இந்த உலகில் நிறையப் பேருக்கு, மனதின் நினைவுத்திறன் - அது எந்த மாதிரியான நினைவுகளாக இருந்தாலும் சரி - மிகவும் குறைவாகவே இருப்பதைப் பார்க்கிறேன். ஆனால் அவர்களுக்கு உடலின் நினைவுத் திறன் அபாரமாக இருக்கிறது.

உங்கள் உடல் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் கொள்ளுப் பாட்டியின் மூக்கு இப்போது உங்கள் முகத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கொள்ளுப் பாட்டியை உங்கள் உடல் நினைவில் வைத்திருக்கிறது. உங்கள் உடல் அதை மறக்கவில்லை. ஆனால் அந்த கொள்ளுப் பாட்டி யார் என்பது உங்கள் மனதுக்குக் கண்டிப்பாகத் தெரியாது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.

உங்கள் மூதாதையர்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் எப்படித் தோற்றமளித்தார்கள் என்பது இப்போதும் உங்கள் உடலுக்குத் தெரியும், ஆனால் உங்கள் மனதுக்குத் தெரியாது.

குறிப்பிட்ட இயல்புகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு, தலைமுறைக்குத் தலைமுறை தொடர்ந்து எடுத்துச் செல்வதில் உங்கள் மனதை விட உங்கள் உடல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்று ஒரு விதமாகவும், நாளை இன்னொரு விதமாகவும் உங்களால் சிந்திக்க முடியும். ஆனால் இன்று ஒரு விதமாகவும், நாளை இன்னொரு விதமாகவும் உங்களால் தோற்றமளிக்க முடியுமா? முயற்சித்துப் பாருங்கள் பார்ப்போம். ஒரு சிறிய உடல் தோற்றத்தை மாற்றுவதற்குக் கூட மிகத் தீவிரமான சாதனா தேவை.

அதனால்தான் யோகாவின் பெரும்பகுதி உடலுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. இன்றைய நவீனகாலத்தில்தான் மனதுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர், ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை, இன்றைக்கு நன்றாக இருக்க வேண்டும். நீண்ட கால அடிப்படையிலான நிலைமாற்றங்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

நிலைமாற்றம் என்றால் பழையவை எல்லாம் படிப்படியாக நீங்குவது. ஒரு நிலையிலிருந்து அதனினும் மேம்பட்ட நிலைக்கு உங்களை மாற்றுவது. ஆனால் வெறுமனே மாற்றம் என்பது அதே விஷயத்தின் மீது மீண்டும் வெளிப்பூச்சு பூசுவது.

நீங்கள் மூக்கை மாற்றுங்கள், நீங்கள் வித்தியாசமாகத் தெரிவீர்கள், ஆனால் உங்களுக்குள் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. அதே போல் அணுகுமுறையை மாற்றுங்கள், திடீரென்று நீங்கள் வித்தியாசமானவராக உணர்வீர்கள். ஆனாலும் எதுவுமே மாறியிருக்காது. எனவே தேவை மாற்றம் அல்ல, நிலைமாற்றம்தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனவே சாதனா என்பது ஏதோ முகப்பூச்சுக் கலை அல்ல, அது நிலைமாற்றத்துக்கான விஞ்ஞானம். நாம் அடிவேர்களையே நிலைமாற்றுகிறோம்.

சாதனா என்பது உங்கள் நினைவு அடுக்குகளிலிருந்து உங்களை விடுவிக்கக் கூடிய ஒரு கருவி. ஒருவருக்குள் இந்த நிலைமாற்றம் நிகழ வேண்டுமென்றால் அவருக்குள் இந்த நினைவு அடுக்குகளைத் தளர்த்துவது முக்கியம். இல்லாவிட்டால் உங்கள் தாத்தாக்களும், பாட்டிகளும், அவர்களுடைய அப்பாக்களும், அம்மாக்களும், உங்கள் மூலமாக வாழ்வதற்கு முயற்சிப்பார்கள். இறந்தவர்கள் மிகவும் பேராசைக்காரர்கள்.

இறந்தவர்களை நீங்கள் இறந்தவர்களிடமே விட்டுவிட வேண்டும், இல்லையென்றால் அவர்கள் பூமிக்குள்ளிருந்து முளைத்து வந்து உங்கள் மூலமாக வாழ்வார்கள். அப்படி அவர்கள் வாழ்வதற்கு விடக் கூடாது.

உங்கள் மூலமாக வாழ அவர்களை நீங்கள் விட்டுவிட்டால், பிறகு உங்கள் வாழ்க்கை எதைப் பற்றியது என்பதை நீங்கள் அறியாமலே போய்விடுவீர்கள்.

உங்கள் அமைப்புகளின் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு அவர்களை நீங்கள் அனுமதித்தால், பிறகு நீங்கள் கட்டாயங்களின் குவியலாக, பலவிதமான கட்டாயங்களுக்கு உட்பட்டு செயல்படுபவராக ஆகிவிடுவீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே பல வழிகளிலும் அவர்களைப் போலவே வாழ்வீர்கள்.

உங்களுடைய குணாதிசயங்களை ஆராய்ந்து பார்த்தால், உங்கள் பெற்றோரைப் போலவே நீங்கள் பல விஷயங்களைச் செய்வதைப் பார்ப்பீர்கள்.

உங்களுக்குப் பதினெட்டு வயதாக இருந்தபோது, 'என் பெற்றோரைப் போல நான் இருக்கவே மாட்டேன்' என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு நாற்பத்தி ஐந்து வயதானபோது, உங்கள் அம்மாவைப் போலவே உட்காருவீர்கள், அவரைப் போலவே பேசுவீர்கள், அவரைப் போலவே நடந்து கொள்வீர்கள். இது போன்ற விஷயங்கள் இப்போதும் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றன.

உங்கள் அம்மா மட்டுமல்ல - உங்கள் கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டியும் கூட தங்களது குணங்களை உங்கள் மூலம் வெளிக்காட்டுகிறார். அதனால் இறந்தவர்கள், இறந்தவர்களாகவே இருக்கட்டும். அதுதான் வாழ்வதற்கான வழி.

உயிருடன் இருப்பவர்கள் இன்னும் அதிக உயிர்த்துடிப்புடன் இருக்க வேண்டும். இறந்தவர்கள் இறந்தவர்களாகவே இருக்க வேண்டும்.

எனவே சாதனாவில் உடலைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

உடல் என்றால் அது வெறும் எலும்புகளும், சதையும் மட்டுமல்ல. இது ஐந்தடுக்குகளைக் கொண்ட ஓர் உடல். இந்த ஐந்து அடுக்குகளின்1 மீதும் சாதனா செயல்படுகிறது.

உடலின் முதல் மூன்று அடுக்குகளுக்காக நாம் சில பயிற்சிகளை உங்களுக்குக் கற்றுத் தர முடியும், அதை நீங்கள் தொடர்ந்து செய்து வரலாம். ஆனால் உடலின் மற்ற பரிமாணங்களை உங்களால் தொட முடியாது.

பிரச்சனையெல்லாம் நீங்கள் அறிந்திடாத பகுதிகளிலேயே உள்ளது என்பேன். நீங்கள் அறிந்த பகுதிகளுடன் போராடுவதை முதலில் நீங்கள் நிறுத்த வேண்டும். உங்கள் மனோநிலை, உங்கள் உணர்ச்சிக் குப்பைகள்தான் நீங்கள் அறிந்த பகுதிகள். இவற்றை நீங்கள் சமாளித்துதான் ஆக வேண்டும், நீங்கள்தான் கையாள வேண்டும்.

உங்களுக்குப் பிரச்சனை தருவது நீங்கள் அறியாத பகுதிகள்தான். அவற்றைக் கையாள்வதற்குத்தான் உங்களுக்கு என்னுடைய உதவி தேவை

1 யோக முறைகளில் விவரிக்கப்படும் பஞ்ச கோசங்கள்

Love & Grace