ஈஷா யோகா மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற இரண்டாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை!

ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 2 முதல் 10 வரை) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் என்று மட்டுமல்லாமல், நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறவிருக்கிறது. 9 நாட்கள் திருவிழாவில், இன்றைய இரண்டாம் நாள் கொண்டாட்டத்தில் திரு.மஞ்சுநாத் M.ஹொசவல் மற்றும் திரு.பிரசாந்த் அகடம் ஆகியோரின் இந்துஸ்தானி குரலிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 6.45 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். முதல் பாடலாக ‘துர்கே பவனி’ எனும் ராகமாலிகாவில் அமைந்த ‘பேண்டிஷ்’ (பேண்டிஷ் எனும் இந்தி வார்த்தைக்கு ‘ஒன்றாக இணைதல்’ எனப் பொருள்) பாடலுடன் தங்களது இசை நிகழ்ச்சியை துவங்கிய இருவரும், தொடர்ந்து சில மனதை மயக்கும் ராகங்களில் இந்துஸ்தானி இசை மழை பொழிந்தனர்.

ஸ்ரீநாமதேவர் இயற்றிய ‘விட்டல’ எனும் விஷ்ணு அம்சத்தைப் போற்றிப்பாடும் மராத்தி பாடலைப் பாடி அவர்கள் பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றனர். ‘ஷம்போ சங்கர மஹாதேவ்’ எனும் சிவனைப் போற்றும் அற்புத பாடலை வழங்கி நிகழ்ச்சியை இருவரும் இனிதே நிறைவு செய்தனர்.

திரு.R.V.பிராசாத் அவர்கள் மிருதங்கம் வாசிக்க, திரு.ப்ரவீன் குமார் மிஷ்ரா அவர்கள் தபேலா வாத்தியத்தை கையாண்டார். பாரம்பரிய இசையில் நன்கு தேர்ச்சிபெற்ற இவர்கள் இருவரும் ஈஷா சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களுக்கு இசை ஆசிரியர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு இணைந்து திரு.மஞ்சுநாத் மற்றும் திரு.பிரஷாந்த் ஆகிய இருவரும் வழங்கிய இந்துஸ்தானி இசைக் கச்சேரி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மஞ்சுநாத் மற்றும் பிரஷாந்த்

தனது 10 வயதில், கடாகில் பத்மபூஷன் டாக்டர்.பண்டிட் புட்டராஜ் கவி கவவயிகல் ஆஷ்ரமாவின் வழிகாட்டுதலின் கீழ் இசை கற்கத் துவங்கிய திரு.மஞ்சுநாத் அவர்கள், தனது 18 ஆம் வயதில் பண்டிட்.கணபதி பாட் ஹசங்கியிடம் இசை பயின்றார்.

தனது 9வது வயதில், எல்லப்புரந்தில் பண்டிட்.தத்ரேயா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இசைப் பயிற்சியை துவங்கிய திரு.பிரஷாந்த் அவர்கள், தனது 16ஆம் வயதில் புனேயில் பண்டிட்.பபன்ட்ரோ ஹல்டங்கர் மற்றும் பண்டிட்.கணபதி பட் ஹசங்கியாட் அவர்களுடன் இசைப் பயிற்சியைத் தொடர்ந்தார்.

மஞ்சுநாத் மற்றும் பிரஷாந்த் ஆகிய இவ்விரு கலைஞர்களும் ஹப்லியிலுள்ள பத்மவிபூஷன் டாக்டர்.கங்குபாய் ஹங்கல் குருக்களின் இன்ஸ்டிட்யூட்டில் இந்துஸ்தானி வாய்ப்பாட்டுக்கான 5 வருட படிப்பை மேற்கொண்டுள்ளனர். இன்று வரை பண்டிட்.கணபதி பாட் ஹசனகி அவர்களின் வழிகாட்டுதலில் தனது பயிற்சியை தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். தற்போது இவ்விருவரும் ஈஷா ஹோம் ஸ்கூலில் இந்துஸ்தானி இசை ஆசிரியராக தங்களது பங்களிப்பை வழங்கிவருகின்றனர்.

லிங்க பைரவி ஊர்வலம்...

நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. லிங்கபைரவியிலிருந்து துவங்கும் இந்த ஊர்வலத்தில், தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் அக்னி நடனமாடுவது உள்ளம்கவர் அம்சமாக இருக்கும். ஊர்வலம் முடிந்த பின்னர் ஒவ்வொருநாளும் பக்தர்களுக்கு ஈஷா மையம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கொலு...

நவராத்திரி விழாக்காலங்களில் பாரம்பரியமாக வைக்கப்படும் கொலு கண்காட்சியானது, சூரியகுண்டத்தின் மேற்புற பிரகாரத்தில் தேவியின் பலவித ரூபங்களை குறிப்பிடும்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் கண்கொள்ளா விருந்தாக காட்சியளிப்பாள்.

இந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இந்த ஒன்பதுநாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.

நாளை...

மூன்றாம் நாள் விழாவான நாளை திரு.பிரவீன் குமார் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நிகழவுள்ளது.