Question: என்னால் என் குருவுக்கு என்ன செய்ய முடியும், எப்படி உதவ முடியும் என்று யோசித்தேன். என் சக்திநிலை ஒன்றுமில்லாததாக இருக்கலாம், நானே வெறுமையாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. உங்களுக்கு எப்படி உதவுவது?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒன்றை எல்லோரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குருவுக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், உங்களிடமிருக்கும் அத்தனை குப்பைகளையும் களைந்துவிட்டு, முன்னேறும் வழியைப் பாருங்கள். ஒரு தோட்டம் அதன் தோட்டக்காரனுக்கு என்ன பதிலுதவி செய்ய முடியும்? வளர்ந்து, மலர்களைக் கொடுப்பதுதான், இல்லையா? இல்லை... இல்லை... உங்களுக்கு இதைச் செய்யவேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அது உங்கள் லட்சியம் அல்ல. அடுத்தவருக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டால், அது அந்த அடுத்தவர் விரும்புவதாக இருக்க வேண்டும் இல்லையா? உங்களுக்குப் பிடித்ததை செய்யக்கூடாது (சிரிக்கிறார்). இதுதான் எப்போதும் பிரச்சனையாக இருக்கிறது. அடுத்தவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால், அவருக்குப் பிடித்ததைத்தான் செய்யவேண்டும்.

உங்கள் குருவுக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், உங்களிடமிருக்கும் அத்தனை குப்பைகளையும் களைந்துவிட்டு, முன்னேறும் வழியைப் பாருங்கள்.

என்னை முன்னமே அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். நான் மிகவும் அமைதியானவன். நான் எதுவுமே பேசியதில்லை. அந்த நாட்களில் நான் மௌனத்திலோ அல்லது ஆன்மீகத்திலோ இருந்ததில்லை. ஆனாலும் நான் அப்படித்தான் இருந்தேன். ஏனென்றால், பெரும்பாலான நேரங்களில் எங்கு சென்றாலும், பள்ளிக்குச் சென்றாலும், கல்லூரிக்குச் சென்றாலும், எங்கு சென்றாலும், மாணவர்களும், ஆசிரியர்களும் எது பேசினாலும் அது அர்த்தமில்லாததாகத்தான் இருந்தது. அவர்கள் வாயைத் திறந்தால், அவர்களுடைய மோசமான மூச்சுக்காற்றால் உங்களை கொல்லாவிட்டாலும், அவர்களுடைய அர்த்தமற்ற பேச்சால் உங்களை கொன்றுவிடுவார்கள்.

தங்கள் மனதிலிருப்பதை வெளிப்படையாக, மகிழ்ச்சியோடு, ஆனந்தமாக வெளிப்படுத்துவதற்கு உலகத்திலேயே மிகச் சிலரால்தான் முடியும். மற்றவர்களெல்லாம் தங்களை அறிவுஜீவியாகக் காட்டிக்கொள்ள, தாங்கள் எங்கோ கேட்டதை, எங்கோ படித்ததை தொடர்ந்து உளறிக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் நான் யாரிடமும் பேசவேயில்லை. மிக அரிதாகத்தான் பேசுவேன். சில இடங்களில் நான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும், பெரும்பாலான இடங்களில் நான் மௌனம்தான் (சைகை காட்டுகிறார்). ஏனென்றால், நான் பேசவில்லையென்றால், அவர்களும் பேச மாட்டார்கள். அதுதான் என்னைக் காப்பாற்றியது (அனைவரும் சிரிக்கின்றனர்).

இப்போதுதான் எப்பொழுதும் பேச்சும், செயலுமாகக் கழிகிறது. முன்பெல்லாம் வாய்ப்பு கிடைத்தால் நான் மலைகளுக்குச் சென்று விடுவேன் அல்லது எனது இருசக்கர வாகனத்தில் பயணிப்பேன். அதற்கு முன்னர் மிதிவண்டிதான். ஒவ்வொரு நாள் மதியமும், கல்லூரி முடிந்த பின்னர் என் மிதிவண்டியில் 25ல் இருந்து 40 கிலோமீட்டர்கள் கிராமத்து சாலைகளில் தனியாகச் செல்வேன். நம் மக்களுடைய முட்டாள்தனங்களை, அரட்டைகளை தவிர்ப்பதற்காகச் செல்வேன்.

இப்பொழுதெல்லாம் நான் எப்போதும் பேசிக் கொண்டோ, ஏதாவது செய்து கொண்டோ இருக்கிறேன். என்னை சுற்றி எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கிறது. மனிதர்கள் இல்லை. மக்கள் கூட்டம், கூட்டமாக இருக்கிறார்கள். நானும் ஒரு ஒலிவாங்கிக்குப் பின்னாலோ, அல்லது ஒரு மக்கள் கூட்டத்துடனோ, குறைந்தபட்சம் 10 பேர்களுடன்தான் இருக்கிறேன் (சிரிக்கிறார்). இதை நான் தேர்ந்தெடுக்கவில்லை. இது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. நீங்கள் மக்களுக்குப் புரிகிற வகையில் பேசவில்லையென்றால், அவர்களுக்கு ஏற்ற விதத்தில் பழகவில்லையென்றால், அவர்களோடு இரண்டு அடி நடக்கவில்லையென்றால், அவர்களை நீங்கள் வேறு ஒரு பரிமாணத்திற்கு அழைத்துச் செல்லவே முடியாது.

‘நான் எப்படி இருக்க வேண்டும்?’ நாளை சத்குரு மரணமடையப் போகிறார் என்றால், இன்றிரவே நீங்கள் மலர்ந்து விட வேண்டும், இல்லையா? இதை இப்படிப் பாருங்கள் நீங்களோ, நானோ நாளை மரணமடைவதாக இருந்தால், இன்றே நீங்கள் மலர வேண்டும், அப்படித்தானே? வாழ்க்கையை வாரங்களாக, மாதங்களாக, வருடங்களாக, ஜென்மங்களாக எண்ணிப் பார்க்காதீர்கள். நொடிகளாகப் பாருங்கள். ஏனென்றால், வாழ்க்கை நொடிகளால் ஆனது.

அதற்கு நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இதற்கு ஒரே வழி நீங்கள் வளர்ந்து, மலர்வதுதான். உங்கள் குப்பைகளை உதறிவிடுங்கள். பழைய குப்பைகளை என்னிடம் விட்டுவிடுங்கள். இப்போதைய குப்பைகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் செய்ய முடியும்.