இக்கட்டிலிருந்து இமயம் வரை…

ikkattilirunthu-imayam-varai

ஒரு விபத்து தன் வாழ்க்கையையே புரட்டிப் போட, ஈஷாவினால் அந்த துயரத்திலிருந்து மீண்டு, இமயமலை பயணமும் முடித்து இப்போது நிறைவுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் திரு. சிதம்பர ராவ் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை இங்கே…

சிதம்பர ராவ் – அறிமுகம்

மென்மையான வாழ்க்கைத்துணை, முத்தாய்ப்பாய் ஒரு குழந்தை, அன்பான தாய், இன்ஜினியர் பணி, ஹைதராபாத் நகர வாழ்க்கை என திரு. சிதம்பர ராவ் அவர்களின் வாழ்க்கை மிகவும் அமைதியாகப் போய் கொண்டிருந்தது.

இதிலிருந்து நான் வெளியே வர வேண்டும் என்றும் வாழ்வு மற்றும் மரணத்தின் ஆழத்தை உணர வேண்டும் என்றும் நான் விரும்பினேன்.
இருப்பினும் தன்னுள் ஏதோ ஒன்று நிறைவடையாதது போலவே அவர் உணர்ந்தார். தனது கல்லூரி நாட்களிலிருந்தே பல புத்தகங்களின் பக்கங்களுக்குள் வாழ்வின் உண்மையை தேடிக் கொண்டிருந்த அவருக்கு வாழ்வு அதன் உண்மை சொரூபத்தை வெளிப்படுத்தியபோது அது சற்றுக் கடுமையாகவே இருந்தது.

மீளமுடியா விபத்து

1992ல் தனது 32 வது வயதில் ராவ் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஷீரடி சாய்பாபா மீது இருந்த அசையாத நம்பிக்கையால் அதிலிருந்து அவர் மெல்ல வெளிவர முடிந்தது. 1994 ஆம் ஆண்டு தனது மனைவி குழந்தையுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிரே வந்த டிரக் வண்டி அவரது காருடன் மோதியது. ஹைதராபாத் நகரத்திலிருந்து சுமார் 80 கிமீ தொலைவில் நடைபெற்ற இந்த மோதல், ராவ் அவர்கள் புரட்டிய பல புத்தகங்கள் கூட விளக்காத உண்மையை விளக்கிட, இதோ இவரை புரட்டிப் போட்டது.

அது மட்டுமல்ல, புரண்டு விழுந்த அவரது மார்பை காரின் ஸ்டியரிங் சக்கரம் சரியாக பதம் பார்த்தது.

ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உடைந்து போன விலா எலும்புகள், நசுங்கிப் போன கல்லீரல், இடம் மாறிய விதானம் (diaphragm) மற்றும் நொறுங்கிப் போன இடுப்பெலும்புகளுடன் ராவ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

80% கல்லீரல் அகற்றப்பட்டு, ஸ்டீல் மற்றும் சில திருகாணிகளால் செயற்கை இடுப்பு பொருத்தப் பட்ட நிலையில், சுவாசம் கூட இயந்திரத்தின் உதவியுடன் நடக்க, மெல்ல நினைவுக்கு வந்த அவருக்கு காத்திருந்த செய்தி மனைவியின் மரணமும் மகனின் எலும்பு முறிவும்தான்.

மேலும் சர்க்கரை வியாதியும் ரத்த அழுத்தமும் சேர்ந்து கொள்ள, ராவின் அன்றாட வாழ்க்கைத் துணையாக மருந்தும் மாத்திரைகளும் ஆகிவிட்டன.

“6 மாதங்கள் படுக்கையில் இருந்த நான் மீண்டும் சகஜநிலைக்கு வரவே முடியாது என்பது போல இந்த விபத்து என் உடலையும் மனதையும் மிகவும் பெரிய பாதிப்புக்குள்ளாக்கியது.”

“இதிலிருந்து நான் வெளியே வர வேண்டும் என்றும் வாழ்வு மற்றும் மரணத்தின் ஆழத்தை உணர வேண்டும் என்றும் நான் விரும்பினேன்,” என்று கூறிய ராவின் தேடுதல் மேலும் அதிகரித்தது.

வேலைக்கு செல்ல முடியும் என்றாலும் தனது 11 வயது மகனை அருகிலிருந்து வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்ட தன் தாயை கவனித்துக் கொள்வதற்காகவும் வேலையை ராஜினாமா செய்து விட்டார்

சிதைந்த உடலின் சீர் செய்யப்பட்ட பாகங்களைச் சுமந்து கொண்டு வாழ்நாட்களைக் கழித்தாலும் அவரது சிந்தனை மட்டும் அமைதி எங்கே என்று தேடிக் கொண்டே இருந்தது.

ஹைதராபாத் நகர வீதிகளில் தொங்கிய விளம்பரப் பலகைகள் பல ராவ் தேடும் அமைதியை தருவதாகக் கூவி அழைக்க பல யோக நிகழ்ச்சிகளுக்கு ராவ் சென்று வந்தார்.

வரமாய் வந்த ஈஷா…

நிறைவடையாத இந்த தேடலுடன் ஒரு நாள் ராவ் பயணப்பட்டது கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திற்கு! ஈஷாவைப் பற்றி ஏதும் தெரியாத நிலையில், தியானலிங்கத்தில், சில நிமிடங்கள் அமரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. கண்களை மூடி அமர்ந்தபோது கிடைத்த அந்த ஆழ்ந்த அமைதி, எப்போதும் உணர்ந்திடாத இந்த புது உணர்வு தனக்கு இன்னும் வேண்டுமென அவர் மனம் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஈஷா யோகப் பயிற்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்றால் இதெல்லாம் எனக்கு சாத்தியமாகி இருக்காது.
மீண்டும் ஹைதராபாத் திரும்பியபோது, அதிசயமாய் சத்குரு அவர்களே அங்கு நிகழ்த்தும் யோகப் பயிற்சியின் அறிவிப்புப் பலகை அவர் கண்களில் பட, உற்சாகமானார் ராவ். உடனே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராவ் “இந்நிகழ்ச்சி என் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது,” என்று கூறுகிறார். தாகம் மேலும் ஆழமாகிப் போக அடுத்தடுத்த ஈஷா யோகா பயிற்சிகளில் கலந்து கொண்டார்.

“இந்தியாவில் பிறந்தவர் ஒவ்வொருவரும் இமயமலை யாத்திரை சென்று அதனை ஒரு முறையாவது உணர்ந்து பார்க்க வேண்டும்,” என்று சத்குரு சொல்வதைக் கேட்ட ராவிற்கு இமயமலை செல்ல வேண்டும் என்ற ஆசை தொற்றிக் கொண்டது.

ஆனால் ராவின் உடல் நிலை?

படிக்கட்டு ஏறுவதையும் தவிர்க்கச் சொல்கிறது ராவின் மருத்துவ அறிக்கை! அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செயற்கைப் பொருட்களால் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கால்களை கொண்டு இமயமலையா?

ஆனால் இமயத்தை அடைந்துவிட வேண்டும் என்ற ஆசை மட்டும் அவருள் தீவிரமாய் வளர்ந்தது. ஈஷா யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்த ராவின் உடல் நலம் நன்றாக முன்னேறினாலும் ‘இந்த கால்கள் எப்படி?’ என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அது 2004ம் ஆண்டு. இந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது, இமயமலை சென்றே தீருவது என தீரமாய் முடிவெடுத்தார் ராவ்.

இமயம்… கைலாயம்…

சத்குருவின் அருளால் வெற்றிகரமாக இமாலயப் பயணத்தை முடித்த ராவின் உடலில் பற்றிக் கொண்ட புத்துணர்ச்சி அதன் பிறகு மீண்டும் இரண்டு முறை அவரை இமயம் செல்ல வைத்தது.

சாயாத்ரி மலை பிரதேசத்தில் ஒரு வாரம் டிரக்கிங் செய்து சத்குருவுடன் புனித கைலாய மலையையும் மானசரோவர் ஏரியையும் அடைந்த அந்தத் தருணங்களை தன் மனத்திரையில் ஓட்டி பார்க்கும் ராவ், “இதை என்னாலேயே நம்ப முடியவில்லை,” என்று கூறுகிறார்.

நம்மில் பலரும் வாழ்வு என்பதை மிகச் சாதாரணமாக எண்ணலாம். ஆனால் மரணத்தின் விளிம்பைத் தொட்டு விட்டு வந்த ராவ் அவர்களுக்கோ வாழ்வு என்பது மிகப் பெரிய பொக்கிஷம். வாழ்வு என்னும் அற்புதத்தை ஒரு கணமும் வீண் செய்யாமல் தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும் ராவ், “நான் உயிரோடு இருப்பதையே நம்ப முடியாத இந்த நிலையில் நான் உயிரோட்டமாகவும் இருப்பது பலருக்கும் நம்புவது கடினம் தான்! ஈஷா யோகப் பயிற்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்றால் இதெல்லாம் எனக்கு சாத்தியமாகி இருக்காது. நான் துன்பத்தில் மூழ்கி குழப்பத்தின் குவியலாகவே இருந்திருப்பேன். சத்குருவுக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை,” என்று நம் கண்களை நனைக்கிறார்.

தற்போது ராவின் உடல் நிலை பெருமளவு முன்னேறி ரத்த அழுத்தமும், ரத்தத்தின் சர்க்கரை அளவும் பெருமளவு கட்டுக்குள் வந்துவிட்டது. தொடர்ந்து ஈஷா யோகப் பயிற்சிகளை செய்து வரும் இவர் தற்போது முழுநேரத் தன்னாரவத் தொண்டராக ஈஷா யோகா மையத்தில் வசித்து வருகிறார். அவரது மகன் ஜெர்மனியில் பொறியியல் மேற்படிப்பு படித்து வருகிறார். மன அழுத்தத்திலிருந்து விடுபட்ட அவரது தாய் தற்போது ஹைதராபாத்தில் அவரது சகோதரர் வீட்டில் இருக்கிறார்.

இடிபாடுகளிலிருந்து இமயம் வரை பயணித்த ராவ் அவர்களின் வாழ்க்கை, காணும் ஒவ்வொருவருக்கும் புது நம்பிக்கையை அளிக்கிறது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert