றதிலிருந்து மாறுபடுகிறது. அதன் கிரகிக்கும் தன்மை, கிரகித்ததை அலசும் முறை எல்லாமாகச் சேர்ந்து, தன்னிச்சையாக அடுத்த குழந்தையிலிருந்து அது வேறுபடுகிறது.

வாழ்க்கையை வெகு கவனத்தோடு கையாள ஆரம்பித்தால், தேவையற்றதன் தாக்கம் குறையும்; ஆனந்தம் சேரும்; அமுதம் இனிக்கும்!