ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள், "பள்ளியில் ஐ பாட், செல்போன், லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை வைத்துக் கொள்ளலாமா? ஓய்வு நேரத்தில் அவற்றைப் பயன்படுத்தலாமா?" என்ற கேள்வியை சத்குருவிடம் கேட்க, அதற்கு அவர் அளிக்கும் பதில் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று...

சத்குரு:

நான் ஐ பாட்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அவை உங்களை சுற்றி இருக்கும் விஷயங்களில் இருந்து உங்களை முற்றிலுமாக தனிமைப்படுத்தி விடுகின்றன. எப்போது பார்த்தாலும் நீங்கள் அந்த எலெக்ட்ரானிக் இசையை உங்கள் காதுகளில் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள். இங்கு வீசும் தென்றலை, பறவைகளை, உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நீங்கள் கவனிக்க மறந்து போவீர்கள். எலெக்ட்ரானிக் பொருட்கள் மூலம் நீங்கள் வாழ்க்கையின் உயிர்ப்பினை முழுமையாகத் தொலைத்துவிட நேரலாம்.

தொழில்நுட்பம் எதற்காக?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
இயற்கையைப் பார்ப்பதும், அதை கவனிப்பதும், அதை எப்படி இன்னும் கூர்மையாக கவனிப்பது என்றும் கற்றுக் கொள்வது மிக முக்கியம்.

தொழில்நுட்பங்கள் எல்லாம் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவைதான். ஆனால் துரதிருஷ்டவசமாக நாம் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நம்மை நாமே மந்தப்படுத்திக் கொள்கிறோம். இப்போதெல்லாம் எதையும் உள்வாங்கிக் கொள்ளும் திறன் பெரும்பாலான மனிதர்களுக்கு இருப்பதில்லை. இதுபோன்ற ஓரிடத்தில், மலையடிவாரத்தில், இருக்கும் உங்களில் எத்தனை பேர் தினமும் ஒரு நிமிடமாவது இந்த மலையைப் பார்க்கிறீர்கள்? (வெள்ளியங்கிரி மலையை குறித்துச் சொல்கிறார்). இதை நீங்கள் செய்வதில்லை என்றால், இனியாவது கண்டிப்பாக செய்யுங்கள். ஒரு நாளைக்கு ஒரு நிமிடமாவது தலையை உயர்த்தி இந்த மலைகளைப் பாருங்கள். வெறுமனே பாருங்கள். நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது இப்போது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் சென்னைக்கோ அல்லது மும்பைக்கோ குடிபெயரும்போதுதான் எதை இழக்கிறீர்கள் என்பது தெரியவரும். அப்போதுதான் நீங்கள் இதனை உணர்வீர்கள்.

இங்கு நீங்கள் இருக்கும்போது, சுற்றி பல விஷயங்கள் நடக்கின்றன. நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தால் பல்லாயிரம் விஷயங்கள் நடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்களை உங்கள் மடியிலோ, காதுகளில் சொருகியோ வைத்துக் கொண்டு இருந்தால் நீங்கள் சுற்றி நடப்பவை அனைத்தையும் தவறவிட்டுவிடுவீர்கள். கம்ப்யூட்டரை பார்க்கும்போது உங்கள் கண்கள் கம்ப்யூட்டருடனே ஒட்டிக் கொண்டுவிடுகின்றன.

கம்ப்யூட்டர் வாயிலான கல்வி என்ன செய்யும்?

உங்கள் ஆசிரியர்கள் எல்லா வகுப்புகளுக்கும் கம்ப்யூட்டர் வேண்டுமென்று நீண்ட காலமாக என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் எட்டாம் வகுப்பு வரை கம்ப்யூட்டர்களே கூடாது என்று சொல்லி விட்டேன். நீங்கள் அனைத்தையும், உங்கள் கண்களால் நேரில் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும், இந்த உலகத்தில் இல்லாத ஒன்று இந்த கம்ப்யூட்டரில் இல்லை என்பதால்தான் நாம் கம்ப்யூட்டர்களை உங்கள் பள்ளிக் கூடத்தில் தவிர்த்து வருகிறோம்.

இந்த உலகத்தைப் பாருங்கள்! அதை கவனியுங்கள்! இயற்கையைப் பார்ப்பதும், அதை கவனிப்பதும், அதை எப்படி இன்னும் கூர்மையாக கவனிப்பது என்றும் கற்றுக் கொள்வது மிக முக்கியம்.

புரிதலை மந்தமாக்கும் சாதனங்கள்

எலெட்க்ரானிக் பொருட்களைப் பயன்படுத்துபவர்களால் காட்டில் ஒரு நாள்கூட உயிர் பிழைத்திருக்க முடியாது. அருகில் உள்ள தாணிக்கண்டி கிராமத்துக்கு சென்று பாருங்கள். அந்த கிராமவாசி, உங்கள் கண்களால் நீங்கள் பார்க்க முடியாத விஷயங்களையெல்லாம் பார்ப்பார். உங்கள் காதுகளால் நீங்கள் கேட்க முடியாததையெல்லாம் கேட்பார். அவருடைய புலன்கள் அத்தனை கூர்மையாக உள்ளன. இப்போது நீங்கள் தெரிந்துகொள்வது (perception) அனைத்தும் ஐந்து புலன்களின் மூலம்தான் நடக்கிறது. அவற்றை மந்தமாக்கிக் கொள்ளாதீர்கள். எலெட்க்ரானிக் சாதனங்களை அதிகம் பயன்படுத்தினால் அது மூளையை பாதிக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் அலைபேசியைப் பயன்படுத்துபவர்களுக்கு மூளையில் கட்டி ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீங்கள் இசையில் திறமை பெறவேண்டும் என்றால், உங்கள் செவிப் புலனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒரு நல்ல இசை வல்லுனர் ஆக முடியும்.

மொபைல் போன்களின் அதிக பயன்பாடு, குருவி இனத்தை கொல்லமுடியும் என்றால், அது உங்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்குமா என்ன? அது கண்டிப்பாக பாதிப்புகளை உண்டாக்கும். ஆனால் மொபைல் போன்கள் இல்லாமல் இப்போது மனிதனால் வாழ முடியுமா? முடியாது. நவீன வாழ்க்கை அப்படி ஆகிவிட்டது. ஆனால் அவற்றின் பயன்பாட்டினை குறைக்க முடியுமா என்றால், கண்டிப்பாக நம்மால் முடியும். அவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது, ஆனால் அவற்றின் பயன்பாட்டினை நம்மால் குறைக்க முடியும்.

இசை வல்லுனர் ஆக...

குறைந்தபட்சம் நீங்கள் இந்த பள்ளி சூழ்நிலையில் இருக்கும் காலத்திலாவது இயற்கையை ரசித்து மகிழுங்கள், அதை கவனியுங்கள். சும்மா உட்கார்ந்து கவனியுங்கள். நீங்கள் சும்மா தரையில் அமர்ந்து, ஒவ்வொரு நிமிடமும் எத்தனை விதமான சப்தங்கள் உருவாகின்றன என்பதை கவனியுங்கள். ஆனால் நீங்கள் கேட்கும் இசை எலெக்ட்ரானிக் கருவிகளிலிருந்து வருகிறது. இதை யாரோ ஒருவர் எதிரில் அமர்ந்து நேரடியாக இசைக்கவில்லை. அப்படித்தானே?

நீங்கள் இசையில் திறமை பெறவேண்டும் என்றால், உங்கள் செவிப் புலனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒரு நல்ல இசை வல்லுனர் ஆக முடியும். இல்லாவிட்டால் வேறு யாரோ இசைப்பதை நீங்கள் கேட்டுக் கொண்டு மட்டும்தான் இருப்பீர்கள்.

உங்களுக்கு நல்ல குரல் வளம் இருப்பதால் மட்டும் நீங்கள் ஒரு இசைக் கலைஞராகிவிட முடியாது. நல்ல செவிப்புலன், கவனிக்கும் திறன் இருக்க வேண்டும். ஆகவே இந்த வளரும் பருவத்தில் உங்களுடைய புலன்களை இந்த சாதனங்களால் மந்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். இதன் மூலம் இந்த பள்ளியில் உங்களுக்கு எதுவும் மறுக்கப்படவில்லை. உங்கள் இயல்பான உள்வாங்கிக் கொள்ளும் திறனுக்கு நீங்களே தடை விதித்துக் கொள்ளக்கூடாது என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்!