இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இனிப்பின்மேல் உள்ள ஆர்வத்தைக் கட்டுப்படுத்தும் வழியை ஒருவர் கேட்க, அதற்கான பதிலோடு நம் பலவிதமான கட்டாயங்களைக் கையாளும் யுக்திகளையும் நம்மோடு பகிர்ந்துள்ளார் சத்குரு...

Question: நமஸ்காரம் சத்குரு, தீவிர ஆன்மீக சாதனைக்குப் பிறகும் என்னால் இனிப்புகள் சாப்பிடும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை! ஏன் இப்படி இருக்கிறது? காலப்போக்கில் இந்த ஆசை காணாமல் போகுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாம் செய்யும் பலவிதமான யோகப்பயிற்சிகள் மூலம், அடிப்படையில் நாம் இந்த உயிரின் இரசாயன அமைப்பை மாற்றிடவே முயற்சிக்கிறோம். நீங்கள் ஒருவிதமான இரசாயன சூப். நீங்கள் அற்புதமான சூப்பா, மோசமான சூப்பா என்பதே கேள்வி. நேரம், சந்திரனின் அமைவு, உங்களைச் சுற்றியுள்ள மக்கள், உங்கள் வாழ்வின் நிகழ்வுகள், ஆகியவற்றைப் பொறுத்து தினமும் இந்த சூப்பானது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்தக்கணம் நீங்கள் ஒரு அற்புதமான சூப்பாக இருக்கிறீர்கள். அடுத்தக்கணமே நீங்கள் மோசமான சூப்பாகவோ, பயம்நிறைந்த சூப்பாகவோ மாறிவிடுகிறீர்கள். மீண்டும் அடுத்தக்கணத்தில் ஆனந்தமான சூப்பாக மாறுகிறீர்கள்.

உங்கள் போக்கு எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, அதன் அடிப்படை மரபணுக்களாக இருக்கலாம், கர்மவினையாக இருக்கலாம், அல்லது அந்த பாழாய்ப்போன இனிப்பு மிகவும் ருசியானதாக இருக்கலாம்! மரபணுக்களோ கர்மவினைப் பதிவுகளோ உங்கள் உடலிற்குள் ஒருவிதமான இரசாயன அமைப்பினை உருவாக்குகிறது. இந்த இரசாயன அமைப்பு வலுவாகும்போது ஒருவர் கட்டாயத்தால் ஆட்கொள்ளப்பட்டு உந்தப்படுகிறார். பல்வேறு யோகமுறைகள், குறிப்பாக ஹதயோகா மற்றும் க்ரியா செய்வதன் நோக்கமே, உங்கள் உடலமைப்பிற்குள் ஒருவிதமான இரசாயன அமைப்பை நிலைப்படுத்துவதன் மூலம், அது இயல்பாகவே இனிப்பாக இருக்கும், பேரானந்தமாக இருக்கும். சும்மா உட்கார்ந்தாலே இந்த உயிர் மிகவும் இனிப்பாக இருக்கிறபோது வேறெந்த இனிப்பையும் நினைக்கத் தோன்றாது.

இவை அனைத்துமே, நீங்கள் இப்போது இருக்கும் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து உணர்பவை. கைகளை தண்ணீரில் வைத்தால் சில்லென இருக்கிறது, அது குளிர்ச்சியாகத் தெரிவதன் காரணம் உங்கள் உடலின் உஷ்ணமே. உங்கள் உடல் குளிர்ந்து இருந்தால், அதே நீர் உங்கள் கைகளுக்கு வெப்பமாகத் தெரியும். இனிப்பும் அப்படிதான். நீங்கள் மிகவும் இனிப்பாக மாறிவிடுங்கள், இனிப்பின்மேல் உங்களுக்கு இருக்கும் ஈர்ப்பு குறைந்துவிடும். நான் இனிப்பு என்று இரண்டு விதங்களிலும் சொல்கிறேன், வெறும் சர்க்கரையைக் குறிக்கவில்லை, ஏதோ ஒன்று இனிமையாக இருப்பதையும் குறிக்கிறேன். நீங்கள் மிகவும் இனிமையாக மாறிவிட்டால், உங்களுக்கு மிகவும் இனிமையானது நீங்கள்தான் என்றாகிவிட்டால், மற்ற எதுவும் ஒரு பொருட்டாக இருக்காது. அவற்றை நீங்கள் கைவிட வேண்டிய அவசியமில்லை, அதன்பால் ஈர்க்கப்படும் கட்டாயம் எப்படியும் குறைந்துவிடும்.

கட்டாயம் என்பது சாப்பிடும் பதார்த்தம் மேல் இருக்கலாம், ஏதோவொரு செயலின்பால் இருக்கலாம், அல்லது பிற மனிதர்கள் மீதும் இருக்கலாம். இது ஒழுக்கம் பற்றியதோ, சரி தவறு பற்றியதோ அல்ல. இது சுதந்திரமா பிணைப்பா, அல்லது அடிமைத்தனமா விடுதலையா என்பது குறித்தது. மனித வாழ்க்கையில் எது நிகழ்ந்தாலும் அது விழிப்புணர்வாக நிகழவேண்டும். இனிப்புகள் மட்டுமே இன்று சாப்பிடுவேன் என்று விழிப்புணர்வாக நீங்கள் முடிவு செய்திருந்தால், அது உங்கள் தேர்வாக இருக்கும். ஆனால் உங்களுக்குள் ஏதோவொன்று உங்களை கட்டாயப்படுத்தினால், அதற்கு கொஞ்சம் கவனம் கொடுக்கவேண்டும். அந்த இனிப்பிற்கு கவனம் கொடுப்பதல்ல, இந்த உயிர்மேல் கவனம் செலுத்த வேண்டும். பிரச்சனை இனிப்பு அல்ல, "நான் இப்போது கட்டாயத்தால் உந்தப்படும் சூப்பாக இருக்கிறேன், இது நிலையானதாக இல்லை" என்பதுதான் பிரச்சனை. ஏதோ ஒன்றை இப்போது எதிர்கொள்கிறீர்கள் என்றால், அதை உங்கள் விழிப்புணர்வில் கொண்டு, உங்கள் ஆன்மீக சாதனையைத் தொடர்வதே சிறந்தது, அது தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும். ஆனால் உங்கள் இனிப்பு பிரச்சனைக்கு அதிக கவனம் கொடுத்தால், அது குரங்கு பிரச்சனையைப் போல மாறிவிடும், "நான் குரங்கை நினைக்கவே கூடாது" என்றால் குரங்கை மட்டும்தான் நினைத்திருப்பீர்கள்!

எனவே இனிப்பைத் துறந்திட முயலாதீர்கள். அதை ஒரு பெரிய விஷயமாக மாற்றாதீர்கள். ஏதோ ஒன்று சாப்பிட்டால் பரவாயில்லை. இதை மட்டும் செய்யுங்கள், இரண்டு வேளை உணவிற்கு இடையில் எந்த இனிப்பும் சாப்பிட வேண்டாம். உணவு வேளையில், பிறர் முன்னிலையில், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்! தனிமையில் சாப்பிடுவதுதான் பிரச்சனை. அதனால் பதுக்கி வைத்திருக்கும் இனிப்புகள் அனைத்தையும் அழித்திடுங்கள், கட்டாயங்கள் குறைந்துவிடும்.

Love & Grace