இந்தியாவில் பிறந்துவிட்டால், இராமாயணம் மற்றும் மஹாபாரதம் போன்ற நமது புராணங்களை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. பாட்டி சொன்ன கதை மூலமோ, பாட புத்தகம் வழியாகவோ அல்லது மெகா சீரியலாகவோ, அந்தப் புராணங்கள் நம் வாழ்வின் அங்கமாகிவிடுகின்றன. அப்படிப்பட்ட புராணங்கள் சத்குருவின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கமென்ன? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

சத்குரு:

புராணங்களில் எனக்குப் பெரிய ஈடுபாடு கிடையாது. ஆனால் இந்த தேசத்தில் வாழ்ந்து கொண்டு, ராமாயணமோ, மஹாபாரதமோ எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

இந்தப் புராணங்கள் வேறு ஏதோ உலகத்திலிருந்து வந்து இறங்கிவிடவில்லை. இந்தப் பூமியில் வாழ்ந்த மனிதர்களின் பதிவுகளாகவே அதைப் பார்க்கிறேன். நம் நாட்டில் தேதிவாரியாக சரித்திரம் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதாலேயே, இவர்கள் கற்பனைப் பாத்திரங்களாகிவிட மாட்டார்கள்.

இந்தப் புராணங்கள் வேறு ஏதோ உலகத்திலிருந்து வந்து இறங்கிவிடவில்லை. இந்தப் பூமியில் வாழ்ந்த மனிதர்களின் பதிவுகளாகவே அதைப் பார்க்கிறேன்.

முக்கியமாக மஹாபாரதம். இது இன்றைக்கும் அர்த்தமுள்ளதாக விளங்குகிறது. இன்றைய நாளிலும் நம்மைச் சுற்றி துரியோதனர்களையும், அர்ச்சுனர்களையும், தர்மராஜர்களையும் உயிரோடு வெவ்வேறு மனிதர்களிடம் காண முடிகிறது. அதே பிரச்சனைகள், அதே பாரபட்சமான மனநிலை, அதே துரோகம், அதே தந்திரங்கள் எதுவும் மாறவில்லை.

மஹாபாரதத்திலும், மற்ற எல்லாரையும் விட கிருஷ்ணன் வித்தியாசமானவன். அழகன். புத்திசாலி. வாழ்க்கையில் லயிப்பு கொண்டவன்.

அவனை விளையாட்டுப் பிள்ளையாகவே பலர் சித்திரிக்கிறார்கள். அவனுடைய 16 வது வயது வரைதான் அவன் சேட்டைகள் செய்தான். எப்போது அவனுடைய குரு, வாழ்க்கையின் நோக்கத்தை அவனுக்குச் சுட்டிக் காட்டினாரோ, அந்தக் கணத்தில் கிருஷ்ணன் விளையாட்டுத்தனங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதுவரை கோபிகைகளைக் குழலூதி வசீகரித்துக் கொண்டு இருந்தவன், தன்னிலை உணர்ந்த பின், புல்லாங்குழலைத் தன் காதலி ராதையிடம் கொடுத்துவிட்டான். அவள்தான் அதற்குப் பின் புல்லாங்குழலை வாசித்துக் கொண்டு இருந்தாள்.

அவனிடத்தில் மாபெரும் ராஜ்யத்தை ஆளும் திறன் இருந்தது. வீரம் இருந்தது. விவேகம் இருந்தது. ஆனால் அதற்கான விருப்பம்தான் இல்லை. அவனுடைய வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், தவறாகப் புரிந்து கொண்டவர்களே இன்றைக்கு அதிகம். குறிப்பாக, இன்றைய இளைஞர்கள் அவனைப்பற்றி சரியான தகவல்களைக் கேள்விப்படுவதில்லை.

தன்னிலை உணர்ந்தபின், அவன் தன் வாழ்க்கையை ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழலானான். ஆட்சியில் இருந்தவர்களிடத்தில் ஆன்மீகப் பாதையில் செல்லும் ஆர்வத்தைத் தூண்டினான். மனிதர்களிடத்தில், அவர்களால் கவனிக்கப்படாமல் இருந்த ஆன்மீகக் கோணத்தைப் பற்றிய கவனத்தைக் கொண்டு வர முனைந்தான். ஏதோ ஒருவிதத்தில் அரசியலையும், ஆன்மீகத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே அவன் நோக்கமாக இருந்தது.

எந்தச் செயலையும் ஆழமான ஈடுபாட்டுடன் செய்கையிலும் விளையாட்டுத்தனத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்தான். உலகில் இன்றைக்கு அதுதான் அவசியத் தேவை. விளையாட்டுத்தனம் அற்ற தீவிர ஈடுபாடு, சர்வாதிகாரப் போக்காக உருமாறிவிடும். ஈடுபாடு இல்லாத விளையாட்டுத்தனமோ பொறுப்பற்ற செயலாகிவிடும்.

இந்த இரண்டையும் மிகச் சரியான விகிதத்தில் கொண்டு சென்றதால்தான் கிருஷ்ணன் மிக மேன்மையான செயல்களையும் சிரித்துக் கொண்டே செய்ய முடிந்தது. அவனுடைய விளையாட்டுத்தனமும், முழுமையான அர்ப்பணிப்பும், ஞானமும், விவேகமும் பிரமிக்கத்தக்க கலவை.

எல்லா அளவுகோல்களிலும் கிருஷ்ணன் அபாரமானவனாக உயர்ந்து நிற்பவன். எந்தத் தலைமுறையும், எந்தக் கலாச்சாரமும் அவனை ஒரு முன்மாதிரியாக ஏற்க முடியும். அதற்காகப் புராண மனிதர்களிடத்திலிருந்துதான் நாம் எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்று சொல்லவில்லை.

ராமகிருஷ்ணர் ஓர் அற்புதமான கதை சொல்வார்.

இந்த தேசத்தில் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சொத்து சுகங்கள் எல்லாவற்றையும் துறந்ததொரு வாழ்க்கையை மேற்கொள்ளும் வழக்கம் இருந்தது.

வாழ்க்கையின் பின்பகுதியில் இருந்த ஒரு தம்பதி காசி நோக்கி பயணம் கிளம்பினர். போகும் வழியில் தரையில் ஒரு வைரம் கிடப்பதைக் கணவன் கவனித்தார். எங்கே அந்த வைரத்தைப் பார்த்துவிட்டுத் தன் மனைவி அதை அணிந்து கொள்ளும் ஆசையில் துறவற எண்ணத்தைக் கைவிட்டு விடுவாளோ என்று அவருக்குக் கவலை வந்தது. வைரத்தைத் தன் பாதத்தால் மூடி மறைத்தார்.

அவர் எதையோ மிதித்து மறைப்பதை மனைவி கவனித்துவிட்டாள்.

"என்ன மறைக்கிறீர்கள்?" என்று கேட்டாள். அவர் பூசி மழுப்பப் பார்த்தார். மனைவி அவர் காலடியில் மறைக்கப்படுவது வைரம் என்பதைக் கவனித்தாள்.

"மண்ணுக்கும், வைரத்திற்கும் வித்தியாசம் பார்க்கும் நீங்கள் எப்படி எல்லாவற்றையும் துறக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டாள்.

கணவர் தலை குனிந்தார்.

அந்தக் கணவர் வைரத்தைப் பார்த்ததுபோல 'பழையன மட்டுமே மதிப்புமிக்கவை' என்று வாழ்க்கையைப் பார்ப்பதும் முட்டாள்தனம். ஏதோ முந்தைய தலைமுறைகளுக்கு மட்டுமே புத்திசாலித்தனம் இருந்ததாகச் சொல்வது மனித இனத்துக்கே கேவலம்.

புராணங்களிலிருந்துதான் ஞானம் பெற வேண்டும் என்று நான் பார்க்கவில்லை. ஆனால், ஏதோ ஒரு சினிமா நடிகரின் தாக்கத்தை விட கிருஷ்ணனுடைய தாக்கம் நேர்ந்தால் பல மடங்கு சிறப்பானது.

நம் குழந்தைகளுக்குப் புராணங்கள் அவசியமா?

நிச்சயமாக. அதே சமயம், நம்ப முடியாத கதைகளைத் தவிர்க்க வேண்டும். வாழ்ந்த விதத்திலேயே ராமனும், கிருஷ்ணனும் மேன்மையானவர்கள்தாம். வானில் பறந்தான். கீழிருந்தே மலை உச்சிக்கு கால் எடுத்துவைத்தான் என்றெல்லாம் அவர்களைப் பற்றி நம்ப முடியாதவற்றைச் சொல்லித்தான் புகழ் தேடித் தர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மிகைப்படுத்தாமல், சரியான உண்மைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது!