ஒவ்வொரு வாரமும் வெகு சுவாரசியமாக அமைந்த கைலாஷ் யாத்திரை அனுபவத்தின் இறுதிப் பதிவான இந்த வாரத்தில், கைலாஷின் மகத்துவங்கள் சத்குருவால் எடுத்துரைக்கப்படும் விதம் நெஞ்சை நெகிழ வைக்கிறது, அத்துடன் தன் நன்றியின் வெளிப்பாடாய் சத்குருவிற்கு ஒரு கவிதை...

கைலாஷ் யாத்ரா - பகுதி 12

டாக்டர்.ராதா மாதவி:

சத்சங்கம் மேலும் தொடர்ந்தது. ஒருவர் சத்குருவிடம், “விமான நிலையத்தில் நம் பிரயாணத்தை ஏற்பாடு செய்தவர்கள் எங்களுக்கு ருத்ராக்ஷம் தந்தார்கள். பலர் அதை அணிந்திருப்பதைப் பார்க்கிறேன். நானும் அணியலாமா?” என்று கேட்டதற்கு, “அது அவர்களின் விருந்தோம்பலைக் குறிக்கிறது. நீங்கள் அதை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பினால், வைத்துக் கொள்ளுங்கள். அதை நினைவுப் பொருளாகவும் வைத்துக் கொள்ளலாம், கைலாஷ் போய் வந்ததற்குச் சாட்சியாக. ஆனால் உங்கள் உடலில் அணியாதீர்கள்,” என்று பதிலளித்தார் சத்குரு.

கடந்த சில பிறவிகளின் நினைவுகள் இன்னமும் என்னிடம் உள்ளன. எனவே எளிதாக நான் ஆச்சரியத்தில் ஆழ்பவன் இல்லை. ஆனால் கடந்த 15 நாட்கள் வியக்கத்தக்க அனுபவங்கள்....

அப்போது வேறொரு அன்பர், “சத்குரு, கைலாஷில் எங்களுக்கு தீட்சை கொடுத்து அருள் புரிந்தீர்கள். அதை நாங்கள் எப்படி உயிரோட்டமாக வைத்துக் கொள்வது?” என்று கேட்டார்.

“தினம் தோறும் தொடர்ந்து ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்யுங்கள். உங்கள் உள்சூழ்நிலையை மாற்ற அதுதான் வழி. உங்கள் மனம் மற்றும் உணர்ச்சி நிலைகளில் ஏற்கும் தன்மையைக் கொண்டு வாருங்கள். நான் உங்களுக்குச் செய்தது கைலாஷிலிருந்து சிறிது டவுன்லோடு செய்ததுதான்.
குருவுக்கு நிகரான கைலாஷ் ! , Guruvukku nigarana kailash
மக்கள் அங்கிருந்த இயற்கைச் சூழலைப் பார்த்து ‘ஆஹா! என்ன அழகான இடம்!’ என்று வியந்ததெல்லாம் எனக்கு மிகவும் வலியைக் கொடுத்தது. என்னால் தாங்க முடியவில்லை. கைலாஷ் மிகவும் அழகான பனிச் சிகரம்தான். ஆனாலும் கைலாஷ் வேறொரு அற்புதத்தன்மையில் இருக்கிறது. அது முற்றிலும் தனி உலகம். எனவே நான் உங்களுக்கு கைலாஷை உணரவைக்க நினைத்தேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏற்கனவே நான் சொன்னது போல, கைலாஷ் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மிகப் பெரிய அறிவுப் பெட்டகம். ஷிவாவோ அல்லது புத்தத் துறவிகளோ அல்லது அகத்தியரோ அங்கு வாழ்கிறார்கள் என்று சொல்லப்பட்டால், அவர்கள் அங்கு உடலுடன் வாழ்கிறார்கள் என்று பொருளல்ல. அவர்களெல்லாம் தங்களுக்குத் தெரிந்ததை, தாங்கள் உணர்ந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியாதபோது அதை கைலாஷில் பொதித்து வைத்திருக்கிறார்கள்.

நில அமைப்பின்படி பார்த்தாலும்கூட, கைலாஷ் அதைச் சுற்றியுள்ள மலைகளிலிருந்து மிகவும் வேறுபட்டு இருக்கிறது. திடீரென ஒரு கருப்புக் குன்று முளைத்திருக்கிறது, சுற்றியுள்ள மலைகளைப் போல அது இல்லை!’’ என்றார் சத்குரு.

பிறகு மற்றொரு சாதகர், சத்குருவிடம், ‘‘அப்படியென்றால் கைலாஷ் செல்பவர்கள், அங்கு என்ன செய்யவேண்டும்? யாத்திரையின் முக்கியத்துவம் என்ன?’’ என்று கேட்டார். ‘‘25,000 வருடங்களாக கைலாஷுக்கு மக்கள் யாத்திரையாக வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை வலம் வருவதை நான் முக்கியமாகக் கருதவில்லை. அதில் முக்கியத்துவம் இல்லாமல் இல்லை. ஆனால் அதைவிட எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அதன் அருகில் இருப்பதைத்தான் விரும்புகிறேன்.
குருவுக்கு நிகரான கைலாஷ் !, Guruvukku nigarana kailash
நமது கைலாஷ் பயணத்தின்போது காலநிலை மிகவும் நன்றாக இருந்தது. நமக்கு முன்னர் சென்ற குழுவும் சரி, பின்னர் சென்ற குழுவும் சரி மிகுந்த சிரமங்களைச் சந்தித்திருக்கிறார்கள். கைலாஷுக்குச் செல்லும் பல குழுக்கள் பல முறை மேக மூட்டத்தின் காரணமாக கைலாஷைப் பார்க்க முடியாமலேயே திரும்புவதுண்டு. ஆனால், நாம் அங்கு இருந்த எல்லா நேரமும் நம்மால் நன்கு தரிசிக்க முடிந்தது.

ட்ரெக்கிங் (மலையேற்றம்) நோக்கம், நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதை அதிகப்படுத்திக் கொள்வது. ஆனால், யாத்திரை செய்வதின் முக்கிய நோக்கமே நீங்கள் யார் என்னும் உணர்வைக் குறைப்பதுதான். புனித யாத்திரையின்போது நடப்பது, மலை ஏறுவது, இயற்கையின் சீற்றங்களுக்கு ஆளாவது போன்ற செயல்முறைகளில் நீங்கள் யார் என்பதைக் கரைத்துக்கொள்வதுதான் நோக்கமே.

எனவே பண்டைய காலங்களில் யாத்திரைக்கான இடங்கள் எப்போதும் ஒருவர் உடல், மனம் மற்றும் பல விஷயங்களில் சிரமங்களை மேற்கொள்வதாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது யாத்திரை என்பது அவ்வளவு சிரமங்கள் தருவதாக இல்லை.

ஆனாலும் நாம் இப்போது அனுபவித்துவரும் வசதிகள் காரணமாக இந்த அளவு சிரமங்கள் மேற்கொள்வதுகூட பலருக்கு கடினமாக இருக்கிறது. எனவே யாத்திரையின் நோக்கம் முற்காலத்துச் சமூகங்களைவிடவும் இப்போதைய சமூகத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது இந்த யாத்திரை பலருக்கும் சவாலான ஒன்றுதான்!” என்று புன்னகைத்தார் சத்குரு.

இறுதியில் பேசிய சத்குரு, “என்னைப் பொறுத்தவரை, யாத்திரைக்கான அவசியம் எனக்கு இல்லை. ஆனாலும் வியக்கத்தக்க பல அனுபவங்கள் கிடைக்கப்பெற்றேன். கடந்த சில பிறவிகளின் நினைவுகள் இன்னமும் என்னிடம் உள்ளன. எனவே எளிதாக நான் ஆச்சரியத்தில் ஆழ்பவன் இல்லை. ஆனால் கடந்த 15 நாட்கள் வியக்கத்தக்க அனுபவங்கள்.... உண்மையில் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. நான் பல புனிதத் தலங்களுக்குச் சென்றிருக்கிறேன். மிகவும் சக்தியான இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்.

நான் அவர்களை உண்மையாகவே வணங்கியிருக்கிறேன். ஆனால் நான் என் குருவை வணங்கியதைவிட சிறிது குறைவாகத்தான் அவர்களை வணங்கியிருக்கிறேன். ஆனால் கைலாஷுக்குத் தலைவணங்கியபோது மட்டும் என் குருவை நான் எப்படி வணங்குவேனோ, அதே போல வணங்கினேன். என் வாழ்க்கையில் இதற்கு முன் நான் இப்படிச் செய்ததே இல்லை,” என்று சொல்லி சத்சங்கத்தை நிறைவு செய்தபோது அங்கு ஒரு பெரிய அமைதி சூழ்ந்திருந்தது. சில நிமிடங்களுக்கு யாராலும் பேச முடியவில்லை.
குருவுக்கு நிகரான கைலாஷ் !-3
அனைவரும் விடைபெற வேண்டிய நேரம் வந்தது. எல்லோர் கண்களிலும் கண்ணீர். யாருக்கும் விடைபெற மனமே இல்லை. மானசரோவரிலும் கைலாஷிலும் சத்குருவுடன் கழித்த தருணங்கள் மீண்டும் மீண்டும் நினைவில் மோதின. இந்த வாய்ப்புக்காக யார் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டுமோ, அவர்களுக்கெல்லாம் நன்றி சொன்னோம்... குறிப்பாக சத்குருவுக்கு.

சத்குருவின் உந்துதல் இல்லையென்றால் எங்களில் பலர், கைலாஷ் பற்றி நினைத்திருக்கவே மாட்டோம். இந்தப் பயணத்தின்போது தங்கள் நலனைத் துச்சமாக மதித்து எங்களை மிகவும் நன்றாக கவனித்துக்கொண்ட பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கு நன்றி கூறினோம். சத்குரு எங்கள் அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து ஆரத் தழுவி ஆசியளித்தார். அந்தக் கடைசி நிமிடங்களில், சத்குருவின் கடைசி சத்சங்கத்தின்போது ஒருவர் ஆங்கிலத்தில் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்ட கவிதைதான் எங்கள் நினைவில் திரும்பத் திரும்ப வந்தது. அதன் தமிழாக்கம்...

அருள் என்றால் என்ன,
உன் இளநகையா
உன் கண்களின் கருணையா
உன் தழுவலின் இதமா
நீ வெளிப்படுத்தும் அன்பா
என் இருப்பின் முழுமையா
என்னை மகிழ்விப்பதெல்லாம்
உன் அருள் மட்டுமே
எல்லையற்ற அருளே
உன் குருவை நீ தேடாதே
அவரே உன்னை நாடுவார்
என்று சொன்னாய் ஒரு நாள்
குருவே என்னை நீ கண்டாய்,
உன் அருளில் தோய்த்தெடுத்தாய்
எப்படி நன்றி சொல்ல உனக்கு
எப்படி நன்றி சொல்ல உனக்கு!

(பயணம் முடிந்தது)

அடுத்த வாரம், கைலாஷ் மற்றும் மானசரோவர் பற்றிய சத்குருவின் சிறப்பு உரை இடம்பெறும்.

கைலாஷ் - மானசரோவர் யாத்திரை தொடருக்காக பயணக் குறிப்புகள் தந்து உதவிய திருவண்ணாமலையைச் சேர்ந்த டாக்டர் ராதா மாதவி அவர்களுக்கு நன்றி!

கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்கான தொடர்பு எண்கள்:

தமிழ்நாடு - 9488111333
பிற மாநிலங்கள் - 9488111555

இ - மெயில்:

தமிழ்நாடு - tn@sacredwalks.org
பிற மாநிலங்கள் - india@sacredwalks.org