Question: சத்குரு, முதன்முதலில் உங்களை நான் சந்தித்தபோது மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன். மேலும் தியானலிங்கத்தின் முன்னிலையிலும் அதையே உணர்ந்தேன். ஆனாலும் மறுபடி மறுபடி உங்களை நோக்கி எதுவோ என்னை இழுத்து, உங்களை மிகவும் நெருக்கமாக உணர்கிறேன். நான் உங்களுடைய பக்தனாக மாறிக் கொண்டிருக்கிறேனா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

உங்களுடைய குருவின் முன்னிலையில் நீங்கள் அச்சுறுத்தலை உணரவில்லையென்றால், அவர் உங்களுடைய குரு அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் குரு உங்களை ஆறுதல்படுத்துபவர் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். குரு உங்களின் குறுகிய எல்லைக்குள்ளிருக்கின்ற நான் என்னும் தன்மையை அழிப்பவராக இருக்கிறார். ஆகவே, இந்த எல்லைக்குட்பட்ட ‘நான்’ என்பதைத் தாண்டி ஏதோ ஒன்று உங்களுக்கு நிகழும். குரு உங்களுடைய எல்லைகளைப் பாதுகாப்பவர் என்றால் அவர் உங்களுடைய எதிரிதானே தவிர, உங்களுக்கு குருவாக இருக்க முடியாது. உங்களுடைய எல்லைகளை பலப்படுத்தும் எவரும் உங்களுக்கு எதிரிதான், நண்பர் அல்ல, அப்படித்தானே?

பக்தி என்றால், நீங்கள் கரைந்து போக வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொள்வது. அத்தகைய நோக்கம் எழுந்துவிட்டால், பிறகு அங்கே பின்னடைவு என்பதே இல்லை.

உங்களுடைய எல்லைகளைப் பாதுகாக்கக் கூடிய நண்பர்களையே நீங்கள் எப்போதும் தேடுவீர்கள். உங்களுடைய எல்லைகளை அவர்கள் உடைத்தெறிய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது கிடையாது. ஆகவே, என்னோடு நீங்கள் அமர்ந்திருக்கும்போது நீங்கள் அசௌகரியமாக உணர வில்லையென்றால் பிறகு நான் உங்களுக்கு வேறு எதையாவது செய்வேன். நீங்கள் அசௌகரியமாக உணர்வது நல்லது. உங்களைத் துன்புறுத்தி இன்பம் காணுவது என்பதல்ல இது. என்னை அச்சுறுத்தலாக நீங்கள் உணரவில்லையென்றால், நீங்கள் என்னை உபயோகித்துக் கொள்ள மாட்டீர்கள். நான் அச்சுறுத்தலாக இருப்பதை உணர்ந்தாலும் என்பால் ஈர்க்கப்படுகிறீர்கள் என்பதே நிகழ்கிறது. நீங்கள் என்னை மிகவும் விரும்புவது நல்லதல்ல. என்னை விரும்பவில்லை; ஆனால், நானில்லாமல் உங்களால் வாழ முடியாது என்பது நல்லது.

ஆகவே நான் உங்களுடைய பக்தனா என்றால்... (சிரிக்கிறார்) ஒரு பக்தன் என்றால், கரைந்து போக விரும்புபவர் என்பது பொருள். பக்தி என்றால், நீங்கள் கரைந்து போக வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொள்வது. அத்தகைய நோக்கம் எழுந்துவிட்டால், பிறகு அங்கே பின்னடைவு என்பதே இல்லை. இப்போது நீங்கள் அதை இவ்விதம் நோக்கவில்லை. நீங்கள் நல்வாழ்க்கையை மட்டுமே தேடுகிறீர்கள். அதுவும் எனக்கு சம்மதமே. ஏனென்றால் நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கிருந்துதான் வளர்ச்சி பெற முடியும். எங்கோயிருந்து கொண்டு, வளர்ச்சி காண முடியாது. ஆனால் அதிக காலம் எடுக்காதீர்கள். ஏனென்றால் வாழ்க்கை என்பது மிகவும் சிறிய ஒரு நிகழ்வு. அது நிகழ்வு என்பதை நீங்கள் அறிவதற்குள், அது முடிந்துவிடும். நீங்கள் ஆன்மீகப் பாதையில் நடைபோடுவதற்கு எப்போதும் நாளை, நாளை என்று நினைத்துக் கொள்கிறீர்கள். அது ஒரு குற்றம். ஏனென்றால் நாளை என்பதையே காண முடியாமல் நீங்கள் போய் விடலாம்.

ஒருநாள் உங்களுக்கும், நாளை வராமல் போகலாம். இல்லையா? ஆகவே, அந்த நாளுக்காகக் காத்திருக்காமல் மிகவும் தாமதமாகி விடுவதற்கு முன்னதாகவே இப்போதே ஆன்மீக செயல்முறையில் ஈடுபடுவது மேலானது.

கர்நாடகாவின் கிராமப்புறங்களில் ஒரு நம்பிக்கை உலவி வருகிறது. அதாவது, அவர்களுடைய வீடுகளில் கதவுகளில் சிவப்பு வர்ணத்தில் ‘நாளை வா’ என்று எழுதப்பட்டிருக்கும். தீய சக்திகள் மற்றும் கெட்ட ஆவிகள் வந்தால், அவைகள் சிவப்பு வர்ணத்திலுள்ளவற்றை மட்டும் படிக்க முடியும் என்று நினைத்து இப்படி எழுதுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆகவே அவை தங்கள் வீட்டிற்கு வர நேர்ந்தாலும் இதைப்படித்துவிட்டு, வீட்டினுள் நுழைந்து தொந்தரவு தராமல் திரும்பிப் போய்விடும் என்று நம்புகின்றனர். இந்த வீடு நாளைக்கு வர வேண்டியது என்று கூறும் ஒரு எளிய தந்திரத்தினால், தீய சக்திகள் என்றைக்குமே உங்கள் வீட்டிற்குள் நுழையாதவாறு செய்கின்றனர்.

ஆனால் ‘நாளை வா’ தந்திரத்தை நீங்கள் உங்களுடைய நல்வாழ்வுக்கு செய்யக்கூடாது. நாளை என்பது நிகழாமல் போகலாம். ஒருநாள் உங்களுக்கும், நாளை வராமல் போகலாம். இல்லையா? ஆகவே, அந்த நாளுக்காகக் காத்திருக்காமல் மிகவும் தாமதமாகி விடுவதற்கு முன்னதாகவே இப்போதே ஆன்மீக செயல்முறையில் ஈடுபடுவது மேலானது. ஆகவே, உங்களுக்குள் பக்தி எழுந்தால் இப்போதே நிகழட்டும். ஏன் நாளை என்ற கேள்வி எழுகின்றது? நான் உங்களுடைய பக்தனாகிக் கொண்டிருக்கிறேனா என்று ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? ஏன் என்னுடைய அனுமதி உங்களுக்கு தேவைப்படுகிறது? உங்கள் மீது அன்பு கொள்வதற்கு நான் உங்களுடைய அனுமதியைக் கேட்டேனா? ஏன் என்னிடம் மட்டும் அனுமதி கேட்கிறீர்கள்? நான் உங்களுடைய அனுமதியைக் கேட்கவில்லையே. நேசிப்பதற்கு நான் எவருடைய அனுமதியையும் கேட்பதில்லை, பிறகு ஏன் என்னுடைய அனுமதிக்காகக் காத்திருக்கிறீர்கள்? அப்படி காத்திருக்கிறீர்கள் என்றால், என் சம்மதத்தை இப்போதே பெற்றுக் கொள்ளுங்கள்.