கிரஹஸ்தர்கள் எனப் பொதுவாகக் கருதப்படுபவர்கள் ஆன்மீகரீதியாக ஏதும் செயல்கள் செய்ய விரும்பினால் அதற்கு பௌர்ணமிதான் மிகவும் உகந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 'கிரஹஸ்தர்' என்றால் வீட்டுத் தலைவர், தன் வீட்டை காப்பாற்றுபவர் என்று பொருள். உண்மையில் இந்த வீடுதான் நம்மைக் காப்பாற்ற வேண்டும், ஆனால் நாம் வீட்டைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். ஒரு கூரையின் கீழ் தங்குவதற்கான வசதியாகத்தான் வீடு என்ற ஒன்றே முதலில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது அது வெறும் கூரையாக மட்டுமல்லாமல், நமக்கு மனதளவில் நம்பிக்கையும், தைரியமும் கொடுத்து அடைக்கலம் அளிக்கும் ஓர் இடமாகவும் ஆகிவிட்டது. நம்முடைய நல்வாழ்வுக்காக நாம் உருவாக்கும் அத்தனை கருவிகளையும், கல்லறைகளாக மாற்றிக் கொள்ளும் சிறப்புத் திறமை நமக்கு உண்டு. நம் வாழ்வில் நாம் செய்ய விரும்பும் சில செயல்களில் கவனம் செலுத்துவதற்கும், சில விஷயங்களை ஒரு ஒழுங்கிற்குள் கொண்டு வருவதற்கும் வீடு ஓர் அற்புதமான கருவியாக இருக்கும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இது சாத்தியப்படவில்லை. வீடுகளில் இருக்கும் கட்டுக்கோப்புகள் எப்படி ஆகிவிட்டன என்றால், இப்போது மக்கள் வீட்டைக் கட்டிக் காக்கிறவர்களாக, வீட்டைக் காப்பாற்றுபவர்களாக ஆகிவிட்டார்கள்.

எனவே கிரஹஸ்தர்கள், பொதுவாக, ஆன்மீக செயல்பாடுகளைச் செய்ய பௌர்ணமிதான் உகந்த நாளாக இருக்கும். ஏனென்றால் பௌர்ணமி அதிகம் மென்மையானது. மென்மையாக இருக்கும் எந்த ஒன்றும் மெதுவாகவும் செயல்படும் என்பது பொதுவிதி. அமாவாசை தினம் துறவிகளுக்கு உகந்தது. அதிக நேரம் இல்லாதவர்களுக்கும் வேகமாக முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இந்த தினமே பொருத்தமானது. நான் இங்கு வயதைப் பற்றிப் பேசவில்லை, அறிந்து கொள்ள வேண்டும் என்கிற தணியா பசியைப் பற்றிப் பேசுகிறேன். அறிந்து கொள்ளும் ஏக்கத்தில் எரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக நேரம் கிடையாது. ஏனென்றால் அவர்களுடைய ஏக்கம் நாளைக் காலையிலேயே கூட அவர்களை எரித்து சாம்பலாக்கிவிடக் கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு அமாவாசை இரவு பொருத்தமானது. இந்த இரவு சிவனுடன் சம்பந்தப்பட்டது. சிவன் எப்போதும் அழிவு, எரிதல், சாம்பல் இவற்றுடன் தொடர்புடையவர். சிவா என்ற வார்த்தையிலேயே சாம்பல், நெருப்பு, எரிதல், அழிவு இவையெல்லாமும் அடக்கம். ஏதுமற்ற வெறுமை நிலைக்கு மிக நெருக்கமான ஒரு விஷயம் இந்த பூமியில் நடக்கிறதென்றால் அது அமாவாசைதான். உண்மையில், அமாவாசைக்கு முந்தைய இரவுப் பொழுதுதான் மிகவும் இருளான இரவு. அதுதான் சிவராத்திரி என்று அறியப்படுகிறது. அடுத்த நாளான அமாவாசை அன்றும் அந்த அடர்ந்த இருள் தொடர்கிறது. அன்றைய இரவு நிலவு மீண்டும் வெளிப்படத் துவங்குகிறது.

உங்களுடைய குப்பைகளுக்குள் நீங்கள் மூழ்கிவிடாதீர்கள் என்று எடுத்துக் கூறவே நாம் படைப்பின் தன்மையைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிக்கிறோம். நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணி படைத்தவன் படைத்தானோ அப்படி இருங்கள். அப்படியானால் பூமியில் இருக்கும் மற்ற உயிரினங்களைப் போலவே நானும் இருக்க வேண்டுமா? பசித்தபோது சாப்பிட்டு, தோன்றும்போது தோன்றியவற்றைச் செய்து கொண்டிருக்க வேண்டுமா?... அப்படி நீங்கள் இருக்க வேண்டும் என்று அந்த படைத்தவன் நினைத்திருந்தால், உங்களை ஒரு கரடியாகவே படைத்திருப்பாரே! நீங்களும், உணவைப் பார்த்தால் சாப்பிடுவது, பருவ காலத்தில் இனப்பெருக்கம் செய்வது, பின்பு இறந்துவிடுவது என்று இருந்திருப்பீர்கள். நான் உதாரணமாகக் கரடியை சொன்னதால், அதை ஒரு கீழான பிராணி என்று எண்ணி விடாதீர்கள். அது மிகவும் புத்திசாலி. கடந்த சில நாட்களாக இங்கு அதைப் பார்த்துவிட்டு மிகுந்த ஆச்சரியத்தில் இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னால், தங்குமிடத்தின் முன் தாழ்வாரத்தில் ஒரு பூச்செடியைக் கொண்டு வந்து வைத்தார்கள். அந்தச் செடி பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது, ஆனால் அது நிழலில் வைக்கப்பட்டிருந்தது. ஒரு செடி நிழலில் இருந்தால், அதன் பூவின் மணம் அத்தனை அதிகமாக இருக்காது. இருந்தாலும், இங்கு டென்னிசியில் இருக்கும் கரடிக்கு சாயங்காலம் கொறிப்பதற்கு பலகாரம் எங்கிருக்கிறது என்று தெரிந்துவிட்டது. அந்தச் செடியைத் தேடி வந்து, அதை பிய்த்து வீசி, சாப்பிட்டுவிட்டு சென்றுவிட்டது. இரவு உணவுக்கு அது எங்கே சென்றது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இங்கு ஒரு சிறிய செடியைக் கொண்டு வைத்தவுடன், எங்கோ இருந்தாலும், தன் உணவு எங்கிருக்கிறது என்பதை அது தெரிந்து கொண்டுவிட்டது.

இதை நான் சொல்வதற்குக் காரணம், பிழைப்பு என்று வரும்போது, அந்தக் கரடிக்கு இருக்கும் ஒரு திட்ட அமைப்பு உங்களுக்கு இருப்பதில்லை. இன்றைய இரவு உணவு எங்கே பரிமாறப்படுகிறது என்று சொல்லாவிட்டால், அதைத் தேடி நீங்கள் அலைந்து கொண்டே இருப்பீர்கள். உணவு எங்கே வழங்கப்படுகிறது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இதுவே நீங்கள் ஒரு கரடியாக இருந்தால், எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நாம் எங்கு வேண்டுமானாலும் உணவு பரிமாறலாம். ஏனெனில் உணவு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்திருப்பீர்கள். இதை நாம் கரடிக்கு அவமரியாதையாகச் சொல்லவில்லை, இதற்குப் பின்னால் இருக்கும் அதன் புத்திசாலித்தனத்தைப் பாராட்டியே இதைச் சொல்கிறேன். தினசரி உங்களுடைய பிழைப்புக்காகக் கவலைப்பட்டு, போராட வேண்டாம் என்பதற்குத்தான் ஒரு குடும்பஸ்தராக இருக்க முடிவெடுத்தீர்கள். அதை நீங்கள் பெரிதாகப் புகழ்ந்து, சொர்க்கம் என்றே முடிவு கட்டிவிடலாம், அது உங்கள் பிரச்சனை. ஆனால் அடிப்படையில் உங்களுடைய பொருட்தன்மை சார்ந்த தேவைகளை நாகரீகமான முறையில் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான் வீடு என்னும் அமைப்பு இருக்கிறது. அது சரி, தவறு என்று நான் கருத்து சொல்லவில்லை, எதற்காக அது உருவாக்கப்பட்டது என்றுதான் சொல்கிறேன். மனித வாழ்வில் அதுவும் ஒரு முக்கிய பகுதி என்பதால், அது நல்லதுதான்.

எனவே பொருட்தன்மை சார்ந்த விஷயங்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் இந்தக் 'கரடித்துவம்' தவறானதா? இல்லை. பொருட்தன்மை என்பது எல்லைகளைக் கடந்து செல்ல உதவும் ஒரு படியாக இருந்தால் அது அற்புதம்தான். பொருட்தன்மையில் எந்தத் தவறும் இல்லை. தினசரி நிகழும் சிறு, சிறு விஷயங்களுக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்கிற ஒரு சாத்தியத்தை உங்கள் வீடு உருவாக்குகிறது என்றால், அங்கிருந்து கொண்டே விரும்பியதைத் தேடுவதற்கு உங்களுக்கு அது இடமளிக்கிறது என்றால் அது அற்புதமானது. ஆசிரமம் என்பதும் எப்போதும் அப்படித்தான் இருக்கவேண்டும். இந்த ஆசிரமத்தை உருவாக்குவதில் பங்கு கொண்டிருக்கும் அனைவருக்கும், ஒரு உயர்ந்த நிலையை அடையக்கூடிய சாத்தியத்தை வழங்கும் கருவியாக மட்டுமே இது இருக்கிறது. வசதியான தங்குமிடமாகவோ அல்லது தனிப்பட்ட எந்த ஒரு நோக்கத்துடனோ இந்த ஆசிரமம் அமைக்கப்படவில்லை. இது ஒரு கருவி மட்டும்தான்.

Love & Grace

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.