பிரபல டயட்டீஷியன் ஷைனி சந்திரன் பிரபலங்கள் பலருக்கும் உணவு ஆலோசகராக இருப்பவர். உணவின் ரகசியங்களை அறிந்து அதை எப்படி உடலுக்குச் சக்தியாக மாற்றுவது என்று அறிந்தவர். இவருடைய உணவுக் குறிப்புக்கள் மிகவும் பிரபலமானவை. தன் சொந்த வாழ்க்கையின் உணவு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஷைனி சந்திரன்...

ஷைனி சந்திரன்:

“நாங்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அங்கு கிடைக்கும் அரிசி இங்கேபோல மெல்லியதாக இருக்காது. குண்டு குண்டாக இருக்கும். அத்தனையும் சத்து நிறைந்தவை. நான் சின்ன வயதில் பள்ளியில் இருந்து திரும்பி வரும்போது ஒரு டிபனை எதிர்பார்த்துக்கொண்டே வருவேன். அது என் அம்மா செய்யும் ‘இனிப்பு தோசை’. அவ்வளவு ருசியாக இருக்கும். தினமும் சாப்பிட்டாலும் அலுக்காது.

அதனுடைய உணவுச் சத்து அப்போது எனக்குத் தெரியாது. ஒரு சத்துணவு நிபுணராக ஆன பிறகுதான் நம் பாரம்பரிய உணவு வகைகள் எத்தனை சத்துடையவையாக இருக்கின்றன என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இப்போதும் மாலையில் அம்மா செய்யும் இனிப்பு தோசையை நினைத்துக் கொண்டேதான் வீட்டுக்குப் போகிறேன். அம்மாவும் எனக்கு அலுக்காமல் அந்தத் தோசையை வார்த்துக்கொடுக்கிறார்கள்.” என்று சிரித்தவர்,

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முதலில் அந்த தோசையை எப்படிச் செய்வது என்று ‘ரெசிபி’ கொடுத்துவிடுகிறேன். அப்புறம் அது சத்து வகையில் எப்படிச் சிறந்தது என்பதைச் சொல்கிறேன்..” என்றார்.

இனிப்பு தோசை

தேவையான பொருட்கள்:

புட்டரிசி (சிகப்பு அரிசி): 1 டம்ளர்
புழுங்கலரிசி: கால் டம்ளர்
உளுந்து: ஒரு கைப்பிடி
வெல்லம்: சுவைக்கேற்ப
சுக்குப்பொடி: 1 சிமிட்டா
எள்: அரை தேக்கரண்டி
துருவிய தேங்காய்: இரண்டு மேஜைக்கரண்டி

செய்முறை:

  • அரிசியையும், உளுந்தையும் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறிய பின் மாவாக அரைத்து, கடைசியில் வெல்லம், சுக்குப்பொடி, எள், தேங்காய் வைத்து ஒரு நிமிடம் அரைத்து எடுக்கவும்.
  • அரை மணி நேரம் வைத்த பிறகு, தோசைகளாக ஊற்றிச் சாப்பிடலாம்.
  • இதே மாவை சில மணி நேரங்கள் புளிக்க வைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆவியில் வேக வைக்கலாம்.
  • பிறகு துண்டுகளாக வெட்டி சுவையான கேக்குகளாகவும் சாப்பிடலாம்.

புட்டரிசி, உடலுக்கு மிகவும் சத்து கொடுப்பது, உணவுக்கு மிகவும் சுவையையும் கொடுக்கும். புழுங்கலரிசியும் அப்படித்தான். இரண்டுமே கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போன்ற உணர்வைக் கொடுக்கும்.

உளுந்து, புரோட்டீன் சத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு மிகவும் அவசியமான தானியம் உளுந்து.

வெல்லம் இரும்புச் சத்துகொண்டது.

சுக்குப் பொடி நல்ல ஜீரணச் சத்தைக் கொடுக்கும். அரிசி, உளுந்தினை நன்கு ஜீரணிக்கச் செய்துவிடும். அதே சமயம் காரச் சுவையையும் தோசைக்குக் கொடுக்கும்.

எள்ளு அருமையான சத்துணவு.

தேங்காயைத் துருவி ஃப்ரீசரில் வைத்துப் பயன்படுத்தாமல், அவ்வப்போது புதிதாக உடைத்துத் துருவிப் பயன்படுத்த வேண்டும். சருமம் நன்கு மின்னும். இதுபோல தேங்காயைப் பயன்படுத்தும் கேரளப் பெண்களைப் பார்த்தாலே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மாவைப் புளிக்கவைத்து ‘கேக்’காகச் செய்யும்போது ஈஸ்ட் உற்பத்தியாகிறது. இது குடலுக்கு மிகவும் நல்லது. தவிரவும் பி12 சத்தும் கிடைக்கிறது.

இப்படி ஒரே ஒரு தோசையில் இவ்வளவு உணவுச் சத்துக்களை வைத்தது மட்டும் இல்லாமல், சிறுவர்களும் அதை விரும்பி உண்ணுமாறு செய்த நம் முன்னோர்களை நினைத்துப் பிரமிக்கிறேன்!”