Question: சத்குரு, நம்பிக்கைக்கு உரியவராக இருப்பதற்கும், வெகுளித்தனமாக இருப்பதற்கும், இடையில் ஒரு மெல்லியகோடு மட்டுமே இருப்பதாக நான் உணர்கிறேன், இதை எப்படி கையாள்வது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

நீங்கள் எந்த வகை? (சிரிப்பு) சில நாட்களுக்கு முன்பாக நான் ஹைதராபாத்தில் இருந்தேன். ஒரு கூட்டத்தில் நான் பேசியபிறகு, அடுத்த நாளைய உள்ளூர் நாளேட்டில் தலைப்புச் செய்தியாக, 'சத்குரு கடவுளை மறுக்கிறார்' என்று வெளியிட்டார்கள். சத்குரு கடவுளை அல்லது அதுபோன்ற ஒன்றை மறுக்கிறார் என்று தலைப்பிட்டு, நான் எப்படியெல்லாம் கடவுளை மறுக்கிறேன் என்று விவரித்திருந்தனர். இந்த மாதிரியெல்லாம் ஏன் நிகழ்கின்றது என்றால், நான் உங்களுடைய வெகுளித்தனத்தை உபயோகிப்பதற்குப் பதில் எப்போதும் ஒவ்வொரு விஷயம் குறித்தும் உங்களை சந்தேகம் கொள்ள வைக்க முயன்று வருகிறேன். ஏனென்றால், எந்த வகையிலாவது, ஒவ்வொரு விஷயம் குறித்தும் உங்களுக்குச் சந்தேகம் என்பது இருந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உண்மையில், எவரையுமே உங்கள் வாழ்க்கையில் நம்புவது கிடையாது என்பதை தயவுசெய்து கவனியுங்கள். நீங்கள் 10-20 வருடங்களாக யாருடன் வாழ்ந்து வருகிறீர்களோ அவர்களைக்கூட நம்புவதில்லை. உங்களால் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டால், உடனே அவர்களைப் பற்றி எல்லாவிதமான சந்தேகங்களும் உங்கள் மனதில் எழுந்துவிடும், இல்லையா?

உலகில், உண்மையில் வெகுளித்தனமான மனிதர்களே இல்லை. மூடத்தனமான, அவநம்பிக்கைப்படும் மக்கள்தான் இருக்கின்றனர்.

ஒரு குரு என்பவர் எப்போதும் சந்தேகிக்கப்படுபவர். ஆகவே, வேறு எவரைக் காட்டிலும், இயற்கையாகவே அவரைப் பற்றிய சந்தேகங்கள்தான் அதிகமாக இருக்கிறது. துரதிருஷ்டவசமாக அதுதான் உண்மை. அதனால்தான் மிகவும் அருகாமையில் உள்ள வாய்ப்பு கூட வெகுதொலைவில் உள்ளதுபோல் ஆகிவிட்டது. ஆகவே, நீங்கள் நம்பிக்கை வாய்ந்தவராக இருங்கள் என்று நான் கேட்டுக்கொள்ள மாட்டேன், ஆனால் சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஐயம் தெளிதல் என்பதில் எனக்கு உடன்பாடுதான். ஆனால் அவநம்பிக்கை என்பது ஒரு நோய். சந்தேகப்படும்போது நீங்கள் உண்மை என்ன என பார்க்க விழைவீர்கள். அவநம்பிக்கை என்றால் நீங்கள் அது குறித்து ஏற்கனவே ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறீர்கள். சந்தேகம் என்றால் உங்களுக்குத் தெரியாததை பார்க்கிறீர்கள். இடைவிடாமல் பார்ப்பது என்பது ஒரு நல்ல நிலையாக இருக்கும். வெகுளித்தனம் என்றால், நீங்கள் அவநம்பிக்கையாகவும் மேலும் இவர் என்னைவிட அதிக சாமர்த்தியமானவரோ என்று எப்போதும் வியப்புடனேயும் இருக்கிறீர்கள். இவ்வளவு அவநம்பிக்கைகளுடன் நான் இருந்தாலும், "என்னை சாதுர்யமாக பயணப்பட அழைத்துச் செல்கிறாரோ" என்ற கேள்வியுடன் இருக்கிறீர்கள். இதுபோன்ற மனிதர்கள் தங்களை வெகுளியாக நினைத்துக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் அவநம்பிக்கைப்படுபவர்கள். ஆனாலும், மற்றவர்கள் அவர்களைவிட அதிக சாதுர்யமாக இருக்கும் நிலையினால், தங்களை தந்திரமாகவே பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றார் என்று எப்போதும் மற்றவரைப் பற்றி கருத்து கொள்கிறார்கள். இப்படித்தானே இருக்கிறது?

உலகில், உண்மையில் வெகுளித்தனமான மனிதர்களே இல்லை. மூடத்தனமான, அவநம்பிக்கைப்படும் மக்கள்தான் இருக்கின்றனர். அவநம்பிக்கைப் படுவது புத்திசாலித்தனம் இல்லை. உண்மை என்னவென்றால், புத்திசாலித்தனத்தில் நீங்கள் குறைந்தவராக இருந்தால் அதிகமாக அவநம்பிக்கை கொள்வீர்கள். புத்திசாலியாக இருக்கும் எவரும், குறைந்தபட்சம் அன்றாட விஷயங்களிலாவது, தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களை நம்புகிறார். புத்திசாலித்தனத்தில் சற்றுக் குறைந்தவர்கள், அவர்களைச் சுற்றிலுமிருக்கும் அனைவர் மீதும் அவநம்பிக்கை கொள்வதை நீங்கள் கவனித்ததுண்டா? எப்போதுமே, குறைந்த புத்திக்கூர்மை உள்ளவர்கள், அதிகமாக அவநம்பிக்கை கொள்கிறார்கள். ஏனென்றால், ஒன்றிலிருந்து, மற்றதை அவர்களால் வேறுபடுத்திக் காண முடியாது. தங்களை யாராவது தவறாக உபயோகித்து விடுவார்களோ என்று எப்போதும் பயந்து கொண்டே இருக்கிறார்கள். தகுந்த காரணமில்லாமலே அவர்கள் மிகவும் அவநம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆகவே, அவர்களாகவே தங்களை வெகுளி என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் வெகுளி அல்ல, ஆனால் ஒரு கம்பளிப்புழுவினைப் போன்ற குறைந்த அறிவுடன் இருக்கிற அவநம்பிக்கைக்காரர்கள்தான் அவர்கள்.

குரு என்பவர் தன்னுடைய சீடர்களையோ அல்லது பக்தர்களையோ எப்போதும் தந்திரமாகவே வழிநடத்திச் செல்கிறார்.

இப்போது கேள்வி என்னவென்றால், நான் ஏமாற்றப்படுகிறேனா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்வேன்? நேரடியாக அதற்கு வருவோம். ஆமாம், நீங்கள் சாதுர்யமாகத்தான் அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். ஏனென்றால் அது என்ன என்பதைக் குறித்து உங்களுக்கு நான் வெளிப்படுத்தவோ அல்லது விவரிக்கவோ நீங்கள் இன்னும் தகுதி பெறவில்லை. இந்தியாவில் ஒரு குழந்தைக்கு, அது வழக்கமாகச் சாப்பிடக்கூடிய அளவைக் காட்டிலும் அதிகமாக எப்படித் திணிப்பது என்பதற்கான ஒரு முழு தொழில்நுட்பத்தையே தாய்மார்கள் அறிந்து இருக்கிறார்கள். முதலில் அதிக உணவைப் பார்த்தவுடன், இவ்வளவை சாப்பிடமாட்டேன் என்று குழந்தை அடம் பிடிக்கும். உடனே உணவைச் சரிபாதியாக்கி, ஒரு பாதி உணவை மட்டும் சாப்பிடச் சொல்லி சம்மதிக்க வைத்து ஊட்டிக் கொண்டிருக்கும் போதே, மறுபாதியையும் மெதுவாகக் கலந்து விடுவார்கள். அதற்குள் குழந்தை பாதி உணவை சாப்பிட்டிருக்கும். மறுபடியும் குழந்தை உணவு அதிகமென்று மேலும் சாப்பிட மறுக்கும். முன்பு போலவே, அதனைச் சரிபாதியாக்கி, ஒரு பாதி உணவை மட்டும் சாப்பிட சம்மதிக்க வைப்பார்கள். இப்படியே பாதியாக்கி பாதியாக்கி கடைசியில் குழந்தை தன்னை அறியாமலேயே முழு உணவையும் சாப்பிட்டு முடித்துவிடும். நிச்சயமாக தாயானவள் குழந்தையை தந்திரமான வழியில் தான் கையாள்கிறார், அப்படித்தானே?

அதேபோலத்தான், குரு என்பவரும். தன்னுடைய சீடர்களையோ அல்லது பக்தர்களையோ எப்போதும் தந்திரமாகவே வழிநடத்திச் செல்கிறார். ஏனென்றால், அவர்களுக்கு என்ன கொடுக்கப்பட இருக்கிறது என்று கூறிவிட்டால், இது சாத்தியமாகாது என்று கூறி விலகி ஓடிவிடுவார்கள். எனவே, உங்களுக்கு தவணை முறையில்தான் எல்லாம் பிடிக்கும் என்னும் காரணத்தால், நான் உங்களை சிறிது சிறிதாக தவணைமுறையிலேயே வழி நடத்திச் செல்கிறேன். ஆனால் உங்களுக்கு நிகழ வேண்டியது மட்டும் தவணைமுறையில் நிகழாது. அது முழுமையாக நிகழும் அல்லது ஒன்றுமே நடக்காது. ஆனால் உங்களுடைய விருப்பம் சிறிது சிறிதாகத்தான் வருகிறது. முதல்நாள் அறிமுக வகுப்பிற்கு வந்தபோது நீங்கள் எந்த அளவு விருப்பத்தோடு இருந்தீர்கள், இன்று எந்த அளவு விருப்பத்தோடு இருக்கிறீர்கள் என்று பார்க்க முடிகிறதா? மெதுவாக சிறிது சிறிதாக உங்களை அதைநோக்கி நகர்த்துகிறோம். இன்றைக்கு நான் பேசுவது போல அன்றைக்கே உங்களிடம் பேசியிருந்தால், என் முகத்தைக்கூடப் பாராமல் என்னைவிட்டுப் போயிருப்பீர்கள், இல்லையா? ஆகவே உங்களை நாம் சாதுர்யமாகத்தான் அழைத்துச் செல்கிறோம்.