ஒரு குரு என்பவர் யார், குரு சிஷ்ய உறவு என்பது என்ன, சத்குரு எப்படி குருவானார்? - இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சத்குரு வாயிலாகவே நாம் பதில் தெரிந்து கொள்வோம்...

சத்குரு:

குரு என்பவர் யார்?

'குரு என்றால், அவரைப் பார்த்து ஒரு மனஎழுச்சி வர வேண்டும். அவருடைய இருப்பே ஓர் உற்சாகத்தை ஊட்ட வேண்டும்' என்றெல்லாம் நினைப்பது தவறு. உங்களைக் கிளர்ச்சியூட்டி, தூண்டி, உணர்ச்சிவசப்படச் செய்வதற்கும், மூளைச் சலவை செய்வதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

பகவத் கீதையில் இருந்தோ, பைபிளில் இருந்தோ, குரானில் இருந்தோ இரண்டு பக்கங்களைப் படபடவென்று உணர்ச்சி வசப்படச் சொல்லிவிட்டாலே, அவரைக் குருவாக நினைத்துவிடுகிறார்கள்.

குரு என்பவர் உங்களை உற்சாகப்படுத்த வரவில்லை. உங்களுக்கு ஆறுதல் சொல்வதும், உங்களை தைரியப்படுத்துவதும், ஊக்குவிப்பதும் அல்ல அவர் பணி. நீங்கள் அமைத்து வைத்திருக்கும் சில எல்லைகளைத் தகர்த்து எறிவதுதான் அவர் நோக்கம். நீங்கள் சிக்கியிருக்கும் பலவற்றில் இருந்தும் உங்களை விடுவித்து சுதந்திரம் தருவதே அவர் விழைவு. கட்டுண்டு பாதுகாப்பாக இருப்பதைவிட சுதந்திரமாக ஆபத்துகளை எதிர்கொள்வதே உயர்ந்தது.

ஓர் எறும்பு போகும் பாதையில் விரலை வைத்து மறித்துப் பாருங்கள். அது நின்றுவிடாது. விரல் மீது ஏறிப்போகலாமா என்று முயற்சி செய்யும். எல்லைகளுக்குள் கட்டுப்பட்டு இருப்பது எறும்புக்குக்கூட பிடிப்பதில்லை. எந்த உயிராக இருந்தாலும், விடுதலைப் பெறுவதுதான் அதன் அடிப்படை தாகம்.

எதனுடனும் பிணைத்துக் கொண்டு திருப்தியுற உயிரால் முடிவதில்லை என்பதால்தான், எது கிடைத்தாலும் அது வேறு ஒன்றைத் தேடிக் கொண்டே இருக்கிறது. இதுவே முக்திக்கு விழையும் தன்மை. இதை விழிப்பு உணர்வோடு அணுகச் செய்வதே குருவின் வேலை.

பகவத் கீதையில் இருந்தோ, பைபிளில் இருந்தோ, குரானில் இருந்தோ இரண்டு பக்கங்களைப் படபடவென்று உணர்ச்சி வசப்படச் சொல்லிவிட்டாலே, அவரைக் குருவாக நினைத்துவிடுகிறார்கள். மத போதகர் வேறு.. குரு வேறு. படிப்பறிவு இல்லாதோர் நிரம்பி இருந்த சமூகத்தில், புனிதப் புத்தகங்களாகக் கருதப்பட்டதை யாரோ படித்து, அவர் கண்ணோட்டத்தில் அதற்கு விளக்கம் சொன்னால், வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. அந்த நிலை வெகுவாக மாறிய பிறகும், அவர்களுடைய தயவை நாடிக் காத்திருப்பது அர்த்தமற்ற செயல்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"குருவே, முக்திக்கு என்ன வழி?" என்று கேட்டான், சீடன்.

"இமயத்துக்குப் போ.. வேறு எதிலும் நாட்டம் செலுத்தாமல், பகவத் கீதாவுடன் முழு நேரமும் செலவு செய். முக்தி நிச்சயம்."

சில மாதங்கள் கழித்து சீடனைச் சந்திக்க குரு இமயத்துக்குப் போனார். சீடன் வருத்தத்துடன் வரவேற்றான்.

"குருவே, நீங்கள் சொன்னபடியே செய்தேன். ஆனால் சண்டை சச்சரவுதான் அதிகமாகிவிட்டது. இருவருக்கும் நீங்கள்தான் அறிவுரை சொல்ல வேண்டும்." என்ற சீடன் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான்.

"ஏ பகவதி, கீதா.. என் குரு வந்திருக்கிறார் பாருங்கள்."

குரு என்பவர் அறிஞர் அல்ல; தத்துவவாதி அல்ல; ஆசிரியரும் அல்ல. குரு என்பவர் குறிப்பிட்ட இலக்குக்குப் போக பாதை காட்டும் உயிருள்ள ஒரு வரைபடம். வரைபடம் இல்லாமல் இலக்கை அடைய முடியாதா? முடியும். சாகசங்களுக்குத் தயாரானவராக இருந்தால், நீங்களாக முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால், பல சமயங்களில் வழி தவறலாம். சில இடங்களில் தட்டுத் தடுமாறலாம். உலகையே வட்டம் அடித்த பின்னும் இலக்கைச் சென்று அடையாமல் போகலாம். குரு உங்களுக்கு அந்த வேலையைச் சற்று சுலபமாக்கித் தருவார்.

வேதனைகளில் இருந்து விடுபட வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடலும், மனமும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அந்தச் சூழலை உருவாக்கித் தருபவரே குரு.

சத்குரு எப்படி குருவானார்?

நான் எப்படி குருவானேன்? யார் சொன்னதையும் கேட்டு நடக்கத் தயாராக இல்லாதவன், நான். அப்படி இருக்க, என் பேச்சை யாரோ கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இல்லை. ஆனால், ஆனந்த நிலையை எட்டியபோது, என் உடலில் ஒவ்வோர் அணுவும் அந்தப் பரவசத்தில் தாங்க முடியாமல் பொங்கிப் பூரித்தபோது, என்னைச் சுற்றியுள்ள அத்தனை பேருக்கும் இது சாத்தியம் ஆயிற்றே என்பதை உணர்ந்தேன்.

ஒன்றும் இல்லாததைத் தேடும் வேட்டையில் இந்தப் பரவசத்தைத் தவறவிடுபவர்களிடம் எனக்கு நேர்ந்ததை, எனக்குக் கிடைத்ததைப் பகிர்ந்து கொள்ள விழைந்தேன். ஒரு கட்டத்தில் அந்தப் பகிர்தலில் பங்கு கொள்ளச் சேர்ந்த கூட்டம் பெருகிக் கொண்டே போனது. அதை ஒழுங்குபடுத்துவதும், முறைப்படுத்துவதும் அவசியம் ஆனது. வகுப்புகள் துவங்கின.

குருவின் செயல்...

பொதுவாக, உறவு என்பது உடல் தொடர்பானதாக இருக்கலாம். மனம் தொடர்பானதாக இருக்கலாம். அல்லது உணர்வு தொடர்பானதாக இருக்கலாம். குருவுக்கும், சிஷ்யனுக்கும் இடையில் இதையெல்லாம் தாண்டிய அக நிலையில் ஓர் உறவு பூக்கிறது. மற்றவர் தொடாத ஒரு பரிமாணத்தைத் தொடக்கூடியவர் குரு ஒருவரே.

அவர் உங்கள் அகங்காரத்துக்குத் துணை போக மாட்டார். அதைக் கூறு போட்டு அறுப்பார். அதையே உங்களுக்கு இனிக்கும்விதமாகச் செய்வார். உங்களை உறங்க விட மாட்டார். தட்டி எழுப்பிவிடுவார். யாருடன் இருந்தால் மிக வசதியாக உணர்கிறீர்களோ அவர் சரியான குரு அல்ல. யாருடைய அருகாமையில் நீங்கள் மிக அசௌகரியமாக உணர்ந்தாலும், அவரை விட்டு விலக முடியாமல் விரும்பி ஏற்கிறீர்களோ, அவர்தான் உண்மையான குரு.

சத்குருவின் வெற்றி

ஒரு குருவாக நான் 100 சதவிகிதம் வெற்றி பெற்று இருக்கிறேன். என்னை எப்படிச் சுழற்றிப் போட்டாலும், பூ விழுந்தாலும், தலை விழுந்தாலும் எனக்கு வெற்றிதான். தோட்டங்களில் வாழலாம் என்று அழைக்கிறேன். பாலைவனத்தில்தான் வாழ்வேன் என்று நீங்கள் ஒதுங்கிப் போனால், அதில் என் தோல்வி எங்கே இருக்கிறது?

ஒரு மனிதனாக இந்தச் சமூகத்துக்கு என்ன செய்ய வேண்டும்... இந்த தேசத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதையெல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறேன். எதையோ இட்டு நிரப்ப வேண்டும் என்று முனைந்து எதுவும் செய்வதில்லை.

ஒரு குருவாக என்னுடைய கனவு என்ன? என்றைக்காவது இங்கே எனக்கு வேலையில்லாமல் போக வேண்டும். அதுவே என் கனவு!

குரு பௌர்ணமி

இவ்வருடம் குரு பௌர்ணமி கொண்டாட்டங்கள் ஈஷா யோக மையத்தில் ஜூலை 9ம் தேதி நடைபெறவிருக்கிறது. வாருங்கள்... குருவின் அருளில் கரைந்திடுங்கள்