கர்நாடகத்தின் புரட்சியாளர் ! பகுதி 5

ஆயுர்வேதக் கலையைக் கற்க சென்ற இடத்தில் இன்னொருவரை குருவாக ஏற்கும் சூழ்நிலை வந்தபோது ராகவேந்திரா என்ன செய்தார்? ஒருபக்கம் மாலை அணிவிக்கும் மக்கள் கூட்டம், மறுபுறம் கைது செய்யும் காவல்துறை என ராகவேந்திர ராவின் வாழ்க்கைப் பயணம் விறுவிறுக்கிறது இந்த வாரம். தொடர்ந்து படியுங்கள்!

ஸ்வாமி சிவானந்தா ராகவேந்திரருக்காகப் பல திட்டங்களை ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்தார். அந்தக் காலத்தில் இந்தியா, பிரிட்டிஷாரின் கைகளில் அடிமைப்பட்டுக் கிடந்தது. சிவானந்தர் தேசபக்தி மிக்கவராகவும் இருந்தார். எனவே உடலிலும் மனதிலும் வலுவற்றிருந்த இளைஞர்களை உத்வேகப்படுத்த யோகாவை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு அத்துடன் உடற்கலை மற்றும் தற்காப்புப் பயிற்சி ஆகியவற்றையும் அளித்தார். இதையே ராகவேந்திரர் மூலமும் செயல்படுத்த விரும்பியவர், சரியான மருத்துவ வசதி இல்லாமல் ஏழைகள் மிகவும் கஷ்டப்பட்டதைக் கண்டு ராகவேந்திரருக்கு மருத்துவத்திலும் பயிற்சி அளிக்க எண்ணினார்.

“நான் உன்னை கூட்டி வந்ததாகத் தெரிந்தால் என்னையே பயிற்சி அளிக்கும்படி பாபா சொன்னாலும் சொல்வார், எனவே நீயாகவே அவரிடம் சென்று முயற்சி செய்”

ஆயுர்வேதத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய பாபா லட்சுமணதாஸ் என்பவரிடம் சேர்த்து விடுவதற்காக ராகவேந்திரரை லாகூருக்கு அழைத்துச் சென்றார். ஆனால் பாபாவின் ஆசிரம கேட் வரை வந்துவிட்டு, “நான் உன்னை கூட்டி வந்ததாகத் தெரிந்தால் என்னையே பயிற்சி அளிக்கும்படி பாபா சொன்னாலும் சொல்வார், எனவே நீயாகவே அவரிடம் சென்று முயற்சி செய்” என்று ஆசி வழங்கி திரும்பிச் சென்றுவிட்டார்.

எவ்வித அறிவிப்பும் இல்லாமல் வந்த ராகவேந்திரரை, பாபா நிறையக் கேள்விகள் கேட்டார். ஆனால், சிவானந்தர் மற்றும் மானிக்ய ராவ் ஆகியோரின் சீடராக ராகவேந்திரர் பலவற்றை கற்றுத்தேர்ந்ததை அறிந்தவுடன் மகிழ்ச்சியாக வரவேற்றார். அடுத்த நாளிலிருந்தே ஆயுர்வேதம் கற்றுத்தர ஆரம்பித்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

லாகூரில் பாபா லட்சுமண்தாஸ் அவர்களிடம் ராகவேந்திரர் சுமார் 4 ஆண்டுகள் ஆயுர்வேதம் கற்றார். ஆயுர்வேதம் சமஸ்கிருதத்தில்தான் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்காகவே சமஸ்கிருதமும் கற்றார். அவரிடமே சித்த மருத்துவமும் கற்றார்.

அந்தக்காலத்தில் ஆயுர்வேதம் அல்லது சித்தா எதுவாக இருந்தாலும் அந்தந்த மருத்துவர்களேதான் எல்லா மருந்துகளையும் தயார் செய்துகொள்ள வேண்டும். எனவே பாபாவின் ஆசிரமத்தில் எல்லா மருந்துகளும் அங்கேயே தயாரிக்கப்பட்டு வந்தன. அந்த மருந்துகள் தயாரிப்பிலும் பாபா நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். பாபாவே மெச்சும்படி ராகவேந்திரர் மருந்து தயாரிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றார்.

பயிற்சி முடிவதற்கு முன்னர் லாகூரில் ஜெர்மானியர்கள் நடத்தும் ஒரு மருத்துவமனைக்கு ராகவேந்திரரை பாபா அனுப்பி வைத்தார். அந்த மருத்துவமனையில் அனைவரும் ஜெர்மானியர்கள்தான். பணியாள் வேலைகளுக்கு மட்டுமே இந்தியர்கள் இருந்தனர். பாபாவிடம் இருந்து வந்திருக்கிறார் என்றவுடன் மருத்துவமனை முழுவதும் சுற்றிப்பார்க்க அவருக்கு அனுமதி கிடைத்தது. அங்கு ஜெர்மானியர்கள் குஷ்ட நோய் கண்டவர்களுக்கும் மிகவும் அன்பாக மருத்துவம் பார்த்ததைக் கண்டு மிகவும் மனம் நெகிழ்ந்தார். மருத்துவமனையில் இருந்து திரும்பியவுடன், பாபா கேட்டார், “அங்கு என்ன பார்த்தாய்”? அதற்கு ராகவேந்திரர் கூறினார், “அங்கு ஒவ்வொரு மருத்துவரும் தாதியரும் அந்த நோயாளிகளிடம் கடவுளையே பார்த்தார்கள்”. உடனே பாபா சொன்னார், “அற்புதம், மிகவும் நன்றாகச் சொன்னாய், இதற்குத்தான் உன்னை நான் அங்கு அனுப்பினேன், ஒவ்வொரு நோயாளியிடமும் நீயும் இறைவனைக் காண வேண்டும்’’ என்றார்.

“அற்புதம், மிகவும் நன்றாகச் சொன்னாய், இதற்குத்தான் உன்னை நான் அங்கு அனுப்பினேன், ஒவ்வொரு நோயாளியிடமும் நீயும் இறைவனைக் காண வேண்டும்’’

பயிற்சி முடியும் தருணத்தில், ஒருநாள், பாபா லட்சுமண்தாஸ், ராகவேந்திரரைக் கூப்பிட்டு, ஆயுர்வேதத்தில் மேலும் சில நுணுக்கமான, ரகசியமான கலைகள் இருப்பதாகவும், ஆனால் தன்னை மட்டுமே குருவாக ஏற்றுக்கொண்டால்தான் அவற்றை கற்றுத்தர முடியும் என்றும் கூறினார். ஆனால் தன் வாழ்க்கைக்கு எவ்வளவோ செய்துள்ள தமிழ்நாட்டு யோகி, மானிக் ராவ், மற்றும் அனைவர்க்கும் மேலாக சிவானந்தர் இவர்களை மறந்துவிட்டு பாபாவை மட்டும் குருவாக ஏற்க ராகவேந்திரர் தயாராக இல்லை.

எனவே பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டு பரோடாவில் தங்கியிருந்த தன் குருவிடம் திரும்பினார். நடந்தது அனைத்தையும் கேட்ட சிவானந்தர், “அவர் அனைத்தையும் கற்றுத்தருகிறேன் என்று சொல்லும்போது நீ அவருடைய நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே” எனக் கடிந்துகொண்டார். “உங்களை என் குருவாக நினைக்காமல் ஒரு வினாடிகூட என்னால் இருக்க முடியாது” என்ற ராகவேந்திரரின் பதிலைக் கேட்டு சிவானந்தர் அமைதியாகிவிட்டார்.

சிவானந்தர் எப்போதும் நாடோடி போல ஊர் ஊராகச் சென்று யோகப் பயிற்சிகளை செய்து காட்டுவார். மக்கள் விரும்பினால், அங்கு தங்கி அவர்களுக்குப் பயிற்சி அளித்துவிட்டு அடுத்த ஊருக்குப் போவார். அவர் யோகா மற்றும் வாழ்க்கை குறித்து சில நூல்கள் எழுதியுள்ளார். அதில் ஒரு நூலான ‘பிரம்மச்சரியம்‘ என்ற நூலை ராகவேந்திரர் கன்னடத்தில் மொழிபெயர்த்திருந்தார். கன்னட நூலைப் படித்த சிலர், சிவானந்தரை கர்நாடகாவிற்கு வரச்சொல்லி கடிதம் எழுதினார்கள்.

அதற்கு சிவானந்தர், ‘தன்னால் வர இயலாமல் இருப்பதாகவும் அதனால் யோகா, ஆயுர்வேதம் மற்றும் தற்காப்புக் கலைகள் ஆகியவற்றில் தேர்ந்த ராகவேந்திர ராவ் ஙி.றி.சி என்பவரை அனுப்புவதாகப் பதில் எழுதிவிட்டு கர்நாடகா செல்லத் தயாராகும்படி ராகவேந்திரருக்குக் கூறிவிட்டார்.

குறிப்பிட்ட தேதியில் ராகவேந்திரர் ஹுப்ளி சென்று அங்கிருந்து பட்கலா என்னும் ஊருக்குச் சென்றார். அங்கிருந்த மக்கள் அந்த ஊரையே விழாக்கோலமாக்கி இருந்தனர். பேருந்தில் இருந்து இறங்கியவுடன், பெரிய மக்கள் கூட்டம், ஸ்வாமி சிவானந்தா கீ ஜெய், ஸ்ரீராகவேந்திரா B.P.C ஜெய் என்று உரத்த கோஷங்கள் எழுப்பி, அவருக்கு மாலைகள் இட்டு, அவருடைய பாதங்கள் பணிந்தனர்.

திடீரென்று ஒரு காவல் அதிகாரி, ‘‘நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள்’’ என்று கூறி ராகவேந்திரரின் கையில் விலங்கிட்டார். கழுத்தெல்லாம் மாலை, கைகளில் விலங்கு. ராகவேந்திரர் திகைத்தார்!

அடுத்த வாரம்...

ராகவேந்திராவை காவல்துறை ஏன் கைது செய்தது? B.P.C என்றால் என்ன? இதுபோன்ற புதிர்களுக்கு விடையாய் வருவதோடு ராகவேந்திர ராவின் புரட்சிகர வாழ்க்கையை இன்னும் அற்புத நிகழ்வுகளோடு விவரிக்கிறது அடுத்த வாரப் பகுதி.

கர்நாடகத்தின் புரட்சியாளர்! தொடரின் பிற பதிவுகள்