ஈஷா ருசி

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி அவர்கள் ஒருநாள் மாலை வாக்கிங் முடித்து தன் சினேகிதி வீட்டுக்குப் போனபோது ஒரு சத்தான மற்றும் சுவையான உணவை சாப்பிட்டிருக்கிறார். தன் அனுபவத்தை அவரே கூறுகிறார், கேளுங்கள்.

நிர்மலா பெரியசாமி - டிவி செய்தி வாசிப்பாளர்:

"என் சினேகிதியின் மருமகள் அருமையாகச் சமைப்பாள். ஒருநாள் மாலை வாக்கிங் முடித்து அவர்கள் வீட்டுக்குப் போனபோது, "க்ரீன் தோசை போட்டு தரவா ஆன்ட்டி?" என்றாள். அது "என்னம்மா க்ரீன் தோசை?" என்று கேட்டேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"முளை கட்டிய பச்சைப் பயறு தோசை" என்றாள்.

"ஐயையே, பச்சை வாசனையோடு அது எப்படி இருக்கும்?" என்றேன். "சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்கள் ஆன்ட்டி" என்று என்¢எதிரிலேயே செய்து தட்டில் வைத்தாள். சாப்பிட்டால் அவ்வளவு ருசி! அவள் செய்தது மிகவும் சத்தான உணவு. நாமும் செய்யலாம் வாருங்கள்.

முளை கட்டிய பயறு தோசை

தேவையான பொருட்கள்:

முளை கட்டிய பச்சைப் பயிறு - கால் கிலோ (இப்போது டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கிறது. வாங்கி எளிதாக செய்து விடலாம்.)
தேங்காய் - சிறிது
மிளகாய் - இரண்டு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • கடைகளில் விற்கும் முளைகட்டிய பயறு பாக்கெட்டிற்கு ஐந்து தோசை வரை வருகிறது. இருவர் சாப்பிடலாம். வீட்டிலேயே தயாரித்தால் நிறைய கிடைக்கும்.
  • பச்சைப் பயறை ஓரிரவு ஊறவைத்து மறுநாள் ஒரு மெல்லிய துணியில் கட்டி தொங்க விட வேண்டியதுதான். ஒரே நாளில் அழகாக முளைகட்டிவிடும்.
  • தோசை ஊற்றும் முன் லேசாக அலம்பி விட்டு மிளகாய், சிறிது தேங்காய், உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அப்படியே மெல்லிய தோசையாக ஊற்ற வேண்டியதுதான். மாவு, இட்லி மாவு பதத்தில் இருக்கலாம்.
  • நீர்க்க இருக்க வேண்டியதில்லை.
  • மெல்லிய கேஸ் ஸ்டவ்வில் சன்னமாக ஊற்றவும்.
  • தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியே சுவையாக இருக்கும். இருந்தாலும் இதற்கு மற்றொரு சத்தான 'சைட் டிஷ்' தயாரிக்கலாம்.

பழப்பச்சடி

1051-inside

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - ஒன்று
ஆப்பிள் - ஒன்று
தயிர் - ஒரு கப்
பால் - சிறிது
சர்க்கரை - நான்கு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

  • புளிக்காத கெட்டித் தயிரில் உப்பு, சர்க்கரை போட்டு பழங்களை மெல்லியதாக நறுக்கிப் போடுங்கள். உங்களுக்குப் பிடித்தமான பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • எல்லாவற்றையும் கலக்கி சிறிதே பால்விட்டு லேசாக நீர்க்கச் செய்து கொள்ளவும்.
  • சர்க்கரை விரும்பாதவர்கள் தேன், வெல்லம் என சேர்த்துக் கொள்ளலாம்.
  • சுடச்சுட தோசையில் இதனை ஊற்றிச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
  • இந்த உணவின் சத்துக்களைப் பற்றி நிறையவே சொல்லலாம்.
  • எந்தப் பயறையும் முளைகட்டும்போது அதிலுள்ள வைட்டமின்களின் சத்து ஆயிரம் மடங்கு அதிகரிக்கிறது.
  • வாரம் இரண்டு மூன்று முறை சாப்பிட உடலுக்கும், வயிற்றிற்கும் மிகவும் நல்லது. நார்ச்சத்து நிறைந்த உணவு. அதே போல பழப்பச்சடியின் சத்து பற்றியும் நீங்கள் அறிந்ததே.
  • இந்த உணவின் மற்றொரு சிறப்பு இதனை உடனே செய்துவிடலாம். ஊற வைக்க, வேக வைக்க அவசியம் இல்லை.