Question: சத்குரு, குரு அவசியமா? யாரையெல்லாம் குருவாக ஏற்றுக் கொள்ளலாம்?

சத்குரு:

“சத்குரு” என்று என்னை அழைத்து இவ்விதம் கேள்வி கேட்டால் நான் என்ன செய்வது? (சிரிக்கிறார்). முதலில் குரு என்றால் என்ன என்பதைக் காண்போம். அது குறித்து உங்களுக்கு பல முடிவுகள் இருக்கலாம். நான் இப்போதுதான் கைலாஷ் சென்று வந்தேன். அங்கே திபெத்தில் சாலைகளற்ற மலையில் வாகனம் ஓட்டினேன். மலையில் தென்படும் பாதையின் தடத்தில் அனுமானித்துப் போக வேண்டியிருந்தது. என்னுடன் ஒரு வழிகாட்டியையும் அழைத்துக் கொண்டேன்.

“நானே சத்குரு. இவர் என்ன எனக்கு வழிகாட்டி”, என்று நான் போனால், இரண்டு மாதமானாலும் மலையையே சுற்றிச் சுற்றி வர வேண்டியிருக்கும்.

“நானே சத்குரு. இவர் என்ன எனக்கு வழிகாட்டி”, என்று நான் போனால், இரண்டு மாதமானாலும் மலையையே சுற்றிச் சுற்றி வர வேண்டியிருக்கும். அந்த வழிகாட்டிக்குக் கல்வியறிவும் இல்லை. ஆங்கிலமும் பேசத் தெரியவில்லை. அவர் மொழி எனக்குப் புரியவில்லை. நம் மொழி அவருக்குப் புரியவில்லை. நான் எப்போதும் போல் வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றேன். அதனால் அவர் இதயம் வாய்க்குள் வந்து விடுமோ என்ற அச்சத்துடன், இருக்கையில் ஒடுங்கி அமர்ந்து கொண்டு, ஒரே ‘ம்‘ சப்தத்தை மட்டுமே வெளிப்படுத்தி வழி காட்டுவார். அவர் அப்படி கை காட்டினால் அப்படியும், இப்படி என்றால் இப்படியும், அவர் சொல்லச் சொல்ல வண்டி ஓட்டினேன். “ஏய்! நான்தான் சத்குரு. நான் இப்படிப் போய்க் கொள்கிறேன்”, என்றால் முட்டாள்தானே ஆகிவிடுவோம்? ஏனென்றால் அவர் படிப்பறிவு இல்லாமல் இருந்தாலும், அந்த நிலப்பரப்பின் அத்தனை தடங்களையும் வரைபடமாக மனத்தில் வைத்திருக்கிறார். அவர் வழிகாட்டுதலுடன் நாம் சென்றால், எங்கும் வழி தவறித் தொலைந்து போகாமல் நேரே கைலாஷ் சென்று இரண்டே நாளில் திரும்பி விட முடியும். அதற்குக் காரணம் அவர் வழிகாட்டி. அவர் இல்லையென்றால், அங்கு நாம் தொலைந்து போனால் அந்த மலைகளில் மூன்று மாதம் சுற்றினாலும் வெளியே வர முடியாது.

குரு என்றால் இவ்வளவுதான். நான் வெறுமனே அப்படி, இப்படி என்றால் நீங்கள் அப்படி, இப்படிப் போக வேண்டும். ‘நீங்கள் என்ன சொல்வது? நான் இப்படித்தான் போவேன்’ என்றால், உங்கள் விருப்பம்போல் செல்லுங்கள். வழி தெரியாமல் சுற்றினால் நோக்கமின்றி எங்கேயோ சுற்றிக் கொண்டு இருப்பீர்கள். எந்த ஒன்றை இப்போதே செய்ய முடியுமோ, ஒரு ஜென்மத்தில் செய்ய முடியுமோ, அதனை நூறு ஜென்மத்தில் செய்யப் போகிறீர்கள். அவ்வளவுதான். குரு வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இந்த ஜென்மத்திலேயே நீங்கள் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.