Question: இந்த உலகம் எப்படி இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்? அதை விவரிக்க முடியுமா?

சத்குரு:

இந்த உலகில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் அவர்கள் வெளியே என்ன செயல் செய்தாலும் அதைப்பற்றி எனக்கு எந்த நாட்டமும் இல்லை. ஆனால் அவர்களுக்குள் முழுமையான இசைவுடன் செயல்பட்டால் சரியான செயல்களைத்தான் அவர்கள் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். மனிதனுடைய புத்திசாலித்தனம் சரியான செயல்களை மட்டும்தான் செய்யும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஏனென்றால் மக்களிடம் ஒத்திசைவின்மையும், இணக்கமின்மையும், நிறைவின்மையும் வெவ்வேறு நிலைகளில் இருக்கிறது. அவை இந்த உலகத்தோடு ஒத்திசைவில்லாத பல செயல்களைச் செய்வதில் முடிகிறது. அவர்கள் தங்களுக்குள்ளேயே ஒத்திசைவாக இருப்பார்களேயானால் உலகோடு ஒத்திசைவாய் இயங்க முடியும். அத்தகைய ஒத்திசைவான மனிதர்களை உருவாக்குவது தான் என் பணி. நம்மால் ஒரு மிகப்பெரிய மக்கள் திரளை ஒத்திசைவாக்க முடியுமானால், இயல்பாகவே ஆயிரக்கணக்கான ஞானோதயம் அடைந்த மனிதர்கள் இருப்பார்கள். இயல்பாகவே இது நிகழ்ந்துவிடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவின் கனவு

நம்மால் ஒரு மிகப்பெரிய மக்கள் திரளை ஒத்திசைவாக்க முடியுமானால், இயல்பாகவே ஆயிரக்கணக்கான ஞானோதயம் அடைந்த மனிதர்கள் இருப்பார்கள்.

நீங்கள் ஒரு தோட்டத்தை மிகச் சரியாக பராமரித்து வந்தால் பூக்கள் அங்கே பூப்பதை யாராலும் தவிர்க்க முடியாது. நிச்சயமாக அது நடந்தே தீரும். எனவே என்னுடைய கனவு என்ன என்று என்னை கேட்டீர்களேயானால், தெருவில் இறங்கி நடந்து சென்றால் நீங்கள் காய்கறிகளை விற்பவரை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். அதேபோல ஞானோதயம் அடைந்தவர்களை சாதாரணமாக தெருவில் எல்லா இடங்களிலும் பார்க்க வேண்டும். அவரைத் தேடி இமயமலை குகைகளுக்கோ அல்லது வேறுமலைகளுக்கோ போகத் தேவையில்லை. அப்படி நடக்கும்போது இந்த உலகம் உண்மையிலேயே ஒவ்வொருவரும் வாழ்வதற்கேற்ற இடமாக இருக்கும். ஒரு மனிதன் வாழ்க்கையோடு இணக்கமாய், ஒத்திசைவாய் இருக்கும்போது அவனிடம் செயல்களில் நிர்பந்தம் இருப்பதில்லை. ஒரு மனிதன் விழிப்புணர்வோடு இருக்கும்போது அவனுக்குள்ளும், அவனுக்கு வெளியிலும் எந்த பிரச்சனைகளும் எப்போதும் இருப்பதில்லை. தற்போது உள்ள பிரச்சனைகளுக்குக் காரணமே மனிதர்கள் அவர்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளுக்கு எதிர்செயல் செய்யும் நிர்பந்தத்தில் தங்களை வைத்துக் கொண்டிருப்பதால் தான்.

சத்குருவின் மைசூர் வாழ்க்கை

முதன்முதலில் 'கற்றுக்கொடுக்க வேண்டும்' என்று நான் நினைத்தது... யோகாவைத்தான். ஏனென்றால் என்னுடைய சிறுவயதில் இருந்தே யோகப்பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். எனக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துச் செல்லும் கருவியாக நான் பார்ப்பது யோகாவைத்தான். நான் இந்த யோகப்பயிற்சிகளை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க முடிவு செய்த அந்த காலக்கட்டத்தில், நான் வசித்த மைசூரில் மிகவும் சுறுசுறுப்பாக பல தொழில்களில் ஈடுபட்டிருந்தேன். இது ஒரு சிறிய நகரம். என்னுடைய பள்ளி நாட்களிலிருந்து பலசெயல்களில் ஈடுபட்டிருக்கிறேன். கல்லூரி நாட்களிலும் அப்படித்தான். நகரத்தில் பல தெருக்களிலும் நான் மிக வேகமாக பைக்கில் பயணிப்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். தொழிலிலும் மிகச் சிறந்து விளங்கினேன். ஏனென்றால் மிகக் குறுகிய காலகட்டத்தில் நான் ஈடுபட்டிருந்த தொழில்களில் மிகவும் வெற்றிகரமான நிலையை எட்டியிருந்தேன். எனவே நகரத்தில் பாதி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும் என்று சொல்லலாம்.

அபாயகரமான மனிதர்

ஆனால் நான் என்னுடைய உள் அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தபோது யாரும் என் அருகில் கூட வரவில்லை. ஏனென்றால் நான் ஈடுபட்டிருந்த அத்தனை தொழில்களையும் சட்டென்று விட்டுவிட்டேன். கிட்டத்தட்ட 50, 60 வெவ்வேறு விதமான தொழில்களில் மிகவும் ஆர்வமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவைகள் அனைத்தையும் என்னோடு பங்குதாரர்களாய் இருந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டு கண்ணை மூடி அமர்ந்து விட்டேன். அப்படி இருப்பதே எனக்கு மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. பல இடங்களுக்கு பயணங்களும் மேற்கொண்டேன். நான் ஈடுபட்டிருந்த தொழில்கள் எல்லாம் குடும்பத்தினரின் தொழில்கள் அல்ல. அவை முழுமையாக என்னுடைய விருப்பத்தில் ஈடுபட்ட தொழில்கள். அவை நன்றாகவும் நடந்து கொண்டிருந்தன. தீடீரென்று அவற்றை விட்டுவிட்டதால் நான் மிகவும் ‘அபாயகரமான மனிதன்’ என்ற பெயரை எடுத்தேன். உலகம் அப்படித்தான் நினைத்தது. எனவே யாரும் என்னை நெருங்கவே தயங்கினார்கள். சட்டென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டது அவர்களுக்கு அவ்வளவு அபாயகரமான மனிதனாக என்னைப் பற்றி நினைக்கத் தோன்றியது.

ஆன்மீகம் என்ற பெயரில் எதைச் செய்யகூடாது என்பது 100% எனக்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது.

அதனால் நான் முதன்முதலாகத் துவங்கிய யோகப்பயிற்சிக்கு, மிக சமாதானமாகவும், நைச்சியமாகவும் பேசியே அவர்களை வரவழைக்க வேண்டியிருந்தது. முதலில் தொடங்கிய அந்த யோகப்பயிற்சி, நான்கு நாட்கள் தான். இரண்டு மணிநேரம் மட்டும்தான். என்னுடைய வாழ்க்கையில் எதையும் யாருக்கும் கற்றுக் கொடுத்ததில்லை. அதேபோல எனக்கும் யாரும் எதையும் கற்றுக் கொடுக்க முடிந்ததில்லை. முதன்முதலாக நான் சில விஷயங்களை கற்றுக்கொடுக்க முயற்சித்தேன். ஆனால் யாரும் அதற்கு வர விரும்பவில்லை. கடைசியில் 7 மனிதர்கள் வந்தார்கள். நான் இந்த ஏழு மனிதர்களுக்கும் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன். ஏனென்றால் அதற்குப் பிறகுதான் என்னாலும் ஏதேனும் கற்றுக் கொடுக்க முடியும் என்பதை நான் உணர்ந்தேன். முதலில் இந்த நிகழ்ச்சி இரண்டு மணிநேர நிகழ்ச்சியாகத்தான் தொடங்கியது. ஆனால் இரண்டாவது நாளே இந்த நிகழ்ச்சி ஐந்து மணிநேரம், ஆறுமணி நேரங்களுக்கு நீண்டது. மூன்றாவது நாளும் அப்படியே தொடர்ந்தது. நான்காவது நாள் அனைவரும் இது மிக நன்றாக இருக்கிறது, மிக அற்புதமாக இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இதை நீட்டித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். எனவே நான்கு நாள் நிகழ்ச்சி, ஆறு நாள் நிகழ்ச்சியாக மாறியது. அதற்குப் பிறகு இந்த நிகழ்ச்சி ஒருபோதும் பின்தங்கியதே இல்லை. தற்போது இலட்சக்கணக்கான மக்கள் இப்பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயிற்சி வகுப்பை மேலும் மேலும் செம்மைப்படுத்த பலவித மாறுதல்களை ஏற்படுத்தி தற்போது இதை எல்லா மக்களுக்கும் உபயோகப்படும் வடிவத்தில் உருவாக்கி இருக்கிறோம்.

"சத்குரு" என்றால்...

நான் இந்த பயிற்சி வகுப்பை தொடங்கிய காலத்தில் எந்த ஒரு முறையான வடிவமைப்பும் இல்லை. நான் எப்படி விரும்பினேனோ அப்படி கற்றுக் கொடுத்தேன். ஏனென்றால் ஆன்மீக ரீதியான எந்த உலக முன் அனுபவமும் எனக்கு இல்லை. ஆன்மீகரீதியாக நான் எதையும் படிக்கவும் இல்லை. இப்போதும் கூட ஆன்மீகம் சார்ந்த எந்த விஷயங்களையும் படிப்பதில்லை. ஆன்மீக ரீதியாக நான் புலமை வாய்ந்தவன் அல்ல. அதனால்தான் மக்கள் என்னை ‘சத்குரு’ என்றழைக்கிறார்கள். ‘சத்குரு’ என்றால் படிப்பறிவில்லாத குரு என்று பொருள். ‘உள்நிலையில் இருந்து செயல்படுபவர்’ என்பதுதான் அதன் உண்மையான பொருள். அவருக்கு இதிகாசங்களோ அல்லது புனிதநூல்களோ எதைப்பற்றியும் தெரியாது. எனவே நான் எதையும் படித்துக் கற்றுக் கொள்ளவில்லை அல்லது ஒரு சில இடங்களுக்கு சென்று அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே சொல்லித் தரவும் இல்லை.

ஈஷா யோகா உருவான விதம்

உண்மையில் நான் சென்ற இடங்களில் பார்த்ததெல்லாம், எல்லாவிதமான தந்திரங்களையும், வழிமுறைகளையும், தொழில்நுட்பங்களும் வைத்திருந்தாலும் அவர்களுக்கு உள்நிலை அனுபவம் என்பது சிறிதுமில்லை. ஆனால் எனக்கு மிகப் பிரம்மாண்டமான உள்நிலை அனுபவம் இருந்தாலும் எந்த தொழில்நுட்பமும், வழிமுறைகளும் எனக்கு தெரிந்திருக்கவில்லை. எனவே அவர்கள் செய்து கொண்டிருந்த விஷயங்களையெல்லாம் பார்த்தபோது நான் எதை செய்யக்கூடாது என்பது தெளிவாகத் தெரிந்தது. உண்மையிலேயே அவர்கள் மிகப் பெரும் பங்களிப்பை எனக்கு செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆன்மீகம் என்ற பெயரில் எதைச் செய்யகூடாது என்பது 100% எனக்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது. சில மனிதர்களும், சில குழுக்களும் இயங்கும் விதத்தைப் பார்த்து நான் அவற்றை புரிந்து கொண்டேன். வேறுசில மனிதர்களும் இந்த நிகழ்ச்சியை வடிவமைப்பதற்குப் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ அதன் உண்மையான மதிப்பு என்னவென்று தெரியாமலேயே சில விஷயங்களை அவர்கள் தங்கள் பயிற்சி வழிமுறைகளில் வைத்திருந்தார்கள். அதே விஷயங்களை நானும் இந்த பயிற்சி முறைகளில் சேர்த்துக் கொண்டேன். ஆனால் முற்றிலும் வேறுவிதமாக.

நாம் இதனை வழங்கும் விதம் முற்றிலும் தனித்துவமானது. உலகின் எம்மூலையிலும் ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்படுவதுபோல் பிற யோக வகுப்புகள் வழங்கப்படுவதில்லை. இந்த பயிற்சி முறைகளில் எதைச் சொல்லித் தருகிறோமோ அதையே பலரும் சொல்லித் தரலாம். ஆனால் இங்கு நாம் வழங்கும் அதே பரிமாணத்தில், அதே ஆழத்தில், இது உலகில் வேறெங்கும் வழங்கப்படுவதில்லை.