அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடந்த இன்னர் இன்ஜினியரிங் வகுப்பிற்க்குப் பிறகு டென்னிசியில் ஒரு பாவ ஸ்பந்தனா, அட்லாண்டாவில் ஒரு சத்சங்கம், அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அதாரிட்டியின் விமானி சான்றிதழ் பெறுவதற்கான தேர்வுகள் என பல செயல்கள் பரபரப்பாக நடந்து கொண்டே இருக்கின்றன. குறைந்தபட்சம் அமெரிக்காவிலாவது, நான் ஒரு பயிற்சியாளரின் துணையின்றி விமானம் ஓட்ட முடியும். இந்தியாவில் விமானம் ஓட்டுவதற்கு இன்னும் சில தடைக் கற்களைக் கடக்க வேண்டும். மேலும் விழிப்புணர்வில் முதலீடு செய்வதற்காக ஒரு சந்திப்பு நடைபெற்றது. ஈஷாவின் பணிகள் சம்பந்தப்பட்ட வணிகத்தில் முதலீடு செய்ய தியான அன்பர்களுக்கான ஒரு வாய்ப்பு இது. ஈஷாவில் முதலீடு செய்யும் வாய்ப்புடன் அவர்கள் இதிலிருந்து பலனும் பெற முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இனியும் விழிப்புணர்வை பகுதி நேரத்தில் மட்டும் ஈடுபடும் ஒரு பணியாகக் கருத முடியாத சூழலுக்கு இந்த உலகம் வந்துவிட்டது. இந்தப் பணி நிறைவு பெற கோடிக்கணக்கான மக்கள் முழு நேரமும் முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் இதுவரையிலான மனித வரலாற்றிலேயே இந்தத் தலைமுறைதான் மிகவும் வசதியாக இருக்கிறது. ஆனால் மனித விழிப்புணர்வை மேம்படுத்துவது மட்டும் இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. அதே நேரம், மனித இனம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பெரும் குழப்பத்தில் சிக்கியிருக்கிறது. முந்தைய எந்த தலைமுறையினரும் செய்யாத அளவுக்கு, விழிப்புணர்வின்றி, நாம் இந்த பூமியை பாழ்படுத்தி வைத்திருக்கிறோம். இதனால் நம்மால் அழிந்தது போக மிச்சம் மீதி வளங்களை மட்டும் அனுபவிக்கும் நிலைக்கு வரும் தலைமுறையினர் தள்ளப்படுவார்கள். பூமிக் கிரகத்தை நாம் பூமித்தாய் என்று குறிப்பிட்டாலும், ஒரு வணிகப் பொருளாகவோ அல்லது பல்பொருள் அங்காடியாகவோ தான் அவளை பார்க்கிறோம்.

நியூயார்க் நகரின் சென்ட்ரல் பூங்காவை ஓர் உயரமான இடத்திலிருந்து பார்த்தபோது, அது சுற்றியிருந்த கான்க்ரீட் காடுகளின் கவர்ச்சிகளுக்கு நடுவே ஓர் உயிர்ப்பான செவ்வகப் பசுமைப் பகுதியாக இருந்தது. நமது திறமைகள், வசதியான வாழ்க்கை முறையை உருவாக்கியதே தவிர, நல்வாழ்வை உருவாக்க உதவவில்லை. மேலும் இவ்வளவு வசதிகள் இருந்தும், மனித இனத்துக்கு புதிய சாத்தியங்கள் கிடைக்க அவை உதவவில்லை. மாறாக முன்னெப்போதும் இருந்திராத அளவில் நமக்கு பலவீனமான உடல்களைத் தந்து முடக்கிவிட்டன.

மனித உடல் வெறும் எலும்பும் சதையும் மட்டும் கொண்டதல்ல, மூளையும் சேர்ந்த இவ்வுடல் உயரிய சாத்தியங்களுக்கான உறைவிடமாக இருக்கிறது. ட்ரெட்மில் (Treadmill) மேல் நடப்பதாலோ, குளிரூட்டப்பட்ட ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்வதாலோ நம் உடல் தனது இயல்பான வலிமையைப் பெறப் போவதில்லை. இந்த உடல் இயற்கை மூலக்கூறுகள் நிரம்பியது, மேலும் இந்த பூமியின் ஒரு பகுதி அது. மீண்டும் அந்த இயற்கை மூலக் கூறுகளுடனும், பூமியுடனும் தொடர்பு கொண்டால்தான், உடல் தனது முழு திறனையும், வாழ்வின் பேரானந்தங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

இயற்கை வளங்கள், தொழில்நுட்பம், இந்த பூமியில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் திறன் என்று அனைத்தும் இப்போதுதான் முதன்முறையாக ஒன்றுகூடி வந்திருக்கின்றன. இதில் இல்லாமல் இருக்கும் ஒரே விஷயம் மேம்பட்ட விழிப்புணர்வு நிலைதான். பொருள்தன்மை உடையவற்றுக்கும், உடல்களுக்கும்தான் எல்லைகள் உண்டு என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த எல்லைக் கோடுகள் மனித மனங்களுக்குள்ளும் புகுந்து, அந்த அற்புதமான சாத்தியத்தை முடக்கிவிட்டன. விழிப்புணர்வு அடையும்போதுதான், மனிதர்கள், எல்லைகளை உடைத்துக் கொண்டு, உண்மையாகவே அனைத்தையும் உள்ளிணைத்துக் கொள்ளும் தன்மையினைப் பெறுவார்கள். மனிதனை துன்புறுத்திக் கொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் இந்த உள்ளிணைத்துக் கொள்ளும் தன்மையில்தான் தீர்வு இருக்கிறது.

பேரானந்தமான ஒரு மனித இனத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால், அதற்காக நாம் முதலீடு செய்தாக வேண்டும்.

நாம் இதனை நிகழச் செய்வோம்.

Love & Grace