Question: ஒரு குருவைப் பற்றி நம் மனதில் பல பிம்பங்கள் வைத்திருப்போம். அவரிடம் சில விஷயங்கள் நமக்கு பிடிக்கும், பிடிக்காமல் இருக்கும். இது ஏன் இப்படி? அவர் ஒரு மனிதர் மட்டும்தானா இல்லை அந்த அடையாளத்தையும் தாண்டியவரா?

சத்குரு:

குரு என்பவர் ஒரு மனிதர் மட்டுமல்ல. சொல்லப்போனால் அவரை ஒரு தனிமனிதராக மட்டும் பார்ப்பதுதான் உங்களுக்குள்ள தடை. ஒரு மனிதர் என்று வரும்போது அவரிடம் சில விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்கும், பிடிக்காமலிருக்கும். சில விஷயங்களை விரும்புவீர்கள், சிலவற்றை வெறுப்பீர்கள். ஆனால் பயிற்சிகளாகவும், அதைவிட மேலாக சக்திநிலையாகவும் எது உருவாக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோ, தனிமனித நிலை எல்லையையும் குறைகளையும் தாண்டி எது மலர்ந்திருக்கிறதோ, அதுதான் மிகவும் முக்கியம். அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளாத போதுதான் பதட்டம் உருவாகிறது. பயிற்சிகளையும் சரியாக செய்வதில்லை, உருவாக்கப்பட்டுள்ள சக்தி வெளியையும் பயன்படுத்திக் கொள்வதில்லை, செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனும்போது பதட்டம்தான் மிஞ்சும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மரணம் என்பது நன்மைக்கே!

இங்கே ஒரு கல்லைப் பார்த்தால் கூட சத்குரு நிற்கிறார் என்று நீங்கள் உணரத் தொடங்கினால் இந்தத் தன்மையை அடைய முடியும்.

தற்போது என்ன கிடைக்கிறதோ அதனுடன் உங்களை நீங்கள் தொடர்புபடுத்திக் கொள்கிறபோது, வாழ்வின் பல அடிப்படைத் தன்மைகள் மாற்றியமைக்கப்படும். ஈஷா யோக மையத்திற்கு வருபவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் சில நோய்களுடன் வருவதும், திரும்பிச் செல்கையில் அவர்களுக்கு அந்த நோய்கள் இல்லாமல் போவதையும் இங்கே கண்கூடாகக் காண முடிகிறது.

அவர்கள் நோய்களை நாம் வாங்கிக் கொள்கிறோம் என்று பொருளில்லை. அதற்கு நமக்கு ஆர்வமுமில்லை. நோய் என்று எதைச் சொல்கிறீர்களோ, முதுமை என்று எதைச் சொல்கிறீர்களோ, மரணம் என்று எதைச் சொல்கிறீர்களோ இவையெல்லாம் வாழ்வின் சில படிநிலைகள். அவற்றை முற்றாக நீங்கள் தவிர்த்துவிட முடியாது. ஆனால் இங்கே எங்கும் நிரம்பியிருக்கும் சக்திநிலையை சுவாசிக்கும்போது, நோய்களோ முதுமையோ வராது. பலர் இன்னும் இளமையாகிறார்கள். ஆனால் மரணமடைவது நிச்சயம். அதில் மாற்றமில்லை. அது கூட நல்லதுதான். ஏனெனில், நீங்கள் மரணமடைகிறீர்கள் என்றால் வாழ்ந்திருக்கிறீர்கள் என்று பொருள். வாழாதவர்கள் மரணமடைய முடியாது. ஏனெனில் வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு அதுதான் நிகழ்கிறது. வாழ்வின் ஒவ்வொரு விநாடியும், அச்சத்தாலோ, பதட்டத்தாலோ, பகைமையாலோ, வெறுப்பாலோ, அவர்கள் இறந்து கொண்டேயிருக்கிறார்கள். எனவே, மரணம் உடலுக்கு நேர்கிறபோது பெரிய வித்தியாசமில்லாமல் போகிறது. வாழ்வதற்கும் மரணத்துக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. எனவே மரணமடைகிறீர்கள் என்றால், வாழ்ந்திருக்கிறீர்கள் என்று பொருள்.

உங்களை நீங்களே மறைத்துக் கொள்வதில் எப்போதும் மும்முரமாக இருப்பது, இந்த இடத்தின் சக்திநிலையை நுகர்ந்து உள்நிலையில் மலர பெருந்தடையாக இருக்கிறது. நீங்கள் ஒரு தன்மையில் இருக்கிறீர்கள், ஆனால் உங்களை வேறொரு தன்மையில் வெளிப்படுத்த விரும்புகிறீர்கள். இதற்கென்று பெரிய சக்தி செலவாகிறது. ஆனால் அது வீணான வேலைதான்.

சத்குருவைக் கண்டவுடன்...

ஆசிரமத்தில் நீங்கள் இருப்பதன் நோக்கமே நடிப்பைக் கைவிட்டு விட்டு வாழ்க்கையை வாழ்வதுதான். இங்கேயே பலர் விறைப்பாக நடந்து போவீர்கள். என்னைக் கண்டு விட்டால் “சடா”ரென்று குனிவீர்கள். பக்தி என்பது நடிப்பல்ல. நீங்கள் எப்படி நடக்கிறீர்கள், எப்படி சுவாசிக்கிறீர்கள், உங்கள் இதயம் எப்படி இயங்குகிறது என்பதையெல்லாம் சேர்த்துதான் பக்தி. எப்போதும் விறைப்பாக இருந்துவிட்டு திடீரென்று ஒருவரைப் பார்த்ததும் பணிவில் குனிய முற்படுவது உங்கள் மூட்டுகளைக்கூட இடம் மாற்றி விடலாம்.

எனவே, இங்கே நீங்கள் என்ன தன்மையில் இருக்க வேண்டுமென்றால், என்னைப் பார்க்கையில் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதே தன்மையில், இங்கிருக்கும் மரங்கள், ஒற்றைப்புல், மேகம், கல், செங்கல், எதிர்ப்படும் ஆண், பெண், குழந்தை என ஜடப்பொருளிலிருந்து உயிருள்ளவை வரை எல்லாவற்றிடமும் எல்லோரிடமும் அதேபோல நடந்து கொள்ளுங்கள். இங்கே ஒரு கல்லைப் பார்த்தால் கூட சத்குரு நிற்கிறார் என்று நீங்கள் உணரத் தொடங்கினால் இந்தத் தன்மையை அடைய முடியும்.

வெளியில் நீங்கள் பயணம் செய்யும்போது யாரேனும் உங்களுக்குத் துணை வரலாம், கைகோர்த்து வரலாம், தூக்கிக் கொண்டு கூடப் போகலாம். ஆனால் உள்நிலையில் நீங்கள் பயணம் செய்ய முற்பட்டால் உங்கள் ஒருவருக்கு மட்டுமே அங்கே அனுமதி. உங்களால் என்னவெல்லாம் முடியுமோ அவற்றை நீங்கள்தான் அந்தப் பயணத்தில் செய்ய வேண்டும். உங்கள் விழிப்புணர்வில் இல்லாத சில விஷயங்கள் உங்கள் உள்நோக்கிய பயணத்தில் உண்டு. சில தடைகள் உண்டு. அவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியதை நீங்கள்தான் செய்ய வேண்டும்.

நான் சிறுநீர் கழிக்க வேண்டும்!

ஒரு ஜென் ஞானியிடம் சென்ற மனிதர் ஒருவர் “நான் ஞானோதயமடைய வேண்டும்’’ என்றார். அந்த ஞானி, “நான் சிறுநீர் கழிக்க வேண்டும்“ என்றார். வந்தவர், “அய்யா! நான் ஞானோதயம் பற்றிப் பேசுகிறேன். நான் ஞானோதயம் அடைய வேண்டும்’’ என்றார். அந்த ஞானி மறுபடியும் “நான் சிறுநீர் கழிக்க வேண்டும்’’ என்றார். உடனே அந்த மனிதர், “என்னிடம் ஏன் சொல்கிறீர்கள், செய்ய வேண்டியதுதானே” என்றார். அதற்கு அந்த ஞானி, “என்னிடம் ஏன் சொல்கிறீர்கள், செய்ய வேண்டியது தானே” என்றார்.

எனவே, நீங்களாக செய்ய வேண்டியவற்றை நீங்கள்தான் செய்ய வேண்டும். இதற்கு ஆள் வைக்க முடியாது. ஒரு தனிமனிதரை முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் மலரச் செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இங்கே இருக்கின்றன. தேவையான சக்திநிலை, சூழல், உத்வேகம் எல்லாம் இங்கே இருக்கின்றன. இங்கே இருக்கையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்... இங்கே இருப்பதுதான்.