கடந்த ஆண்டு சத்குரு அவர்களுடன் கைலாய யாத்திரை சென்றிருந்த ஒருவர் அவரிடம் குரு, பக்தி, ஆன்மீகம் என தனக்கு தெளிவு கிடைக்காத சில விஷயங்களை அடுக்கடுக்காய் கேள்விகளாய் தொடுத்தார். அந்த உரையாடல் இங்கு உங்களுக்காக..

Question: சத்குரு, சில தருணங்களில் நான் பக்தி எனும் உணர்வினை உணர்கிறேன். பல சமயங்களில் என் சுயஉணர்வு மட்டுமே மேலோங்கி இருக்கிறது. நான் இப்படி இருக்கும் பட்சத்தில், என்னை நான் பக்தன் என்று சொல்லிக் கொள்ளலாமா?

சத்குரு:

இந்த உலகத்தில் பக்தி எனும் நிலையை உணராத ஒரு மனிதன் கூட இருக்க முடியாது. அன்பை உணரும் தருணங்கள், சந்தோஷத்தினை உணரும் தருணங்கள், ஆனந்தத்தினை உணரும் தருணங்கள், இப்படி ஒரு சமயத்திலோ அல்லது மற்றொரு சமயத்திலோ பக்தியை மக்கள் உணருகின்றனர். ஆனால், பக்தி என்பது உங்கள் அடிப்படை இயல்பு என்று நாம் சொல்லிவிட முடியாது. ஒரு கணநேர பக்தி உங்களை பக்திமானாக்கிவிடாது. பக்தி என்பது உங்களது அடிப்படை இயல்பாகும் பட்சத்தில் மட்டுமே, நீங்கள் பக்தனாக முடியும். ஒவ்வொரு மனிதனிடமும் பக்தியின் அம்சம் இருக்கிறது. அவர்களை ஆட்டுவிக்கும் சக்தியாக அதனை அவர்கள் உயர்த்தி இருக்கிறார்களா, பக்தி அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும் வெளிச்சமாக விளங்குகிறதா என்பதே கேள்வி.

Question: அப்படி நீங்கள் சொல்லும் பட்சத்தில், யாரோ ஒருவர் உங்கள் பக்தராக அல்லாமல், சிஷ்யராக இருக்க முடியுமா?

சத்குரு:

இதனை முன்னேற்றம் என்று சொல்லலாம். பெரும்பாலான மக்கள், ஆரம்பத்தில் எதையோ அறிய வேண்டும் என்கிற ஆர்வத்தில் வந்தாலும், புலன் விசாரணை செய்ய வந்தாலும், பின்னர், இங்கு கற்பதற்கு ஏதோ இருக்கிறது என்பதை அறிந்து மாணவர் போல் ஆகிவிடுகின்றனர். அவர்கள் கற்றது, ஏதோ ஒருவிதத்தில் அவர்களது வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தினாலும், இயல்பாகவே அவர்கள் சிஷ்யர்களாகி விடுகின்றனர். கற்பது, தன்னிலையில் வளர்ச்சி காண்பது போன்ற மற்ற விஷயங்கள் யாவும் அர்த்தமற்றதாய் ஆகிப் போனால், உங்கள் வாழ்வின் நோக்கம் ஒரே நோக்கத்தில் அமைந்தால், அப்போது நீங்கள் பக்தனாகிவிடுவீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: ஆனால் சத்குரு, நான் பக்தனாகாமல், கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளை மட்டும் செய்து ஆன்மீகப் பாதையில் நடையிட முடியாதா? குருவிடம் அனைத்தையும் சமர்ப்பிக்கத்தான் வேண்டுமா?

சத்குரு:

பக்தி என்பது யாரோ ஒரு மனிதரை நோக்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வாழும் நிலையே பக்தி. நீங்கள் இடைவிடாமல், இந்தப் பாதையில் இருந்தால், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் இடைவெளி விடாமல் இந்தப் பாதையில் இருந்தால், நீங்கள் பக்தர்தான். யாருக்கும், எதற்கும் நீங்கள் பக்தியுடையவராய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய குணம் “பக்தி” என்பதால் நீங்கள் பக்தனாக இருக்க முடியும்.

Question: யாருக்காவது நீங்கள் தீட்சை அளித்திருந்தால், அந்த நபர் பாதையில் மிகுந்த சிரத்தையுடன் இருந்து, உங்களிடம் பக்தியில்லாமல் இருந்தால், அவர் பக்தரா?

சத்குரு:

நீங்கள் குரு என்று சொல்வதும், ஆன்மீகப் பாதை என்று சொல்வதும் வெவ்வேறான விஷயங்கள் அல்ல. ஒன்று, மனிதர் சார்ந்த அடையாளம் கொண்டுள்ளது, மற்றொன்றுக்கு அந்த அடையாளம் இல்லை. ஆனால், இரண்டுமே ஒன்றுதான். இரண்டும் வெவ்வேறாய் இருந்தால், அது சிறந்ததல்ல.

Question: ஆனால் நீங்கள், மூன்று ஜென்மங்கள் குரு இல்லாமல் ஆன்மீகப் பாதையில் சென்றதாக நீங்களே கூறியிருக்கிறீர்களே?

சத்குரு:

இது ஆன்மீகப் பாதை, இது குரு என்று நான் வேறுபடுத்திப் பார்த்ததால் எனக்கு அந்த உச்சபட்ச சாத்தியம் கிட்டவில்லை. அப்படி பகுத்துப் பார்த்தால், யோகா செய்வதன் மூலம் உங்கள் நுரையீரலின் கொள்ளளவு அதிகரிக்கலாம், வேறு சில சித்திகள் கிடைக்கலாம், நீங்கள் சூப்பர்மேனாக மாறலாம். இவையெல்லாம் இருந்தும், மிக மிக முக்கியமான அந்த ஒரு விஷயம் மட்டும், நீங்கள் குரு, பாதை என்று பிரித்துப் பார்க்கும் பட்சத்தில் கிடைக்காது. என்னை வைத்துப் பார்க்கும்போது, நான் வளர்ந்த ஆன்மீகப் பாரம்பரியத்தில், சிவன் மூலம் மட்டுமே அந்த உச்சபட்ச சாத்தியம் வசப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. எந்த மனிதராலும் அதனை வழங்க முடியாது என்று சொல்லப்பட்டது. அதனால், இன்னொரு மனிதரை குருவாக ஏற்பதற்கான சாத்தியமே இல்லை. குரு வந்தபோது, அனுபவப்பூர்வமாக, உச்சபட்ச சாத்தியங்கள் எனக்கு நிகழ்ந்தன.

“இதுதான்” என்று எனக்கு நூறு சதவிகிதம் தெளிவாக தெரிந்தது. ஆனால், எங்கோ ஒரு மூலையில், சிவன் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுந்தது. அந்த கணத்தில், குரு, சிவ வடிவம் எடுத்தார். அது குழந்தைத்தனமான ஒரு ஆசைதான் என்றாலும் அதனை அவர் நிறைவேற்றி வைத்தார், சிவனாய் காட்சியளித்தார்.

Question: தேடலில் உள்ளவர்களுக்கு மனித வடிவிலுள்ள குரு அவசியமா? அக்கா மஹாதேவி, அல்லம்ம மஹாபிரபு போன்ற சைவ துறவிகள் குரு என்பவர் இல்லாமல், சிவன் மீது இருந்த பக்தியால் ஞானோதயம் அடையவில்லையா?

சத்குரு:

இவர்களுக்கு சிவன் பக்தனாக இருந்ததாய்த்தான் நான் பார்க்கிறேன். அவர்களுக்கு குரு இல்லை என்று நீங்கள் சொல்ல முடியாது, ஏனெனில், அவர்கள் சிவனை பரிபூரணமாய் தழுவிக் கொண்டனர். அவர்களுக்கு சிவன் என்பவன் எங்கோ இருக்கும் கடவுளாக அல்லாமல், தினசரி தங்களுடன் வாழும் உயிருள்ள அனுபவமாக இருந்தான்.

Question: ஆனால், உங்களுக்கும் சிவன் ஒரு வாழும் அனுபவமாகத்தானே இருந்தார்?

சத்குரு:

நிச்சயமாக. அப்படி இல்லாமல் போயிருந்தால், என்னால் அத்தனை தூரம் இந்தப் பாதையில் சென்றிருக்க முடியாது. என்னை குரு இந்தப் பாதையில் செல்ல, உந்தித் தள்ளவில்லை. நான் விளிம்பில் வெகு காலமாக உட்கார்ந்திருந்ததால், அவர் என்னை லேசாக தட்டிவிட்டார், அவ்வளவுதான்.

Question: அப்படியென்றால், ஒரு பக்தனாய், நான் பாதையை இருகப்பிடித்துக் கொண்டு, உடலுள்ள ஒரு குரு இல்லாமல் இருக்கலாம் அல்லவா?

சத்குரு:

குருவே பாதை, பாதையே குரு. இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. இவை இரண்டையும் பிரித்துப் பார்ப்பதே நாம் செய்யும் தவறு. இரண்டையும் பிரித்துப் பார்க்கும்போது, தேவையற்ற சிக்கல் ஏற்படுகிறது.